கி.சீலதாஸ் – “வாழ்க்கை ஒரு தலைமுறையைக் கொண்டது; நற்பெயர் என்றென்றும் வாழும்” என்பது ஜப்பானியப் பழமொழி. நம் மூதாதையரின் வழி நற்பெயரைப் பெறுகிறோம், ஒழுக்கப் பணியிலிருந்து தன்மானம் பெறுகிறோம் என்பதும் ஒரு பழமொழியே. புலிகள் இறக்கும் போது அவற்றின் தோலைத் தருகிறது; மனிதர்கள் இறக்கும்போது தங்கள் பெயரை விட்டுச் செல்கிறார்கள் என்பதும் ஜப்பானியப் பழமொழியே.
பெயர் எனும்போது அது பலவிதமான கருத்துக்களைக் கொண்டிருப்பதைக் காணலாம். அது ஒருவரின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அது எப்படிப்பட்ட அடையாளம்? ஒருவரின் பெயர் அவரின் இனத்தை அடையாளம் காட்டுவதை விட அவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பதைத் தெரிவிக்கும். ஒவ்வொரு இனமும் தமது பாரம்பரியப் பெயர்களை வைத்துக் கொள்வதைக் காணலாம். உதாரணத்திற்கு, சீனச் சமுதாயத்தினர் சீனப் பெயர்களைச் சூட்டுகின்றனர். தங்களின் மதத்தை உணர்த்துவதற்காக அந்த மதத்தில் விளங்கும் ஒரு பெயரை இணைத்துக் கொள்வார்கள். இதற்குச் சான்று வேண்டுமானால், “சான் கொக் லியோங்” என்பது சீனப் பெயர். அவர் கிறிஸ்துவ மதத்தைத் தழுவியவர் என்றால் மைக்கல் என்ற கிறிஸ்துவப் பெயரை இணைத்துக் கொள்வார்.
அதுபோலவே தமிழர்கள் கூட கருப்பையா, வெள்ளையன், சின்னசாமி, பெரியசாமி, மாரிமுத்து, மாணிக்கம், முத்தாயி, பெரியாயீ, சின்னாத்தா என்பன பெயர்களைத் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டுவது உண்டு. பழமை வாய்ந்த, புகழ்மிக்க காவியங்களில் வரும் அழகிய, இனிமையான பெயர்கள் இக்காலகட்டத்தில் பிள்ளைகளுக்குச் சூட்டப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, நெடுஞ்செழியன், குலசேகர பாண்டியன், சேரன் செங்குட்டுவன், குந்தவி, குணவதி போன்ற பெயர்கள் கவர்ச்சியாக உள்ளன. அதே சமயத்தில், இந்து மதத்தைப் பேணுவோர் தங்கள் மகன்களுக்கு இராமன், இலட்சுமணன், சங்கரன், கணபதி, கணேஷ் என்றும் பெண் பிள்ளைகளுக்குச் சீதா, ஜானகி, மாதவி என்றும் பெயரிடுவது ஒன்றும் ஆச்சரியமல்ல. இந்து மதத்தை விட்டு வேறு மதத்திற்குப் போவோர், கிறிஸ்துவ மதமானால் ஆண்டனி, பிலிப் என்ற கிறிஸ்துவப் பெயர்களை இணைத்துக் கொள்வார்கள்.
இஸ்லாத்தைத் தழுவினால் ஆனந்தன் தகப்பன் பெயர் முத்துசாமி என்பது முழுமையாக மாறி அகமது பின் அப்துல்லாவாக மாறிவிடும். ஆனால், சீனர்கள் இஸ்லாத்தைத் தழுவியப் போதிலும் தங்களின் குடும்பப் பெயரை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். எனவே, நமது மேலே குறிப்பிட்ட “சான் கொக் லியோங்” இஸ்லாத்தைத் தழுவியிருந்தால் அவர் இஸ்மாயில் என்ற இஸ்லாமியப் பெயரைத் தேர்ந்தெடுத்தால் “இஸ்மாயில் சான்” என்று அழைக்கப்படுவார்.
குடும்பப் பெயர் கொண்ட இந்தியர்கள் அதாவது ஐயர், ஐயங்கார், பிள்ளை, முதலியார், தேவர் போன்றோர் கிறிஸ்துவ மதத்தில் இணைந்து ஜோசப் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தால் ஜோசப் ஐயர், ஜோசப் ஐயங்கார், ஜோசப் பிள்ளை, ஜோசப் முதலியாராகப் பதிந்து கொண்டு வாழ முடியும். ஆனால், இஸ்லாத்தைத் தழுவும் ஐயரும், பிள்ளையும், முதலியாரும், தேவரும் தங்களின் பிறவி அடையாளத்தைத் துறந்து விடுகிறார்கள்.
