‘தனி ஒருவன் நினைத்துவிட்டால்’ கைதிகளின் கதை: நூல் வெளியீடு

இராகவன் கருப்பையா – நம் சமூகத்தைச் சேர்ந்த சிறைக் கைதிகளின் வாழ்க்கைப் பின்னணி மற்றும் மலேசிய சிறைச்சாலைத்துறை இயங்கும் விதம் போன்ற விரிவானத் தகவல்களை உள்ளடக்கிய ஒரு புத்தகம் இவ்வார இறுதியில் தலைநகரில் வெளியீடுக்காணவிருக்கிறது.

மலேசிய சிறைச்சாலைத் துறையின் துணை ஆணையர் அண்ணாதுரையின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள

‘தனி ஒருவன் நினைத்துவிட்டால்’ எனும் தலைப்பிலான அந்நூல் எதிர்வரும் அக்டோபர் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு வெளியீடு காணும்.

காஜாங் – செமிஞே சாலையில் அமைந்துள்ள மலேசிய சிறைச்சாலைத் துறையின் தலைமையகத்தில் ம.இ.கா. தலைவர் விக்னேஸ்வரன் தலைமையில் அந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

கடந்த 35 ஆண்டுகளாக மலேசிய சிறைச்சாலைகளில் பணியாற்றியுள்ள அண்ணாதுரை மொத்தம் 80 சிறைக் கைதிகளை நேர்காணல் செய்து அப்புத்தகத்தில் உள்ளடக்கம் செய்துள்ளார். அவர்களில் 50 பேர் ஆண்கள், 30 பேர் பெண் கைதிகளாவர்.

அந்த 80 பேரில், 12 பேரின் உண்மைக் கதைகளை ஒழிவு மறைவின்றி எழுதியுள்ளதாகவும் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான காரணங்களையும் அவற்றின் பின் விளைவுகள் மற்றும் படிப்பினைகளையும் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளதாகவும் அண்ணாதுரை கூறினார்.

மலேசிய இந்தியர்கள், குறிப்பாக சிறைவாசம் அனுபவிப்போரின் குடும்பங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நிறைய விஷயங்களையும் அந்நூலில் தாம் விவரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அப்புத்தக விற்பனையின்  வழி கிடைக்கும் மொத்தத்  தொகையும் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நெகிரி செம்பிலான் லிங்கியில் தமது மேற்பார்வையில் இயங்கவிருக்கும் சிறைக் கைதிகளின் மறுவாழ்வு  இல்லத்திற்கு வழங்கப்படும் என்றார் அவர்.