வாக்கு கேட்கும் அரசியல்வாதிகள், மக்களுடன் செயல் பட வேண்டும்

இராகவன் கருப்பையா – பொதுவாகவே நம் நாட்டு அரசியல்வாதிகளில் பெரும்பாலோரை தேர்தல் சமயங்களில் மட்டும்தான் களத்தில் காண முடியும். அவர்கள் ‘யாங் பெர்ஹொர்மாட்'(மாண்புமிகு) ஆனவுடன் அவர்களைக் காண்பது குதிரைக் கொம்பாகிவிடும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, சட்டமன்றத்திற்கு தேர்வு பெற்றிருந்தாலும் சரி, தேர்தல் பிரச்சாரங்களின் போது மட்டுமே அவர்களுடன் நாம் தாராளமாக பேசலாம், கைக்குலுக்கலாம், தம்படம் எடுத்துக் கொள்ளலாம்.
இதர வேளைகளில் அவர்களைக் காண்பது அரிதாகிவிடுகிறது. சந்திப்புறுதியை ஏற்படுத்துவதற்கு தொலைபேசியில் தொடர்பு கொள்வது கூட பெரும் போராட்டமாகத்தான் இருக்கும்.  கை பேசியை எடுத்து பதிலுரைக்கமாட்டார்கள். தேர்தல் பிரச்சாரங்களின் போது நம்பிக்கையூட்டும் வகையில் நம்மிடம் அவர்கள் வழங்கும் தொலைபேசி எண் வெறும் அரசியல் நாடகமாகத்தான் போய்விடும்.
புலனத்தில் தகவல் அனுப்பினாலும் பதில் வராது. வாக்களித்த வெகுசன மக்களுடன் தொடர்பில் இருப்பது அவர்களுக்கு கௌரவக் குறைச்சலோ என்னவோ தெரியவில்லை.
நாம் அனுப்பியுள்ள தகவல்களை அவர்கள் படித்துவிட்டார்களா என்று கூட நமக்குத் தெரியாது. ஏனெனில் புலனத்தில் அதனக் காட்டும் நீல வண்ணத்திலான குறியை அவர்கள் முடக்கிவிடுவார்கள். இப்படி செய்வதுதான் அரசியல்வாதிகளுக்கு அழகு, கௌரவம், என்று நினைப்பார்கள் போல் தெரிகிறது.
அப்படியே எதேச்சையாக தொடர்பில் வந்துவிட்டால், “பிரச்சினையில்லை, என் செயலாளரை அழைத்து சந்திப்புறுதியை ஏற்படுத்துங்கள்,” என்று கூறி நம் நம்பிக்கைக்கு புத்துயிரூட்டுவார்கள்.
இதில்  வேடிக்கை என்னவென்றால் அந்த செயலாளர், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியைவிட படு ‘பிஸி’யாக இருப்பார். அவரும் சாமான்யமாக தொடர்பில் வந்துவிடமாட்டார். அப்படியே தொடர்பு கிடைத்தாலும் அவர் காட்டும் பந்தா அரசியல்வாதியைவிட பன்மடங்கு அதிகமாக இருக்கும்.
இப்படிப்பட்ட அசௌகரியங்களுக்கு இலக்காகும் பலர் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் பல வேளைகளில் தங்களுடைய முயற்சிகளைக் கைவிட்டு, இதுதான் விதி என்றெண்ணி மவுனமாக இருந்துவிடுகின்றனர்.
அரசியல்வாதிகளின் பதவிகாலம் 5 ஆண்டுகளுக்குக் கூட நிலையாக இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது என்பதற்கு 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு நம் நாட்டில் நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்கள் நன்றாகவே நமக்கு புலப்படுத்தியுள்ளன.
இச்சூழலில் அவர்களுடைய செயலாளர்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. இதனை அவர்கள் நன்றாக உணர வேண்டுமே தவிர வாழ்நாள் பதவி கிடைத்துவிட்டதைப் போல அதி மேதாவி வேஷம் போடக்கூடாது, வாக்களித்த மக்களை உதாசினப்படுத்தக் கூடாது.
அது மட்டுமின்றி மக்களின் வரிப் பணத்தைதான் சம்பளமாகப் பெறுகின்றனர் என்பதையும் அவர்கள் மறந்துவிடக் கூடாது. அவர்களுடைய வேலையே மக்களுக்கு சேவையாற்றுவதுதான் என்பதும் அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
நம் நாட்டில் உள்ள எல்லா அரசியல்வாதிகளும் இப்படிப்பட்ட போக்கைக் கொண்டுள்ளனர் என்று சொல்வதற்கில்லை. குறிப்பிட்ட சிலர் தங்களுடைய கடப்பாட்டை நன்கு அறிந்து மக்களுடன் தொடர்பில் இருக்கின்றனர், அவர்களுக்கு சேவையாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.