நாடாளுமன்றத்திற்கு செல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இராகவன் கருப்பையா – நம் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் சில சமயங்களில் நாடாளுமன்ற கூட்டத் தொடரை மதிப்பதே கிடையாது. அவைக்குச் செல்லாமல் மட்டம் போடுவது அவர்களில் சிலருக்கு பழகிப் போன ஒன்றாகிவிட்டது.

தேர்தலுக்கு முன்னான பிரச்சாரக் கூட்டங்களின் போது சில வேளைகளில் பீரங்கி போல முழங்கி வாக்குகளைத் திரட்டுவது மட்டுமின்றி மற்ற பல வேளைகளில் கெஞ்சிக் கூத்தாடியும் ஆதரவு தேடுகின்றனர்.

ஆனால் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தங்களுடைய கடமைகளையும் வாக்காளர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும்  அவர்களுக்கு  முக்கியமாக படுவதில்லை.

வெறும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவரின் தலையாய கடமை, தான் பிரதிநிதிக்கும் தொகுதி மக்களின் தேவைகளுக்கு ஏற்ப சேவையாற்றுவதும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தவறாமல் பங்கேற்பதும்தான்.

அதே சமயம் அவர் ஒரு அமைச்சராகவோ துணையமைச்சராகவோ இருந்தால், கூடுதலூக அமைச்சுப் பணிகளையும் கவனிக்க அவர் கடப்பாடு கொண்டுள்ளார்.

எது எப்படியோ, நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கான தேதிகள் முன்கூட்டியே அவர்களுக்கு அறிவிக்கப்படுவதால் இதர அலுவல்களை கவனிப்பதற்கான அட்டவணைகளை அதற்கேற்றவாறு அவர்கள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது யாரும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

ஆனால் நாடாளுமன்றம்தான் நாட்டின் இலக்கையும் தலைவிதியையும் நிர்ணயிக்கும் அவை என்பதை மறந்து சில உறுப்பினர்கள் பள்ளிக்கு மட்டம் போடுவதை போல பல வேளைகளில் அந்தப் பக்கமே தலைகாட்டுவதில்லை.

அவையில் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது அவருக்குப் பின்னால் எண்ணற்ற இருக்கைகள் காலியாக இருப்பதை பல வேளைகளில் மக்கள் பார்த்து சினமடைந்துள்ளனர். தங்களுடைய வரிப்பணத்தை ஊதியமாக பெறும் இவர்களுக்கு அடுத்த முறை வாக்களிக்கக் கூடாது என்று ஆதங்கப்படும் அளவுக்குக் கூட மக்கள் கோபமடைந்துள்ளனர்.

அதை விட கேவலம் சில உறுப்பினர்கள் தங்களுடைய கடமையை மறந்து, ‘உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு’ எனும் போக்கில் அமர்ந்திருக்கும் இருக்கையிலேயே உறங்கவும் செய்கின்றனர்.

இன்னும் சிலர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையில்  பொழுதை கழிப்பதோடு, சரியான நேரத்தில் மண்டபத்திற்குள் நுழைவதில்லை எனும் புகார்களும் பல வேளைகளில் எழுந்துள்ளன.

கடந்த வியாழக்கிழமை நடந்த கூட்டத் தொடரின் போது அலோர்ஸ்டார் தொகுதியின் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான அஃப்னான் ஹமிமியின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய வெளியுறவு அமைச்சர் ஸம்ரி மட்டுமின்றி அந்த அமைச்சின்  துணையமைச்சர் முஹமட் அலாமினையும் அவையில் காணவில்லை. அமைச்சின் சார்பாக பதிலுரைக்க வேறொரு அமைச்சரைக் கூட அவர்கள் நியமனம் செய்யவில்லை.

இதனால் மிகுந்த சினமடைந்த அஃப்னான், “பிரதமர் அன்வாரால் அவருடைய அமைச்சரவை உறுப்பினர்களை கட்டுப்படுத்த இயலவில்லை. எனவே அவருடைய இயலாமையையே இது அப்பட்டமாகக் காட்டுகிறது” என நிருபர்களுடனான சந்திப்பின் போது பிறகு விளாசினார். “மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் இவர்களுக்கு கொஞ்சம் கூட அக்கரையே இல்லை” என்றார் அவர். இவருடைய கோபத்தில் நியாயம் இருப்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

கடந்த வாரத்தில் இதே போன்ற பிரிதொரு சம்பவமும் நிகழ்ந்துள்ளது. மஸ்ஜிட் தானா தொகுதியின் எதிர்கட்சி உறுப்பினர் மாஸ் எர்னியாத்தியின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய சுகாதார அமைச்சர் ஸலிஹா மட்டுமின்றி அவ்வமைச்சின் துணையமைச்சரையும் அவையில் காணவில்லை.

எனினும் இன்னொரு துணையமைச்சர், அவர்களின் சார்பில் தேவையான பதில்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில், ‘நாடாளுமன்றம் சென்றால் எதிர்கட்சிக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க  வேண்டியிருக்குமே’ எனும் பயத்தில் ‘உடல் நலக்குறைவு’ என சாக்கு போக்குச் சொல்லி மருத்துவமனைகளில் அனுமதித்துக் கொண்ட பிரதிநிதிகளின் ‘ட்ராமா’க்களையும் மக்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது அடுத்த முறை இவர்களுக்கு வாக்களிக்கத் தோன்றுமா? அப்படியே இவர்கள் மீண்டும் தேர்வு பெற்றால் அதற்கு யார் பொறுப்பு?