எம்.ஜி.ஆரின் சகாப்தம் என்றும் மறையாது

இராகவன் கருப்பையா – தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மறைந்து இன்னும் ஒரு மாத காலத்தில் 36 ஆண்டுகள் நிறைவு பெறவிருக்கிறது. கடந்த 1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி தமது 70ஆவது வயதில் அவர் மரணமடைந்தார்.

நடிகராய் வாழ்க்கையை தொடங்கி ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தின் தலைவராய் உயர்ந்து தமிழகத்தில் இன்றும் மறக்கமுடியாத பெயராய் சரித்திரம் படைத்தவர் தான் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ராமச்சந்திரன். சதி லீலாவதி படம் மூலமாக திரையில் தோன்றிய இவர், சினிமாவையே தனது பிரசார மேடையாக்கி தமிழக முதலமைச்சர் எனும் அரியணையை எட்டிப் பிடித்தவர்.

அவருடைய புகழ் இன்று வரையிலும் சற்றும் குறையாமல் மேலோங்கி நிற்பது உண்மையிலேயே வியக்கத்தக்க ஒன்றுதான். குறிப்பாக நம் நாட்டில் அவருடைய புகழை போற்றி காப்பாற்றி வருபவர்களின் எண்ணிக்கை கொஞ்சமும் குறையவில்லை என்றே சொல்ல வேண்டும்.

தமிழகத்தில் அவர் முன்னணி திரையுலக நாயகனாக வலம் வந்த காலம் மட்டுமின்றி பின்னாளில் அம்மாநிலத்திற்கு முதல்வராக பொறுப்பேற்றிருந்த சுமார் 10 ஆண்டுகளிலும் கூட கோடிக்கணக்கானோர் அவரை கடவுளாக வழிபட்டனர், இன்னமும் சிலர் வழிபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் தமிழகத்தைப் போலவே நம் நாட்டிலும் அவருடைய சகாப்தம் சற்றும் மங்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் எண்ணற்ற கலைஞர்கள் அவரைப் போலவே உடையணிந்து அவருடைய புகழ் பெற்ற பாடல்களுக்கு மேடைகளில் ஆடி ரசிகர்களை மகிழ்விப்பது சற்று ஆச்சரியமாகவே உள்ளது.

தமிழ்நாட்டில்தான் அவர் முதலமைச்சராக இருந்தார். அங்குள்ளவர்களுக்குதான் அவர் கொடை வல்லலாக இருந்தார். நமக்கும் அவருக்கும் திரைப்பட தொடர்பைத் தவிர வேறொன்றும் இல்லை. ஆனால் ஏதோ ஒருவிதமான ஈர்ப்புச் சக்தி இங்குள்ள பலரை கட்டிப் போட்டுள்ளது.

கடந்த சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலிருந்து இப்படிப்பட்ட கலைஞர்கள் நம் நாட்டில் நிறைய உள்ளனர் எனும் போதிலும் எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு பிறந்தவர்களும் கூட அவர் மீது ஈர்ப்புக் கொண்டிருப்பது வியப்புதான்.

இந்த இளம் தலைமுறையினர், அதாவது 36 வயதிற்கும் குறைவானவர்கள் அவரை சந்தித்ததே இல்லை. அவருடைய திரைப்படங்களைக் கூட அதிகம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்பால் கொண்டிருக்கும் பற்றும் பாசமும் ஈர்ப்பும் உண்மையிலேயே அளப்பரியது.

அவர்களில் ஒருவர்தான் ஈப்போ, கிலேபாங் ஜெயாவைச் சேர்ந்த பாலா. தனது காரின் வெளிப்புறத்தில் எம்.ஜி.ஆர். படங்களை நிரந்தரமாக ஒட்டியுள்ள அவரை தெரியாதவர் அவ்வட்டாரத்தில் இருக்க வாய்ப்பில்லை.

பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு மேடைகளில் நடனமாடும் 36 வயது பாலாவின் காருக்கு அருகில் நின்று தம்படம் எடுத்துக் கொள்ள மற்ற இனத்தவரும் விரும்புகின்றனர்.

ஈப்போ மட்டுமின்றி, சுங்கை, பீடோர், கோப்பெங், செம்மொர் மற்றும் கம்பார் முதலிய பகுதிகளிலும் கூட அந்த காரை பார்ப்பவர்களுக்கு, இது எம்.ஜி.ஆர். பாலாவின் கார் என்று நன்றாகத் தெரியும்.

“என் அப்பா ஒரு எம்.ஜி.ஆர். பிரியர். எம்.ஜி.ஆர். எப்படிப்பட்டவர், ஏழைகளுக்கு எவ்வாறெல்லாம் உதவியுள்ளார் என்பது போன்ற நிறைய விஷயங்களை அவர்தான் என்னிடம் அடிக்கடி கூறுவார். அப்பா மறைந்து தற்போது பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் எம்.ஜி.ஆர். மீதான என் ஈர்ப்பு சற்றும் குறையவில்லை” என பெருமிதத்துடன் கூறுகிறார் பாலா.

எம்.ஜி.ஆர். மறைந்து 20 ஆண்டுகள் கழித்து பிறந்த மேகலனின் நிலைப்பாடும் அப்படிதான். பேராக், பீடோர் ஜெயாவைச் சேர்ந்த மேகலனும் மேடைகளில் எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு அவரைப் போலவே ஆடி புகழ் பெற்று வருகிறார்.

பீடோர் அப்துல் கனி இடைநிலைப் பள்ளியில் 4ஆம் படிவம் பயிலும் இவர் பள்ளி நிகழ்ச்சிகளிலும் கூட தனது திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“எம்.ஜி.ஆர். நடித்துள்ள பழைய படங்களை நான் விரும்பி பார்ப்பேன். அதோடு என் அப்பா குமாரும் எம்.ஜி.ஆர். தொடர்பான நிறைய விஷயங்களை என்னிடம் அவ்வப்போது பகிர்ந்து கொள்வார்” என்று கூறுகிறார் 16 வயதுடைய மேகலன்.

கடந்த பல ஆண்டுகளாக பிரதமர் அன்வாரும் கூட மேடைகளில் எம்.ஜி.ஆர். வேடமிட்டு மலேசிய இந்தியர்களை கவர்ந்திழுக்க முற்பட்டதை நாம் இங்கு நினைவுக் கூறத்தான் வேண்டும்.

தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த பலருக்கு அவர்களுடைய தந்தையர்தான் எம்.ஜி.ஆர். தொடர்பான உந்துதலுக்கு அடித்தளமாக இருந்திருக்கின்றனர்.

எம்.ஜி.ஆரின் சகாப்தத்திற்கு முடிவே இல்லை என்று பொருள்பட காரணம், அவரது ஹிரோவிசம், பொருள் முதல்வாத வாழ்வியல் கட்டமைப்பில் சிக்கி தொடர்ந்து உடல் உழைப்பால் வயிற்றை நிரப்பும்  மக்களின் மனதில் இருக்கும் குமுறல்களின் நாயகனாக அவர் தோன்றியதுதான்.