மலைப்பாம்பும் அதன் குணமும்? – கி. சீலதாஸ்

நமக்குப் புராணங்கள், வீர காவியங்கள், பழக்க வழக்க கோட்பாட்டுத் துணுக்குகள், கிராமியப் பாடல்கள், வனத் தெய்வங்களைப் பற்றிய கதைகள் பழக்கமானவை. விக்கிரமாதித்தன் கதைகள், ஈசாப் கதைகள் யாவும் நமக்கு அறியாதவை அல்ல. வன விலங்குகளை மையமாக வைத்துப் படைக்கப்பட்ட காவியங்கள் ஏராளம். அவை நம்மைக் கவராமல் இல்லை. இவையாவும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுத்து வடிவம் பெற்றிராத காலத்திலிருந்து இயங்கிய மொழி வரலாறு. ஒரு மொழியின் சிறப்பு அது கொண்டிருக்கும் வளமான இலக்கியங்களைப் பொருத்திருக்கும் என்பதுதான் உண்மை. இந்தக் காவியங்கள், துணுக்குகள் யாவும் வாய்மொழியின் வழி தங்களின் ஆயுளை உறுதிப்படுத்தியதோடு இயந்திர அச்சு வழக்கிற்கு வந்ததும் அவை நிரந்தரமாகப் பதிக்கச் செய்யப்பட்டுவிட்டன.

இந்தக் காவியங்கள் ஒரு மொழியில் மட்டும் காணப்படுவதாகக் கருதக்கூடாது. பல பழம்பெரும் மொழிகளில் இலக்கியங்கள் உள்ளன. இன்றளவும் அவை நம் சிந்தையைக் கிளர்ந்தெழச் செய்வது இயல்பு. அப்படிப்பட்ட காவியங்களில் பகரப்படும் சம்பவங்களைக் கேலி செய்வதும், இக்காலத்து விஞ்ஞானம் தரும் விளக்கங்களுடன், அறிவுடன், விஞ்ஞானக் கண்களுடன் பார்த்து அணுகினால் சான்றுகள் கிடையாது என்று ஒதுக்குவது சர்வசாதாரணமாகிவிட்டது. இதை முதிர்ச்சியான அணுகுமுறையா எனக் கேட்கத் தோன்றும். ஆஸ்திகவாதிகளுக்கும், நாஸ்திகர்களுக்கும் இடையே நடக்கும் சர்ச்சை காலங்காலமாக இருந்து வருகிறது. இரு தரப்பினரும் பிடிவாதமான குணமுடையவர்கள் என்றால் தகும்.

ஆஸ்திகர்கள் புனித நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் சம்பவங்கள் உண்மையே, அவற்றை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமென வாதிடுவதும், அதை எதிர்க்கும் நாஸ்திகர்கள் ஆஸ்திகம் கூறும் நிகழ்வுகளுக்கான சான்றுகள் எங்கே என்பதும் நம்மைக் குழப்பும் தரத்தைக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில், ஆஸ்திகர்கள் புராணம் செப்பும் நிகழ்வை உண்மையென ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பார்கள். உதாரணத்திற்கு, நரகாசுரன் உலகைப் பாயாகச் சுருட்டி எடுத்துக்கொண்டு கடலினுள் போய் ஒளிந்து கொண்டான் என்றால் நாஸ்திகவாதி, “இது அறிவுக்கு எட்டாத பகர்வு. ஆகவே, ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல” என நாஸ்திகர்கள் சொல்லுவார்கள். இதற்குப் பதில் கூறும் வகையில் அமைந்திருக்கும் ஆஸ்திகவாதியின் வாதம். “நம்ப முடியாது என்கிறாயே” – நம்ப முடியாததற்கான காரணம் என்ன என்றால் அவரின் வாதத்திறனை என்னவென்பது?

இருவரின் கருத்தும் எதை அடிப்படையாகக் கொண்டது என்பதை ஊன்றி கவனித்தால் உண்மை புலப்படும். ஆஸ்திகவாதிக்கு நம்பிக்கைதான் அடிப்படை. நாஸ்திகவாதிக்கோ விஞ்ஞானத்தால் காணப்படும் சான்று. ஆஸ்திகர்கள் சான்றைத் தேட மறுப்பார்கள். அவன் நம்பும்படி கல்வி அமைந்துவிட்டது. வாழ்க்கையும் அமைந்துவிட்டது. அதுதான் அவனுக்கு முக்கியம்; அந்த நம்பிக்கையில் இருந்து அவன் விலக மறுக்கிறான்!

நாஸ்திகவாதிக்குச் சான்றுதான் முக்கியம். சான்று எனும்போது உண்மைதான் முக்கியம். நம்பிக்கைக்குச் சான்று தேவை இல்லை. மாறாக, உண்மைக்குச் சான்று அடிப்படையாக அமைகிறது. இந்த வேறுபாடுகளை உணர்ந்தால் ஆஸ்திகர்களின் நம்பிக்கைக்குச் சான்று தேவைப்பட்டது. ஆஸ்திகர்கள் காண விழையும் உண்மைக்குச் சான்று இன்றியமையாததாகும்.

