இராகவன் கருப்பையா – மேற்கத்திய நாடுகள் மட்டுமின்றி ஆசிய நாடுகளும், குறிப்பாக தென் கிழக்காசிய நாடுகளும் கூட பல்வேறு துறைகளில் துரித வளர்ச்சி கண்டுள்ள நிலையில் மலேசியா மட்டும் தொடர்ந்து ஒரே நிலையிலேயே இருப்பது நாம் எல்லாருமே வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம்.
உலக அளவில் 163 நாடுகளில் மதிப்பிடப்படும் மனித மேம்பாட்டு குறியீடு (Human Development Index – https://wisevoter.com/country-rankings/education-rankings-by-country/2021/22) நமது நாட்டின் தரத்தை 65-ஆவது இடத்தில் வைத்துள்ளது. அன்டை நாடான சிங்கப்பூர் 12 நிலையிலும், சிறிலங்கா 58-வது இடத்திலும் உள்ளன.
அதோடு, ஏழ்மை ஒழிப்பு, பொருளாதாரம், கல்வி, விளையாட்டு, மனிதவளம், மற்றும் ஊழல் ஒழிப்பு, போன்றவற்றில் நாம் இன்னமும் பின் தங்கிய நிலையிலேயேதான் இருக்கிறோம் என்பதும் வேதனைக்குரிய ஒன்று.
இதற்கான அடிப்படை காரணமே அரசியல் கோளாறுகள்தான் என்று தெரிந்திருந்தும் எந்த அரசியல் கட்சியும் இதனை நிவர்த்தி செய்வதற்கான முன்னெடுப்புகளை தீவிரமாக மேற்கொள்வதற்கான அறிகுறிகளையே காணோம்.
குறிப்பாக கல்வித் துறையை எடுத்துக் கொண்டால், ஒரு நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பிரதான பொறுப்பைக் கொண்டுள்ளது எனும் விவரம் அரசியல்வாதிகளுக்கும் தெரியாமல் இல்லை. இருந்த போதிலும் அதிலும் கூட சுயநல எதிர்பார்ப்புகள் தலைவிரித்தாடுவதால் பிள்ளைகளின் எதிர்காலமும் நாட்டின் எதிர்காலமும் ஒருசேர பாதிக்கப்படுகிறது.
ஒரு காலத்தில் நம் நாட்டின் கல்வித்தரம் ஓரளவு சிறப்பாகத்தான் இருந்தது. எனினும் அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப சன்னம் சன்னமாக நமது பள்ளிகளில் சமயக் கூறுகள் வலுக்கட்டாயமாக புகுத்தப்பட்டதாலும் தகுதியில்லாத அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதாலும் எல்லாமே சீர்குலையத் தொடங்கிவிட்டன.
நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக கல்வி அமைச்சராக ஒரு பெண் கடந்த நவம்பர் மாதத்தில் நியமிக்கப்பட்டார். ஷாரியா சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு வழக்கறிஞரான ஃபட்லினா அரசியலுக்கு புதியவர்தான்.
கடந்த 70ஆம் ஆண்டுகளில் தற்போதைய பிரதமர் அன்வாரை ஒரு புரட்சிகரமான, துடிப்புமிக்க தலைவராக உலகுக்கு அடையாளப்படுத்திய ‘அபிம்’ எனப்படும் மலேசிய இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் முன்னாள் தலைவர் சிடேக்கின் புதல்விதான் இந்த ஃபட்லினா. இவர் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டு உடனே கல்வியமைச்சராக நியமனம் செய்யப்படுவதற்கு இது மட்டும்தான் தகுதியா என்று கூட நமக்கு எண்ணத் தோன்றுகிறது.
ஏனென்றால், பகடிவதை, பாலியல் தொல்லை, தீவிரவாதம் மற்றும் குண்டர் கும்பல் நடவடிக்கைகள் போன்ற எதிர்மறையான அம்சங்களிலிருந்து பள்ளிக்கூங்கள் முற்றாக விடுபடுவதை தனது அமைச்சு உறுதி செய்யும் என கடந்த ஜனவரி மாதத்தில் அறிவித்து நமக்கு நம்பிக்கையூட்டினார்.
எனினும் அதன் பிறகு ஒரு சில மாதங்களிலேயே அவருடைய போக்கில் மக்கள் அவ்வளவாக திருப்தி கொள்ளவில்லை. அதற்கு உச்சமாக அமைந்ததுதான் கடந்த வாரத்தில் அவர் நடந்து கொண்ட விதம்.
நாடளாவிய நிலையில் பல்வேறு தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் ‘பாலஸ்தீன ஒற்றுமை வாரம்’ எனும் ஒரு இயக்கத்தை பிடிவாதமாக அமல்படுத்தி கண்டனத்திற்குள்ளானது அனைவரும் அறிந்த ஒன்று. பல பெற்றோர்கள் அந்த ஒரு வாரத்திற்கு தங்களுடைய பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது.
இவருக்கு முன் குறுகிய காலம் கல்வியமைச்சராக இருந்த பெர்சத்து கட்சியின் முஹமட் ரட்ஸியும் நாட்டின் கல்வி மேம்பாட்டுக்கு என்ன செய்தார் என்பது கேள்விக்குறிதான். கடந்த 2020ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் முஹிடின் யாசினோடு கொல்லைப்புறமாக அரசாங்கத்தினுள் நுழைந்த இவர் தேர்தலில் தோற்றுப் போனவர். அந்த ஒட்டு மொத்த கும்பலின் முழு கவனமும் தங்களுடைய பதவிகள் பறிபோகாமல் இருப்திலேயே இருந்ததும் நாம் இன்னும் மறக்கவில்லை.
கோவிட் பெருந்தொற்றின் போது கல்வித் துறையை நிர்வகிக்கத் தெரியாத ரட்ஸியின் குளறுபடியான முடிவுகளினால் பிள்ளைகள் எதிர் கொண்ட இன்னல்கள் நம் கண் முன்னே இன்னமும் நிழல்களாக தெரிகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டில் கல்வியமைச்சர் பொறுப்பை ஏற்ற மஸ்லி மாலிக்கும் அந்த அமைச்சை குழப்பிவிட்டுதான் வெளியேறினார். முதல் வேலையாக, காலங்காலமாக வெள்ளையாக இருந்த பள்ளிப் பிள்ளைகளின் காலணிகளை கருப்பு நிறத்திற்கு மாற்றச் சொன்னது கல்விக்கு சம்பந்தமே இல்லாத ஒரு நடவடிக்கை.
அதனைத் தொடர்ந்து, ‘காட்’ எனும் ஜாவி எழுத்துகளை எல்லா ஆரம்பப் பள்ளிகளிலும் வலுக்கட்டாயமாகத் திணித்து ஆயிரக்கணக்கான பெற்றோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தினார். ஒன்றன் பின் ஒன்றாக, அவருடைய மழுங்கிப்போன ஆற்றல் மீதான புகார்கள் குவியத் தொடங்கியவுடன் தனது அமைச்சர் பொறுப்பை அவர் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஏறத்தாழ கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் நமது கல்வித்துறை இப்படிதான் தகுதியில்லாதவர்கள் கைகளில் மாட்டிக் கொண்டு நம் குழந்தைகளின் எதிர்காலத்தை பந்தாடிக் கொண்டிருக்கிறது எனும் நிலை உண்மையிலேயே வேதனைக்குரிய ஒன்று.