தமிழுக்கு மரியாதை இலையெனில் தமிழருக்கு அங்கு என்ன வேலை!

இராகவன் கருப்பையா – கடந்த வாரம் பினேங் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய நிலையிலான செந்தமிழ் விழாவில் கடவுள் வாழ்த்து மற்றும் தமிழ் வாழ்த்து ஆகியவற்றை பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உணர்ச்சி மிகுந்த நம் சமுதாயம் வழக்கம் போல பொங்கி எழுந்துள்ளது.

நம் சமூகத்தைச் சேர்ந்த எண்ணற்ற மொழி ஆர்வலர்கள் தமிழ் தினசரிகளில் பக்கம் பக்கமாக வரிசை வரிசையாக தங்கள் படங்களை பிரசுரித்து கண்டனங்கள் தெரிவித்து ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சில அரசியல்வாதிகளும்  இத்தருணத்தில் வீரவசனம் பேசி களத்தில் இறங்கியுள்ளனர்.

இருப்பினும் இதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதை முதலில் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த அக்கிரமத்திற்கு பின்னால் இருந்து செயல்பட்ட அதிகாரியோ, கல்வியமைச்சரோ பிரதமரோ இந்த கண்டனங்களை பார்த்து படித்து பயந்து நடுங்கப்போவதில்லை.

இன்னொரு கண்ணோட்டத்தில்,

முதற்கன், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் அங்கேயே தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்திருக்க வேண்டும். தமிழை அவமானப்படுத்தியவர்களுக்கு கடுகளவும் இடமளித்திருக்கக் கூடாது. தமிழ் மொழி மீது எந்த அளவுக்கு நாம் பற்று கொண்டுள்ளோம் என்பதை அங்கேயே அவர்கள் பறைசாற்றியிருக்க வேண்டும்.

ஒரு சீனரோ மலாய்க்காரரோ மேடையேறி ‘வனுக்கம்'(வணக்கம்) என்று சொல்லி விட்டால் அதனை மாபெரும் சாதனையாகக் கருதி பெருத்த ஆரவாரத்தோடு அவரை உற்சாகப்படுத்தி கைதட்டுவதில் காட்டும் முனைப்பை, தமிழ் மொழியை காப்பாற்றுவதில் நாம் காட்ட வேண்டும்.

“தமிழ் வாழ்த்தும் கடவுள் வாழ்த்தும் திருவள்ளுவர் பதாகைகளும் எங்களுக்கு மிகவும் முக்கியம்” என அங்கு குழுமியிருந்த நம் சமூகத்தினர் அங்கேயே சுட்டிக் காட்டியிருக்க வேண்டும். ஏன், யாருக்கு நாம் பயப்பட வேண்டும்? அவ்வாறு ஏதேனும் செய்யப்பட்டதா தெரியவில்லை. இவ்விவகாரத்தில் இணக்கப் போக்கிற்கு நாம் இடமளித்திருக்கவே  கூடாது.

“எங்கள் மொழியின் உயிர்நாடிகளான இந்த அம்சங்கள் அவமானப்படுத்தப்படும் இடத்தில் நாங்கள் இருக்க விரும்பவில்லை” என்று கூறி அங்கிருந்து வெளிநடப்பு செய்து அந்நிகழ்வை அவர்கள் முற்றாக புறக்கணித்திருக்க வேண்டும். அதுதான் நம் மொழிக்கு நாம் செலுத்தும் மரியாதை.

அப்படி செய்திருந்தால் வெறும் மலாய்க்காரர்களையும் சீனர்களையும் உட்கார வைத்து செந்தமிழ் விழாவை அவர்கள் நடத்தியிருப்பார்களா? அப்படியே செய்திருந்தாலும் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தேசிய நிலையில் அனைவரின் கவனத்தையும்  ஈர்த்திருக்கும் அல்லவா!

அதனை விடுத்து கூடி கூத்தாடி கும்மாளமடித்து விரும்தோம்பலில் லயத்துவிட்டு வெளியே வந்து புகார் கூறுவதில் என்ன நியாயம் எனும் கேள்வி எழுவதில் தவறில்லை.

தமிழ் தினசரிகளிலும் சமூக வலைத்தளங்களிலும் நமது கண்டனங்களை பதிவு செய்வதினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருந்த வழியில்லை. நம் மொழியை இவ்வாறு இவர்கள் கேவலப்படுத்துவது இது முதல்தடவையுமில்லை. காலங்காலமாக இப்படிபட்ட  அவலத்தை நாம் எதிர் நோக்கிக் கொண்டுதான் இருக்கிறோம்.

ம.இ.கா. துணைத்தலைவர் சரவணன் இதுகுறித்து கல்வியமைச்சர்  ஃபட்லினாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக நம்பப்படுகிறது. இதனை அவர் கண்டு கொண்டுள்ளாரா என்று கூட தெரியவில்லை.

அந்நிகழ்வை அன்றைய தினம் ஒட்டு மொத்தமாக நம் சமூகத்தினர் புறக்கணித்திருந்தால் ஃபட்லினாவின் கவனத்திற்கு உடனே அது சென்றிருகக் கூடும்.

தனிப்பட்டவர்கள் செய்யாவிட்டாலும் குறைந்த பட்சம் தமிழ் சார்ந்த நம் இயக்கங்கள் சரமாரியாக அவருக்கு கண்டனக் கடிதங்களை அனுப்ப வேண்டும்.

நம் இன, மொழி உணர்வுகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை நாம் கொண்டிருக்கக் கூடாது.