பொதுதேர்தல் காலங்களில் மட்டும்தான் இந்திய சமூகம் கண்ணில் படுமா?

இராகவன் கருப்பையா – ஏறத்தாழ 61 ஆண்டுகளாக தேசிய முன்னணி ஆட்சி செய்த காலம் மட்டுமின்றி பக்காத்தான் ஹராப்பானின் 22 மாத கால ஆட்சியிலும் தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தின் கீழும் கூட இந்திய சமூகத்தின்  பெரும் பகுதியினர் கேட்பாறற்றுதான் கிடக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

‘இந்திய சமூகம் நீண்ட நாள்களாக கவனிக்கப்படாமல் உள்ளதை ஒப்புக் கொள்கிறோம்’, ‘அந்நிலையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படும்,’ ‘அச்சமூகத்தினரும் மற்றவர்களுக்கு இணையாக சமமாக நடத்தப்படுவர்,’ என்றெல்லாம் தேர்தல் காலங்களில் முழக்கமிடும் அரசியல்வாதிகள் தேர்தலுக்குப் பிறகு ‘மவுன சாமியார்’களாகிவிடும் சம்பவங்கள் எல்லாம் நமக்கு புளித்து போன ஒன்றுதான்.

ஆறு மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள சூழலில் இதே நிலை தற்போது மீண்டும் திரும்பியுள்ளதை நம்மால் மிகத் தெளிவாக உணர முடிகிறது. பல்வேறு அரசியல்வாதிகளின் கவனத்தை நம் சமூகம் மீண்டும் ஈர்த்துள்ளது நாம் எதிர்பார்த்த ஒன்றுதான். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

நம் நாட்டின் வரலாற்றில் பொதுத் தேர்தலுக்கு வெளியே ஆறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் தனியாக நடைபெறுவது இதுவே முதல் தடவை. எனவே இயல்பாகவே கிட்டதட்ட பொதுத் தேர்தலுக்குரிய பரபரப்பை இத்தேர்தல் கொண்டுள்ளது என்றால் அது மிகையில்லை.

அது மட்டுமின்றி தீவிர மதவாத, இனவாதக் கூறுகளை முன்னிறுத்தி பாஸ் கட்சியும் பெர்சத்துவும் வலுவாக முன்னோக்கிச் செல்வது அந்த பரபரப்புக்கான மற்றொரு காரணமாகும்.

ம.இ.கா. இத்தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்துள்ள போதிலும் ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள பி.கே.ஆர். சார்பிலும் ஜ.செ.க.வை பிரதிநிதித்தும் பல இந்திய வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர்.

எனினும் வரலாற்றில் முதல் முறையாக எதிர்கட்சிக் கூட்டணியில் இந்திய கட்சிகள் ஒன்றுமே இல்லை. பாஸ் கட்சியிலும் பெர்சத்துவிலும் ‘இந்திய பிரிவு’ என ஒன்றை அவர்கள் ஏற்படுத்தி வைத்துள்ள போதிலும் அது வெறும் ‘ஒப்புக்கு சப்பாணி’யைப் போல்தான். அக்கூட்டணியில் சீன ஆதிக்கமுடைய பல்லினக் கட்சியான கெராக்கான அங்கம் வகிக்கும் போதிலும் அதன் தற்போதைய நிலை ‘பல்லில்லா புலி’தான் என்பதும் எல்லாருக்கும் தெரியும்.

இந்த சட்டமன்றத் தேர்தல்களில் இந்தியர்களின் வாக்குகளை சுலபத்தில் பெற்றுவிடலாம் என ஒற்றுமை அரசாங்கம் முழு நம்பிக்கையுடன் உள்ள போதிலும் அண்மைய காலமாக இந்திய சமூகத்திடையே நிலவும் அதிருப்தியையும் அவர்கள் உணராமல் இல்லை.

அதனாலோ என்னவோ பிரதமர் அன்வார் இப்ராஹிம் சில மாநிலங்களுக்கு சூறாவளிப் பயணம் மேற்கொண்டு இந்தியர்களை பிரத்தியேகமாக சந்தித்து வருகிறார். இது எந்த அளவுக்கு ஒற்றுமை அரசாங்கத்திற்கு சாதகமாக அமையும் என்று தெரியவில்லை.

