இராகவன் கருப்பையா- கடந்த வாரம் தமது 98ஆவது வயதில் மறைந்த அன்னை மங்களம் மனுக்குலத்திற்கு ஆற்றிய தன்னலமற்ற சேவைகளின் அடிப்படையில் மலேசியாவின் அன்னை தெரேசா என்று அழைக்கப்பட்ட போதிலும் அவ்விருவரின் தொடக்க கால வாழக்கையும் ஏறத்தாழ ஒரே மாதிரி இருந்தது வியக்கத்தக்க ஒன்றுதான்.
கடந்த 1926ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பிறந்த அன்னை மங்களம் தமது 22ஆவது வயதில் யாருடைய ஆதரவும் இல்லாமல் தனியாகவே மலேசியாவிற்கு குடிபெயர்ந்தார்.
அதே போல 1910ஆம் ஆண்டில் மசிடோனியாவில் பிறந்த அன்னை தெரேசா தமது 19ஆவது வயதில் யாருடைய துணையும் இல்லாமல் இந்தியாவின் கல்கத்தா நகருக்கு தனியாகவே வந்தார்.
இவ்விருவரும் தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது சந்தித்துக் கொண்டார்களா என்று தெரியவில்லை. ஆனால் இளவயதிலேயே இவ்விருவரின் குறிக்கோல்களும் ஒரே மாதிரியாகத்தான் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருப்பின போராட்டவாதியான தென்னாப்பிரிக்காவின் முன்னால் அதிபர் நெல்சன் மண்டேலாவை போல அன்னை மங்களமும் அன்னை தெரேசாவும் கூட இறைவனால் படைக்கப்பட்ட தனிப்பிறவிகள் என்றால் அது மிகையில்லை.
தமது வாழ்நாளில் கிட்டதட்ட 27 ஆண்டுகளை சிறையில் கழித்த மண்டேலா அந்நாட்டின் கருப்பினத்தவரின் விடியலுக்கு வித்திட்டார். உலகின் அனைத்து கருப்பினத்தவராலும் கடவுளாக போற்றப்பட்ட அவர் கடந்த 2013ஆம் ஆண்டில் தமது 95ஆவது வயதில் காலமானார்.
தமது ஆரம்பக் கல்வியையும் இடைநிலை பள்ளிப்படிப்பையும் சிங்கப்பூரில் முடித்த அன்னை மங்களம் கோலாலம்பூர் வந்தவுடன் ஆசிரியர் பயிற்சியை மேற்கொண்டார்.
அப்பயிற்சியில் சிறப்பு தேர்வு பெற்ற அவர் நலைநகர் பங்சார் தமிழ் பள்ளியில் ஆசிரியையாக பொருப்பேற்றார். இருந்த போதிலும் அவருடைய எண்ணமெல்லாம் ஆதரவற்றக் குழந்தைகளுக்கு அடைக்கலம் வழங்குவதில்தான் இருந்தது.
எனவே தமது வழிகாட்டியான சுவாமி சத்தியானந்தாவுடன் சேர்ந்து அதற்கு அடுத்த ஆண்டே ‘சுத்த சமாஜம்’ எனும் ஆதரவற்றோர் இல்லத்தை தோற்றுவித்தார். இதுவரையில் அந்த இல்லம் சுமார் 2000 பேருக்கு வாழ்வில் வெளிச்சம் காட்டியுள்ளதாக நம்பப்படுகிறது.
அதே போல கல்கத்தாவின் குடிசை பகுதிகளில் அன்றாட வாழ்க்கை போராட்டத்தில் துவண்டு கிடந்த ஏழை மக்களின் துன்பங்கள் அன்னை தெரேசாவின் நெஞ்சை பிழியவே அவர்களுடைய நலனுக்காகவே தமது சொந்த வாழ்க்கையை அர்பணிக்க முடிவு செய்தார்.
நோபல் பரிசு உள்பட சர்வதேச அளவில் பல நிலைகளில் கௌரவிக்கப்பட் அவர் கடந்த 1997ஆம் ஆண்டில் தமது 87ஆவது வயதில் கல்கத்தாவில் காலமானார்.
கடந்த 1934ஆம் ஆண்டில் அன்னை தெரசாவின் குடும்பத்தினர் மசிடோனியாவில் இருந்து வெளியேறி அல்பேனிய தலைநகரான திரானாவில் குடியேறினார்கள். ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்னதாக, அதாவது 1929ஆம் ஆண்டிலேயே அன்னை தெரசா இந்தியா சென்றுவிட்டார்.
இருந்த போதிலும் திரானா நகர மத்தியில் அவருடைய பெயரில் ஒரு சதுக்கமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சதுக்கம் அந்நாட்டின் 2ஆவது பெரிய சதுக்கமாகும். அன்னை தெரசாவை அந்நாட்டின் முக்கியமானதொரு தேசியச் சின்னமாகவே அவர்கள் கருதுகின்றனர்.
அதே வேளையில் மசிடோனிய தலைநகரான ‘ஸ்கோப்ஜே’யில் அன்னை தெரசா பிறந்த வீட்டை மறுசீரமைபுச் செய்து நினைவுச் சின்னமாக வைத்திருக்கிறார்கள். அவருடைய ராட்சத சிலை ஒன்றையும் அவ்வீட்டிற்கு வெளியே அமைத்திருக்கிறார்கள்.
ஆக அன்னை தெரேசாவை போல அன்னை மங்களமும் நிறைவாக போற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தேசிய நிலையில் அவருக்கு பல விருதுகள் வழங்கப்பட போதிலும் குறைந்த பட்சம் சுத்த சமாஜ கட்டிட வளாகத்தில் அவருக்கு ஒரு உருவச்சிலை ஒன்று எழுப்பப்பட்டால் சிறப்பாக இருக்கும்.
தியாக உணர்வு மக்களின் மனதில் தோன்றவும் தட்டி எழுப்பவும் அப்படிப்ட்ட உருவச்சிலைகள் நினைவூட்டும் சின்னங்களாக அமையும்.
அதன் புதிய தலைவரான, சமூக ஆர்வளரும் பிரபல வழக்கறிஞருமான அம்பிகா இந்த யோசனை குறித்து பரிசீலிக்க வேண்டும்.