இராகவன் கருப்பையா – பாலஸ்தீன அகதிகளை மலேசியாவுக்கு அழைத்து வர பரிந்துரை செய்த சிலாங்கூர், சுபாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வொங் சென் கொஞ்சம் சர்ச்சையில் மாட்டிக் கொண்டது ஆச்சரியமில்லை.
ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு அகதிகளாக அடைக்களம் தேடி வருபவர்களை மனிதாபிமானத்தோடு அரவணைப்பது நியாயமான ஒன்று. ஆனால் தன்னிச்சையாக ஒரு நாட்டுக்குச் சென்று கொஞ்சம் பேரை அகதிகளாக அழைத்து வருவது சற்று உணர்ச்சி பூர்வமான விஷயம்தான்.
அனைத்துலக உறவுகள் மற்றும் தொழில்துறைக்கான நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் தலைவரான பி.கே.ஆர். கட்சியின் வொங் சென் இது குறித்து வெளிவிவகார அமைச்சுடன் கலந்தாலோசிக்கவிருப்பதாக அண்மையில் அறிவித்தார்.
ஆனால் இந்த யோசனைக்கு பெருமளவில் எதிர்ப்பு வரும் என்று அவர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. பல வேளைகளில் அரசியல்வாதிகள் தேவையில்லாமல் ஒருசில விஷயங்களை கையிலெடுத்து ‘ஹீரோ’வாக காட்டிக் கொள்ள நினைப்பது வியப்பில்லைதான்.
பேராக், ஈப்போ தீமோரின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜ.செ.க.வைச் சேர்ந்த ஹாவட் லீ சுவான் ஹவ் அண்மையில் திருக்குர் ஆனில் உள்ள ஒரு பத்தி குறித்து விளக்கமளித்து ‘ஹீரோ’வாக தன்னை காட்டிக் கொள்ள முயன்றதால் தேவையில்லாமல் மாட்டிக் கொண்டது நாம் எல்லாரும் அறிந்ததே.
அதே போல வொங் சென்னும் சர்ச்சையில் மாட்டிக் கொண்டுள்ளதைப் போல் தெரிகிறது. பாலஸ்தீன அகதிகளை தற்காலிகமாக இங்கு அழைத்து வருவதற்குதான் தாம் பரிந்துரை செய்வதாக அவர் விளக்கமளிக்க முற்பட்ட போதிலும், “அம்முயற்சி பயங்கரவாதத்திற்கு நாம் உறமிடுவதற்கு சமம்” என்று பலர் அவர் மீது கோபக்கனலை பாய்ச்சியுள்ளனர்.
வொங் சென்னின் போக்கு சுயமாகவே ‘தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்வதை’ப் போல் உள்ளது என பலர் வருணித்துள்ளனர்.
“இவ்விவகாரத்தை மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக அரசியல் ரீதியாகவோ இன ரீதியாகவோ பார்க்கக் கூடாது. மாறாக இது மனிதாபிமானம் சம்பந்தப்பட்டது” என அவர் விளக்கமளித்துள்ள போதிலும் பொது மக்களின் கருத்துகளை முழுமையாக நிராகரித்துவிடவும் முடியாது.
ஏற்கெனவே மியன்மார் மற்றும் வங்காள தேசம் போன்ற நாடுகளில் இருந்து இங்கு வந்து குவிந்துள்ள கள்ளக் குடியேற்றவாசிகளால் நாம் பெருத்த இன்னல்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
பாலஸ்தீனில் தற்போது நிகழும் கொடூரங்கள் நம் இதயங்களில் ஈட்டியை பாய்ச்சுவதைப் போல்தான் உள்ளது என்பதில் கடுகளவும் ஐயமில்லை. மனிதாபிமானத்திற்கு ஏற்பட்டுள்ள பெருத்த சோதனையாகவே அதனை வகைப்படுத்தலாம்.
பாலஸ்தீனில் காஸா முனையின் மக்கள் தொகையான 2.2 மில்லியன் பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் அங்கு நடக்கும் போரினால் தற்போது இடம் பெயர்ந்துள்ளதாக நம்பப்படுகிறது. இனி வரும் நாட்களில் இந்நிலைமை மேலும் மோசமாகக் கூடும்.
இப்படிப்பட்ட சூழலில் வொங் சென் யாரை அழைத்து வருவார், யாரை விடுவார், எத்தனை பேரை இங்கு அழைத்து வர இயலும் என்பது பற்றியெல்லாம் யோசித்தாரா என்பதும் பொது மக்களின் ஆதங்கமாக உள்ளது.
பாலஸ்தீன மக்களுக்கு துயர் துடைப்பு நிதியாக 100 மில்லியன் ரிங்கிட் வழங்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக துணைப் பிரதமர் அஹ்மட் ஸாஹிட் அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்க ஒரு முன்னெடுப்பு.
அதே போல உணவுப் பொருள்கள், மருந்து வகைகள் மற்றும் இதர உடமைகளையும் திரட்டி உடனடியாக அங்கு அனுப்புவது குறித்து வொங் சென்னும் அவருடைய குழுவினரும் பரிசீலிக்க வேண்டும்.