இந்த ஆஸ்திக, நாஸ்திகத் தரப்பினரின் போட்டியில் இருவரும் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்துவதில் பிடிவாதமாக இருப்பார்கள் என்பதும் தெரிந்த உண்மையே.

நாஸ்திகர்கள், ஆஸ்திகர்களின் கருத்துகளை, நிகழ்வுகளை முழுமையாக எதிர்த்து, வெறுத்து ஒதுக்கிவிட வேண்டும் என்று கர்ஜிப்பார்கள். ஆஸ்திகவாதிகளோ கடவுள் தன்மையைக் காட்டி தங்களின் கருத்துதான் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பார்கள். மாற்றத்துக்கு இடமில்லை.

இதில் விந்தை என்னவெனில் பகரப்பட்ட நிகழ்வு கற்பனையில் உதித்ததாக இருக்கலாம். ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவோ, நம்ப கூடியதாகவோ இருக்கா. ஆனால், அதை படைத்தவரின் நோக்கம் என்னவாக இருந்திருக்கும்? அதுவல்லவா முக்கியம்! நரகாசுரன் கொடுமையாகவும் உலக வளத்தை எல்லாம் சுருட்டிக் கொண்டு எங்காவது போய் ஒளிந்து கொள்வான் என்ற மறைவான கருத்தை வெளிப்படுத்துகிறது என்று நினைத்து பார்க்கலாம் அல்லவா? எது முக்கியம்? கதையில் வரும் சம்பவம் நம்ப முடியாததாக இருக்கலாம். ஆனால், அதில் ஏதோ ஒரு புதிய, நல்ல செய்தி இலை மறை காய் போல் நம் அறிவுக்குத் தேவையான செய்தி அடங்கியிருக்குமே! அதைக் கண்டு பிடிக்க முயற்சிக்க வேண்டுமல்லவா?

நண்பர் ஒருவர் தாம் படித்த பாம்பு கதையைப் பற்றி சொன்னார். நெடுங்காலமாக ஒரு பெண் மலைப்பாம்பை ஆசை விலங்காக வைத்திருந்தாளாம். அது நன்றாக வளர்ந்து கொண்டிருந்தது. ஒரு கிழமையாக அந்த ஆசை விலங்கு எப்பொழுதும் கொடுக்கப்படும் உணவைக் கொடுத்தால் உண்ணாது பட்டினி கிடந்ததாம். கவலைப்பட்ட அந்தப் பெண் விலங்கு மருத்துவரிடம் தமது ஆசை விலங்கைக் காட்டினாள். அவரும் அதை நன்றாகப் பரிசோதித்து நோய் ஏதும் தென்படவில்லை என உறுதிப்படுத்தினார். பிறகு ஏன் தம் ஆசை விலங்கு உணவைப் புறக்கணிக்கிறது என்ற கேள்வி விலங்கு மருத்துவரைச் சிந்தனையில் ஆழ்த்தியதாம். பரிகாரம் கண்டவராக, “பாம்பின் பழக்க வழக்கத்தில் சமீபத்தில் ஏதாவது மாற்றம் காணப்பட்டதா?” என்று வினவ, அந்தப் பெண் “ஒரு கிழமையாக அந்தப் பாம்பு தம் அருகே வந்து நீண்டு படுத்துக் கொள்ளும். இதற்கு முன்பு இதுபோல் அது நடந்து கொள்ளவில்லை” என்றாள்.

விலங்கு மருத்துவர், “சரிதான், அது சாப்பிடாததற்குக் காரணம் உன்னைச் சாப்பிடுவதற்கு அது தயார் செய்கிறது. உன்னோடு படுத்து உன் உயரத்தை நிர்ணயிக்கிறது!” என்றாராம். இந்த உண்மையை அறிந்த அந்தப் பெண் தமது ஆசை விலங்கைத் துயரத்தோடு காட்டினுள் கொண்டு விட்டாளாம்.

மலைப்பாம்பின் குணத்தில் இது உண்டா என ஆய்ந்துப் பார்த்தபோது அது உண்மையல்ல என்று புலப்பட்டது. கதை முடிந்துவிட்டதா? கதையில் புதைந்து கிடக்கும் உண்மை என்ன? நம்மோடு நெருங்கிப் பழகுபவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதை நாம் ஒரு போதும் நினைத்துப் பார்ப்பதில்லை. எவ்வளவு செல்லமாக வளர்த்தாலும் பாம்பு  கடிக்கத்தான் செய்யும். எவ்வளவு அந்நியோன்யமாகப் பழகினாலும் வஞ்சக எண்ணம் கொண்டோரின் மனதை அளக்க முடியாது. பழைய கதைகளில் துளியளவு அறிவு இருக்கும் என்பதை உணர வேண்டும்.