அதே வேளையில் எதிர்கட்சியினருக்கும் தற்போது இந்தியர்கள் மீது திடீரென அளவு கடந்த ‘அன்பு” பிறந்துள்ளதை நம்மால் காணமுடிகிறது. முன்னாள் பிரதமர் மகாதீர் அக்கூட்டணிக்குப் பின்னால் இருந்து கொண்டு மலாய்க்காரர் அல்லாதாருக்கு எதிராக தொடர்ந்து விஷமத்தனமான கருத்துகளை உமிழ்ந்து வருகிற போதிலும் மற்ற பல தலைவர்கள் நம் சமூகம் மீது ‘பாச மழை’ பொழியத் தொடங்கிவிட்டனர்.

மலாய்க்காரர் அல்லாதாரை பல வகையிலும் தரம்தாழ்த்தி பேசிவரும் பாஸ் கட்சியையச் சேர்ந்த சில தலைவர்களும் நம் சமூகத்திற்காக தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

இவ்வளவு நாள்களாக மலாய்க்காரர்களின் நலனைப் பற்றி மட்டுமே பேசி வந்த எதிர்கட்சிக் கூட்டணியின் தலைவர் முஹிடின் கடந்த வாரம் தனது கவனத்தை நம் சமூகத்தின் மீது திருப்பியது வியப்புதான். ‘மலேசியர்கள் எனும் பொதுவானப் பார்வையில் இந்திய சமூகம் ஓரங்கட்டப்படுகின்றது’ என்று கருத்துரைத்த அவர், ‘எதிரணியில் இந்தியர்களுக்கு தனிக்கட்சி அவசியம்’ என்று குறிப்பிட்டார்.

மெட்ரிக்குலேஷன் கல்லூரிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள 206 இந்திய மாணவர்களுக்கு யூனிசெல் பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு பெற்றுத்தர தாம் தயாராய் இருப்பதாக பெர்சத்து கட்சியின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் அஸ்மின் அலி அதிரடியாக ஒரு அறிவிப்பை செய்துள்ளார்.

கல்வியில் அனைத்து இனத்தவர்களுக்கும் சரி சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நீண்ட நாள்களாக சிலாங்கூர் மந்திரி பெசாராக இருந்த சமயத்திலும் பக்காத்தான் ஆட்சியின் போது சக்திமிக்க பொருளாதார அமைச்சராக இருந்த போதும் பிறகு பெரிக்காதான் ஆட்சியில் மூத்த அமைச்சராக அனைத்துலக தொழில்துறை அமைச்சை வழிநடத்திய வேளையிலும் இப்படி அவர் பேசியதே கிடையாது. இந்திய மாணவர்கள் மெட்ரிக்குலேஷன் வகுப்புகளில் இடம் கிடைக்காமல் காலங்காலமாக அவதிபட்டதெல்லாம் இவருக்கு தெரியாதா என்ன?

அஸ்மினின் கருத்துக்கு ஜால்ரா போடுவதைப் போல் பேசியுள்ளார் அக்கட்சியின் தலைமைச் செயலாளர் ஹம்ஸா ஸைனுடின். போதுமான தகுதி இருந்தும் 206 இந்திய மாணவர்களுக்கு இடம் கிடைக்காதது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என திடீரென்று நம் சமூகத்திற்காக அவர் பரிதாபப்பட்டுள்ளார்.

இந்திய சமூகம் நீண்ட நாள்களாக இந்நாட்டில் அனுபவித்துவரும் துன்பங்கள், துயரங்கள், அழுத்தங்கள் மற்றும் ஏமாற்றங்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என சில தினங்களுக்கு முன் அவர் நீலிக்கண்ணீர் வடித்துள்ளார். இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் சிறப்பு பணிக்குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசியல்வாதிகளின் இது போன்ற பேச்சுகளைக் கேட்டுக் கேட்டு நமக்கும் அளுத்துப்போய்விட்டது. இதுவெல்லாம் நமக்கு புதிதான ஒன்றா என்ன?

எனவே கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு, இவர்களுடைய இனிப்பு வார்த்தைகளுக்கு மயங்கி நம் எண்ணங்களில் சிறிதளவும் அவற்றுக்கு இடமளிக்காமல், விவேகமாக முடிவெடுத்து வாக்களிப்பது அவசியமாகும்.