இராகவன் கருப்பையா – எதிர்வரும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை முற்றாக புறக்கணித்துள்ள போதிலும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப்போவதாக ம.இ.கா. அறிவித்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்று.
பிரதமர் அன்வாரை தக்க சமயத்தில் தனது தலைமையகத்திற்கு அழைத்து ம.இ.கா. இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளது பாராட்டப்பட வேண்டிய விஷயம். இல்லையெனில் இந்நாட்டின் முன்கள அரசியலில் இருந்து அக்கட்சி மேலும் பின்னால் தள்ளப்பட்டுவிடும்.
அம்னோ தங்களை மரியாதையோடு நடத்தவில்லை என்பதே அன்வாரிடம் அக்கட்சியினர் முன் வைத்த பிரதான புகாராகும். இருந்த போதிலும் அது ஒரு சிறிய சிணுங்கல்தானே ஒழிய நிரந்தர பகையில்லை என்பதை ம.இ.கா.வின் போக்கு உணர்த்தியுள்ளது.
இருப்பினும் அக்கட்சியினரை பிரதமர் முழுமையாக நம்பிவிடுவார் என்று உறுதியாக சொல்ல முடியாது. ஏனெனில் கோலாலம்பூரில் மாலை மரியாதையுடன் அவரை அமர்க்களப்படுத்தி நட்புறவை பறைசாற்றிய போதிலும் ஜொகூர், செகாமாட்டில் அவரை கீழறுப்பு செய்வதைப் போல் உள்ளது ம.இ.கா.வின் போக்கு. இது அன்வாருக்கும் நன்றாகவே தெரியும்.
அன்வாரின் நம்பிக்கைகுரிய இளம் தளபதிகளில் ஒருவரான யுனேஸ்வரனை செகாமாட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என ம.இ.கா.வின் தலைமை பொருளாளர் இராமசாமி ஒற்றைக்காலில் நிற்பது அன்வாருக்குத் தெரியாதா என்ன!
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலில் யுனேஸ்வரன் 5,669 வாக்குகள் பெரும்பான்மையில் இராமசாமியை மண்ணைக்கவ்வ செய்தார்.
அந்த தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத இராமசாமி, தேர்தல் விதிகளை யுனேஸ்வரன் மீறிவிட்டார் என புகாரளித்து வழக்குத் தொடுத்துள்ளார். பிரச்சாரத்தின் போது வாக்காளர்களுக்கு யுனேஸ்வரன் ‘நாசி லெமாக்’ உணவை வழங்கிவிட்டார் என்பதே அவருடைய குற்றச்சாட்டு.
கடந்த ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நீதிமன்றம் இராமசாமிக்கு எதிராக தீர்ப்பளித்து யுனேஸ்வரனுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் இராமசாமி விட்டபாடில்லை. விடாகண்டன் கொடாகண்டனாக கூட்டரசு நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்துள்ளார்.
அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டாலும் அங்கு இடைத் தேர்தல்தான் அறிவிக்கப்படுமே தவிர நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அவருக்கு வழங்கப்படாது.
அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் ஆண்டாண்டு காலமாக நம் இனத்தின் வசம் இருந்துவரும் அத்தொகுதி கை நழுவக்கூடிய வாய்ப்பு அதிகமாகவே உள்ளது என்பதை நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மிகத் தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது.
அதோடு அன்வாரின் பி.கே.ஆர். கட்சி மட்டுமின்றி ஆளும் ஒற்றுமை அரசாங்கத்திற்கே அது பாதகத்தை ஏற்படுத்தக் கூடும்.
எனினும் இராமசாமியின் போக்கானது, ‘மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகள் தாலியறுத்தால் போதும்’ எனும் உவமைக்கு உயிரூட்டுவதைப் போல் உள்ளது.
இதனால் செகாமாட்டில் உள்ள இந்திய வாக்காளர்கள் மட்டுமின்றி நாடு தழுவிய நிலையில் உள்ள பி.கே.ஆர். கட்சியின் ஆதரவாளர்கள் ம.இ.கா. மீது கடும் கோபத்தில் உள்ளதாகத் தெரிகிறது.
இப்படிப்பட்ட சூழலில் அன்வாருடன் உறவுக்கொண்டாட எத்தனித்துள்ள ம.இ.கா.வின் நேர்மை மீது பி.கே.ஆர். கட்சியினர் ஐயப்பாடு கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை.