சட்டமன்றத்திற்கு தேர்வுபெற்ற தோட்டப் பாட்டாளியின் மகன்

இராகவன் கருப்பையா – இரவு பகல் பாராமல் பகுதி நேர வேலைகள் செய்து பணம் ஈட்டி தனது பட்டப்படிப்பை முடித்ததாகக் கூறுகிறார் சிலாங்கூர், கோத்த கெமுனிங் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றுள்ள வழக்கறிஞர் பிரகாஸ் சம்புநாதன்.

“பல சிறமங்களுக்கிடையே கடந்த 2001ஆம் ஆண்டில் சட்டக் கல்வியைத் தொடர என் பெற்றோர் என்னை பிரிட்டனுக்கு அனுப்பி வைத்தனர். என் அப்பா சம்புநாதன் ஒரு சுமையுந்து ஓட்டுனர், என் அம்மா சேகரி ஒரு ரப்பர் தோட்டத் தொழிலாளி.”

“இருப்பினும் எப்படியாவது என்னை ஒரு வழக்கறிஞராகக் காணவேண்டும் என்பதே அவர்களுடைய கனவு. நண்பர்களிடம் கொஞ்சம் கடன் வாங்கிய போதிலும் பிரிட்டன் செல்வதற்கு தேவையான விமான பயணச் சீட்டு வாங்குவதற்கு மட்டுமே அவர்களிடம் பணம் இருந்தது.”

“அந்த சமயத்தில் பினேங், பிராயில் உள்ள பி.பி.ஆர். அடுக்கு மாடி குடியிருப்பில்தான் எங்களுடைய வீடு. என் பெற்றோருக்கு நான்தான் மூத்த பிள்ளை. குறைந்த வருமானத்தில் என் 4 தம்பிகளையும் ஒரு தங்கையையும் பராமரிக்க வேண்டிய சூழலில், என் கல்விக்கு அவர்களால் பணம் அனுப்ப இயலவில்லை.”

“எனவே வேறு வழியின்றி பிரிட்டனில் பகல் வேளையில் ஒரு தொலைபேசி கடையிலும் இரவில் மதுபான நிலையமொன்றிலும் பகுதி நேரமாக வேலை செய்து அங்கு என் கல்விக்குத் தேவையான பணத்தை சொந்தமாகவே சம்பாதிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானேன்.”

ஒரு வழக்கறிஞராக பட்டம் பெற்று நாடு திரும்பியதும் ஜ.செ.க. தலைவர் கோபிந் சிங்கின் சட்டத்துறை அலுவலகத்தில் பணியாற்றத் தொடங்கிய பிரகாஸ் பல முக்கிய வழக்குகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

அவற்றுள் தியோ பெங் ஹொக் மரணம் தொடர்பானதும் 2015ஆம் ஆண்டில் அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்டதும் அடங்கும். அவ்வழக்குகளில் கோபிந் சிங்கிற்கு உதவியாளராக அவர் திறம்பட பணியாற்றியுள்ளார்.

பிறகு 2017ஆம் ஆண்டில் தனது சொந்த சட்டத்துறை அலுவலகத்தைத் தொடக்கிய பிரகாஸ், ஜ.செ.க.வில் இணைந்து அரசியலிலும் மிகுந்த ஈடுபாடு காட்டத் தொடங்கினார்.

“நான் வழக்கறிஞரான பிறகு அரசியலிலும் ஒரு உயர் நிலையை அடைய வேண்டும் என்பது என் தந்தையின் மற்றொரு கனவு. ஆனால் தற்போது நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றுள்ளதைக்காண அப்பா இல்லை,” என பிரகாஸ் வருத்தத்துடன் தெரிவித்தார்.

இந்த துடிப்பு மிக்க இளைஞரின் மனைவி ஜெயந்தியும் ஒரு வழக்கறிஞராவார். அவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

இளம் வயதிலிருந்தே வாழ்க்கையில்  பல கஷ்டங்களை கடந்து வந்த அனுபவம் எனக்கு இருப்பதால் என் தொகுதியில் உள்ள மக்களின் தேவைகளை நன்கு அறிந்து அவற்றை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை உடனே முடுக்கிவிட்டுள்ளேன்,” என பிரகாஸ் மேலும் விவரித்தார்.

கோத்த கெமுனிங் தொகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண்பது தனது முதல் வேலை என்று கூறிய அவர் வடிகால் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் மீதும் அதிக கவனம் செலுத்தப்படும் என்றார்.

இத்தொகுதியில் உள்ள பல இடைநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இடப் பற்றாக்குறை நிலவுவதால் அதனை நிவர்த்தி செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக பிரகாஸ் குறிப்பிட்டார்.

அதோடு ‘மடானி’ அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப பி40 தரப்பினரின் ஏழ்மை நிலையை துடைத்தொழிப்பதற்கான முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.