தமிழ் பள்ளிகளுக்கு ‘பனி போர்த்திய பூமியிலே’ பயண நூல்: மனிதவள அமைச்சர்

தமிழ் பள்ளிகளுக்கு 10 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பயண நூல்களை வழங்குவதாக மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவித்தார்.

எழுத்தாளர் இராகவன் கருப்பையாவின் ‘பனி போர்த்திய பூமியிலே’ எனும் பயண நூல் வெளியீட்டு விழாவின் போது சிவகுமார் இந்த அறிவிப்பை செய்தார்.

‘மலேசியாகினி’ இணைய ஊடகத்தின் தமிழ் பிரிவான “மலேசியா இன்று’விற்கு சமூக, அரசியல் கட்டுரைகளை படைத்துவரும் மூத்த பத்திரிகையாளரான இராகவன் கருப்பையா, தாம் பயணித்த 50 நாடுகளில் கண்ட அனுபவங்களை அந்த நூலில் உள்ளடக்கம் செய்துள்ளார். ஒரு காப்புறுதி நிர்வாகியுமான அவர் தமிழ், ஆங்கிலம், ஆகிய மொழிகளில் இரு வெவ்வேறு புத்தகங்களை படைத்துள்ளார்.

சுதந்திர தினத்தன்று தலைநகரில் நடைபெற்ற அந்த நூல் வெளியீட்டு விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கர்கள், எழுத்தாளர்கள், பயண ஆர்வளர்கள், இலக்கியவாதிகள், காப்புறுதி அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வளர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

அவ்விழாவை தொடக்கி வைத்து தலைமையுரையாற்றிய சிவகுமார், சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் இராகவன் கருப்பையா இணைந்துள்ள காப்புறுதி நிறுவனத்தில் தாமும் பணியாற்றிய அனுபவங்களை சுவையாக பகிர்ந்து கொண்டார்.

தமது 27ஆவது வயதில் காப்புறுதி தொடர்பாக தாம் எழுதிய ஒரு புத்தகம் தமது அமைச்சின் கீழ் உள்ள தொழிலியல் நீதிமன்ற அலுவலகத்தில் இன்னமும் புழக்கத்தில் இருப்பது கண்டு வியப்படைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமது அமைச்சு முன்னெடுத்துள்ள பல்வேறு பயிற்சிகள் குறித்தும் விரிவாக விளக்கமளித்த சிவகுமார், அத்தகைய வாய்ப்புகளை நம் சமூகத்தினர் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பல்கலைக்கழக நுழைவு குறித்து பேசிய அவர், பிடித்தமான துறையில் கல்வியைத் தொடர இடம் கிடைதால், அருகிலேயே வேண்டும் என்றில்லாமல் எந்தப் பல்கலைக்கழகமாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நம் பிள்ளைகளுக்கு வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய பேராசிரியர் என்.எஸ்.இராஜேந்திரன், இந்த பயண நூலில் சிறு சிறு விஷயங்களுக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு துல்லியமாக சுவைப்பட எழுதப்பட்டிருக்கிறது என்று விளக்கமளித்து தமது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய தென்றல்/வானம்பாடி ஆசிரியர் வித்யாசாகர், தமிழ் மொழி வளர்ச்சியடைவதற்கு இது போன்ற புத்தகங்கள் தமிழில் நிறைய வெளிவரவேண்டும் என்று தமது வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் நூல் அறிமுகம் செய்த ‘மலர் தொலைக்காட்சி’ ஆசிரியர் சன்.சிவா, இந்த பயண நூலில் சொல்ல வேண்டிய விஷயங்களை நூலாசிரியர் நறுக்கென்று சொல்லியிருப்பது ஒரு தனித்துவம் என்று வர்ணித்தார்.

புத்தகத்தில் அதிக அளவு குட்டி குட்டி தலைப்புகள் இருப்பதானது தூண்டில் புழுக்கள் போல வாசகர்களை கவர்ந்திழுப்பது திண்ணம் என்று கூறினார்.

இறுதியாக ஏற்புரை வழங்கிய நூலாசிரியர் இராகவன் கருப்பையா, ஒரு புத்தகத்தை வெளியிடுவது எதிர்பாராத சவால்கள் நிறைந்த ஒரு முன்னெடுப்பு என்று குறிப்பிட்டார்.

அவர் தமிழ் பள்ளிக்கூடம் சென்றிராத போதிலும் கடந்த 1960களில் அவருடைய சகோதர சகோதரிகள் பயின்ற, தலைநகர் ஜாலான் ஃபிளட்சர் தமிழ் பள்ளிக்கு தமது பயண நூல்களையும் குறிப்பிட்ட ஒரு தொகையையும் நன்கொடையாக வழங்கினார்.