இராகவன் கருப்பையா – தைபூசத் திருவிழாவையொட்டி இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரையில் 3 நாள்களுக்கு பினேங் தண்ணீர் மலை கோயில் வளாகத்தில் உள்ள 5 வணிகத் தலங்களில் மதுபானம் விற்கத் தடை விதிக்கப்பட்டது ஆக்ககரமான முடிவுதானா எனும் கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக, வெள்ளி ரதமும் தங்க ரதமும் பவனி வரும் சாலை நெடுகிலும் உள்ள மொத்தம் 56 வணிகத் தலங்களுக்கு இத்தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் 51 கடைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவு பிறகு மீட்டுக் கொள்ளப்பட்டதாக பினேங் மாநில மேயர் ராஜேந்திரன் கூறினார்.
எனினும், வழி நெடுகிலும் மதுபானங்களை விற்பனை செய்யும் அனைத்து வணிகத்தலங்களுக்கும் தங்கும் விடுதிகளுக்கும் இத்தடையுத்தரவு விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என பினேங் மாநில இந்து சங்கமும் பினேங் பயனீட்டாளர் சங்கமும் வலியுறுத்துகின்றன.
கடந்த காலங்களில் ஒரு சிலர் ரத ஊர்வலத்தின் போது மது போதையில் ஆடியது மற்றும் பக்தர்களை வம்புக்கு இழுத்தது போன்ற தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தியதாக அவ்விரு அமைப்புகளும் விவரித்தன. எனவே இந்த மதுபான விற்பனை தடை உத்தரவு விரிவாக இருக்க வேண்டும் என அவை விரும்புகின்றன.
ஆனால் மதுபான பயனீட்டை ஒருபோதும் நாம் அங்கீகரிக்கவோ ஊக்குவிக்கவோ இல்லையென்ற போதிலும் இத்தகைய தடையுத்தரவுகள் ஏற்புடையதாக நமக்குத் தெரியவில்லை. அவை உண்மையிலேயே பயனைத் தருமா எனும் ஐயப்பாடு எழுகிறது.
மது அருந்திவிட்டு பிரச்சினைகளை ஏற்படுத்துவோர் வழி நெடுகிலும் உள்ள கடைகளில்தான் மது வாங்குவார்கள் என்று நாம் எண்ணிவிட முடியாது. மற்ற இடங்களில் கூட அவர்கள் மதுபானங்களை வாங்கக் கூடும் அல்லது பிற இடங்களில் மது அருந்திவிட்டு ரத ஊர்வலத்தில் கலந்து கொள்ளக் கூடும். இத்தகைய செயல்களை எப்படி தடுத்து நிறுத்துவது?
எனவே யாராக இருந்தாலும் ரத ஊர்வலத்தின் போது பக்தர்களுக்கு இடையூறாக இருந்தாலும் தேவையற்றக் குழப்பங்களை ஏற்படுத்தினாலும் காவல் துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவல் துறையின் பலத்த பாதுகாப்புடன்தானே நாடு முழுவதிலும் ரத ஊர்வலங்கள் நடைபெறுகின்றன! பிறகு ஏன் தேவையில்லாத அச்சம்?
அது ஒரு புறமிருக்க 56 வணிகத் தலங்களை 3 நாள்களுக்கு இப்படி முடக்கினால் அவற்றின் வியாபாரம் பாதிக்கும். இத்தகைய தடையுத்தரவுகள் பினேங் மாநிலத்தில் புதிய ஒன்றல்ல, ஒவ்வொரு ஆண்டும் நடப்பில் உள்ள ஒன்றுதான் என மாநில இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் நேதாஜி ராயர் கூறிய போதிலும் இந்நடவடிக்கை நம் சமூகத்தின் ஒழுக்கத்தையும் தன்மானத்தையும் உரசிப் பார்ப்பதைப் போல்தான் உள்ளது.