குடும்ப மாதர்களுக்கும் தீபாவளி வேண்டும்!

இராகவன் கருப்பையா – தீபாவளி வந்துவிட்டால் எல்லாருக்குமே கொண்டாட்டம்தான். குறிப்பாக நம் நாட்டில் இப்பண்டிகையை கொண்டாடும் இந்துக்கள் மட்டுமின்றி அவர்களுடைய  விருந்தோம்பலில் திளைக்கும் அனைத்து சமையத்தினருக்கும் அது மகிழ்ச்சிகரமான ஒரு வைபவமாகவே அமைந்து விடுகிறது.

ஆனால் இத்தகையை குதூகலத்திற்கு அச்சாணியாக  சமையலறையில் இருந்து கொண்டு மணிக்கணக்கில் சமைத்துக் கொண்டிருக்கும் குடும்பமாதர்களின் அளப்பரியா பங்கை நாம் நிராகரித்துவிட முடியாது.

ஆண்டு முழுவதும் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்காக உணவு தயாரிக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அவர்கள் தீபாவளி தினத்திலாவது அப்பொறுப்பில் இருந்து விடுபட்டு இதர உறவுகளோடு சேர்ந்து அப்பண்டிகையை கொண்டாட வழிவகுக்க வேண்டும்.

மற்ற நாள்களைப் போல தீபாவளி தினத்தன்றும் குசினிக்குள் அனலில் அவியும் பெரும்பாலான குடும்பமாதர்கள் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் உணர்வுகளை மறைத்து, இன்முகத்துடன் உணவு சமைத்து பரிமாறுகின்றனர்.

பல வேளைகளில் கொண்டாட்டங்களின் மத்தியில் மதுவில் லயித்திருக்கும் சில குடும்பத் தலைவர்கள் தங்களுடைய நண்பர்களை உபசரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதால் சொல்லப்படாத இந்த சோகத்தை உணர்வதில்லை என்பது வேதனைதான்.

தீபாவளிக்கு முன் முறுக்கு வகைகள் மற்றும் இதர பலகாரங்களை தயார் செய்யும் போது பெரும்பாலான சமயங்களில் கிட்டதட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே குதூகலததுடன் கூட்டாக ஈடுபடுகின்றனர்.

ஆனால் தீபாவளி தினத்தன்று அவர்கள் எல்லாருமே குஷியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் குடும்பமாதர்கள் மட்டும் அடுப்படியில் தனித்து தவிக்க விடப்படுகிறார்கள்.

தீபத் திருநாளன்று எல்லாருமே சமையலறையில் களமிறங்குவது சாத்தியமில்லாத ஒன்று எனும் போதிலும் குடும்பத் தலைவிக்கு குறைந்த பட்சம் அன்றைய தினம் விடுமுறையளித்து கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அவர்களையும் அரவணைப்பது அவசியமாகும்.

குடும்பத்தோடு அமர்ந்து வீட்டு சமையலை சுவைப்பதற்கு நிகரேதும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மைதான். எனினும் சமைப்பது தொடர்பான அத்தனை சுமைகளையும் குடும்பத் தலைவிகள் மட்டுமே சுமக்கும் நிலை மாற வேண்டும்.

அதே வேளையில் ஒரு சில குடும்பமாதர்கள் சுய விருப்பத்தோடு இத்தகைய சூழலை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிற போதிலும் பலருக்கு இதனால் முழுமையான தீபாவளி அமைவதில்லை என்பதுதான் உண்மை.

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் பெண்களின் நிலயை பாரதியின் புதுமை பெண் அளவுக்கு ஓரளவு உயர்த்தியுள்ளன. இருப்பினும் பண்பாட்டு கூறுகள் பெணகளின் நிலையை இன்னமும் சமையல்கட்டுடன் இனைத்துள்ளதை மறுக்க இயலாது.

குடும்ப மாதர்களின் இன்னலை போக்க இரு தரப்பினம் முன்வரவேண்டும். அதற்கு அன்பும் புரிந்துணர்வும் அத்தியாவசியம். சமையல்கட்டிலும் சம உரிமை கோரி ஆண்கள் போராட மாட்டார்கள். எனவே தாய் குலம் என்று போற்றப்படும் பெண்குலம், தங்களின் குழந்தை வளர்ப்பிலிருந்தே, ஆண் குழந்தை – பெண்குழந்தை என்ற விசேச பிரிவினையை கவனமாக கையாள வேண்டும்.

வீட்டு வேலைகள், சமையல் போன்றவற்றில் ஆண் – பெண் என்ற பாகுபாட்டை ஆழப்படுதாமல் வேலைப்பளுவை பகிர்ந்தளிக்க வேண்டும். இதற்கு உடன் இருக்கும் குடும்ப ஆண்களும் ஆதரவும் அவர்களுக்கான ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.