பெயர் குறித்த இந்த ஆய்வு தேவைதானா என்று வினவத் தோன்றும். மதம் மாறும் ஒவ்வொருவரும் தங்கள் பூர்வீக அடையாளத்தை இழந்துவிடும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்று சுட்டிக்காட்டவே இந்தச் சிறிய முயற்சி. இதில் இனம், மதம், அரசியல் இல்லை. சில பெயர்களைக் கவனித்தால் அவை குழப்பத்தைத் தரலாம். குறிப்பாக, மத்தியக் கிழக்கு கிறிஸ்துவர்களும் யூதர்களும் இஸ்லாமியப் பெயர்களைக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. இதில் ஒரு கருத்து என்னவெனில் பெயர்கள் மதத்தோடு இணைந்தது அல்ல; பெயர்கள் மொழி, கலாச்சாரம் போன்றன கலந்ததாகும்.
யூதர்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் யாவரும் அபுரஹாம் வழித் தோன்றல்களாகும். அபுரஹாம் தான் இஸ்லாத்தில் இபுராஹீமாக விளங்குகிறது. இதுபோல் ஏராளம். பிரச்சினை கிடையாது. படித்தவர்கள், நல்ல அறிவு முதிர்ச்சியுடையவர்களுக்கு பெயர் ஒரு பிரச்சினை அன்று. ஆனால், ஒரு சிலர் சமுதாயத்தில் தங்களின் அந்தஸ்த்தை உயர்த்தும் பொருட்டு தங்களின் பெயர்களை முழுமையாக மாற்றிக் கொள்வதும் இயல்பே!
இப்பொழுது ஒரு சாதாரண மலையாளப் பெயர் ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருப்பது அதிசயம் தான். “குட்டி” என்ற சொல் (பெயர்) ஒரு பெயரின் இறுதியில் சேர்த்துக் கொள்ளப்படுவது வழக்கம். இந்தப் பழக்கம் அதாவது பெயரோடு சேர்த்துக் கொள்வது மதச் சார்பற்றதாகும்.
மலையாள இந்துக்கள் தங்களின் மகன்களுக்கு கிருஷ்ணன் குட்டி, கோவிந்தன் குட்டி, நாராயணன் குட்டி என்று பெயரிடுவது வழக்கம். அதுபோலவே, தங்களின் பெண் குழந்தைகளுக்கும் கல்யாணி குட்டி, மாதவி குட்டி என்றும் பெயரிடுவார்கள்.
மலையாளக் கிறிஸ்துவர்கள் தங்களின் ஆண் பிள்ளைகளை ஜார்ஜ் குட்டி, தோமஸ் குட்டி, ஜோன் குட்டி என்ற பெயர்களைப் பதிவு செய்கிறார்கள். அவர்கள் தங்களின் பெண் பிள்ளைகளுக்கு லில்லி குட்டி, அன்னி குட்டி என்று பெயரிடுவதும் உண்டு.
மலையாள முஸ்லிம்கள் இந்த மலையாளப் பாரம்பரியத்தை விட்டுக்கொடுப்பார்களா? மாட்டார்கள். அவர்கள் தங்கள் மகன்களுக்குப் பெயர் சூட்டும் போது முகம்மது குட்டி, இபுராஹீம் குட்டி, அப்துல்லா குட்டி என்று பெயரிடுகிறார்கள். இந்திய முஸ்லிம் லீக் இயக்கத்தின் தலைவரின் பெயர் குஞ்ஞாலிக் குட்டி. பிரபல இஸ்லாமியக் கல்விமானான அகமது குட்டி கனடாவில் பணிபுரிகிறார்.
இந்தியத் திரைப்பட உலகில் தனக்கென ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கும் மம்முட்டியின் உண்மையான பெயர் முகம்மது குட்டி இஸ்மாயில் பனிபரம்பில்.
தமிழர்கள் “குட்டி” என்ற அழகிய, அன்பான இணைப்பைக் கடைப்பிடிப்பதில்லை. ஆனால், அந்தச் சொல் வேறு பலவகையில் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். “கடைக்குட்டி”, குட்டிப்பயல், குட்டிச்சாத்தான் என்று பயன்படுத்துவது உண்டு.
பொதுவாக, எல்லா மதங்களைச் சேர்ந்த மலையாளிகள் “குட்டி” என்ற சொல்லுக்கு இனிமையும், அன்பையும் சேர்த்து அதற்குத் தனி மகிமை ஏற்றம் தருகிறார்கள் என்பதுதான் உண்மை. எனவே, குட்டி என்ற சொல்லின் தன்மை ஏற்றமுடையது எனின் தவறாகாது, அதில் களங்கம் இல்லை.