இராகவன் கருப்பையா – ‘மலேசியாவில் தேர்தல் – ஒரு கண்ணோட்டம்’ எனும் தலைப்பிலான ஒரு நூல் எதிர்வரும் மார்ச் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெளியீடு காணவிருக்கிறது.
சிலாங்கூரின் கோல சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள பெஸ்தாரி ஜெயா(பத்தாங் பெர்ஜுந்தாய்), இந்தியர் சமூக மண்டபத்தில் மாலை 4 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெரும் என நூலாசிரியர் முனைவர் இராஜகோபால் பொன்னுசாமி கூறினார்.
பெஸ்தாரி ஜெயா, ஹோப்ஃபுல் தோட்டத் தமிழ் பள்ளியில் தமது ஆரம்ப காலக் கல்வியைத் தொடக்கிய இராஜகோபால், அப்பள்ளி உருவாக்கிய முதல் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளரான அவர், நாட்டின் முதல் பொதுத் தேர்தல் தொடங்கி கடந்த 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தல் வரையில் விரிவான ஆய்வொன்றை இந்நூலில் செய்துள்ளார்.
இந்நாட்டில் தேர்தல் எப்படி ஆரம்பித்தது, அதன் பின்னணி என்ன, 1955ஆம் ஆண்டில் நடைபெற்ற அதன் முடிவுகள் எப்படி அமைந்தன போன்றவை பற்றியும் சுதந்திரத்தித்குப் பிறகு 1959ல் நடந்த தேர்தல் பற்றிய விவரங்களையும் உள்ளடக்கி இப்புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 1969ஆம் ஆண்டு நடைபெற்ற மிகவும் முக்கியமான தேர்தல் பற்றியும் அதன் பிறகு நடந்த மே 13 நிகழ்வுகள் பற்றியும் மிகவும் ஆழமாக விவரிக்கப்பட்டிருக்கிறது.
நாட்டின் 14வது பொதுத் தேர்தலும் அதன் பிறகு ஏற்பட்ட குளறுபடிகளும், 60 ஆண்டுகள் நாட்டினை வழி நடத்திய பாரிசானின் வீழ்ச்சி மற்றும் பாக்காத்தானின் வெற்றி பற்றியும் பல தகவல்கள் உள்ளன.
மகாதீர் நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவி விலகி அதன் பிறகு நாட்டில் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பு பற்றியும் மிகவும் ஆழமாக விவரிக்கப்பட்டுள்ள அதே வேளையில், நாட்டின் 15வது பொதுத் தேர்தலுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பல விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது இந்நூலில்.
தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட இழுபறிகள் பற்றியும், ஆட்சி அமைக்க முடியாத இக்கட்டான சூழல் பற்றியும், தொங்கு அரசாங்கம் பற்றியும் பிறகு மக்கள் மனதில் ஏற்பட்ட எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் ஆழமாக ஆய்வு செய்து, மக்களின் எண்ணங்களாக பல விடயங்கள் எழுதப்பட்டுள்ளன.
தேர்தலுக்குப் பிறகு மக்களின், குறிப்பாக இந்தியர்களின் எதிர்பார்ப்பும் ஏமாற்றம் பற்றியும், அன்வார் பிரதமரான பிறகு ஏற்பட்ட அவலங்கள் பற்றியும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர்களின் நடவடிக்கைகள் பற்றியும் எழுதப்பட்டுள்ளது.
தேர்தலுக்காக செலவு செய்யப்பட்ட 1.2 பில்லியன் ரிங்கிட் மற்றும் 6 மாநிலங்களுக்கு வீணாக செலவு செய்யப்பட்ட 43 மில்லியன் ரிங்கிட் செலவுகள் பற்றியும் எழுதப்பட்டுள்ளது.
அனைத்து தேர்தல் புள்ளி விவரங்களையும் உள்ளடக்கிய இந்நூல் அனைவருக்கும் பயன்படும் ஒரு தேர்தல் கையேடாக அமையும் என இராஜகோபால் குறிப்பிட்டார்.