‘டிலாராங் மெரொக்கோக்’-வை அறிமுகப்படுத்தியவர் மா.இராமையா

இராகவன் கருப்பையா – நாடலாவிய நிலையில், ‘டிலாராங் மெரொக்கோக்'(DILARANG MEROKOK), அதாவது “புகை பிடிக்கக் கூடாது” எனும் பதாகைகள் இல்லாத இடங்களை இப்போதெல்லாம் காண்பது மிகவும் அரிது.

அரசாங்க அலுவலகங்கள் மட்டுமின்றி, தனியார் பணிமனைகளிலும், பொது இடங்களிலும் இதர பல மூலை முடுக்குகளிலும் கூட புகை பிடிப்பதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது யாவரும் அறிந்த ஒன்றுதான்.

நாடு தழுவிய நிலையில் உள்ள உணவகங்களில் புகை பிடிப்பதற்கு தடைவிதிக்கும் சட்டம் கூட கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக  அமுலாக்கம் கண்டது. புகை பிடிக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் உணவக வாசலிலிருந்து 3 மீட்டர் தொலைவுக்கு அப்பால்தான் அதனை செய்ய முடியும்.

இத்தகைய இடங்களில் எல்லாம் ‘டிலாராங் மெரொக்கோக்’ எனும் பதாகைகள் மலாய், தமிழ், ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் இருக்கும். இதர மொழிகளில் இல்லாவிட்டாலும் மலாய் மொழியில் அவசியம் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

இந்த வாசகத்தை மலாய் மொழியில் ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் கண்டுபிடித்து அமுல்படுத்தியவர் ‘இலக்கிய குரிஸில்’ மா.ராமையா எனும் உண்மை நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கடந்த 1960ஆம் ஆண்டுகளில் ஜொகூர் மாநிலத்தின் தங்காக் நகரில் தான் பணியாற்றிய அஞ்சலகத்தில் ‘போஸ்ட் மாஸ்ட்டர்’ எனும் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த போதுதான் இந்த சுவையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அந்த தபால் நிலையத்தில் வாடிக்கையாளர்களை கவனிக்கும் முன்களப் பணியாளர்கள், குறிப்பாக இளசுகள், காலையில் அலுவலகம் வந்தவுடன் தங்களுடைய இருக்கைகளிலேயே அமர்ந்தவாறு அரட்டையடித்துக் கொண்டு புகை பிடிப்பது வழக்கமாக இருந்துள்ளது.

இதனை நீண்ட நாள்களாக கவனித்து வந்த மா.இராமையா, ஒரு பெரிய வெள்ளைத்தாளில் ‘DILARANG MEROKOK’ என்று கைப்பட எழுதி அங்குள்ள சுவற்றில் ஒட்டியுள்ளார். தனது ஊழியர்களின் மனம் நோகாமல் இருப்பதற்கு, “இங்கு வரும் வாடிக்கையாளர்களில் நிறைய பேர் புகைப் பிடிக்கிறார்கள். நமது உடல் நலத்தை அது பாதிக்கும். அவர்களுக்குதான் இந்த வாசகம்” என சூசகமாக விளக்கம் கூறியுள்ளார்.

அன்றைய தினத்திலிருந்து அந்த அஞ்சலகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அங்கு புகைப்பிடிப்பதை நிறுத்திக் கொண்டனர். இதனைக் கண்ணுற்ற ராமையாவின் ஊழியர்களும் இயல்பாகவே அலுவலகத்தில் புகைப்பிடிப்பதை நிறுத்திக் கொண்டனர்.

இந்தத் தொடக்கம்தான் நாளடைவில் நாடு முழுவதும் பரவி கிட்டதட்ட எல்லா அலுவலகங்களிலும் ‘டிலாராங் மெரொக்கோக்’ எனும் வாசகத்திற்கு தடமளித்து நம் அனைவருடைய உடல் நலத்திற்கும் வழிக்கொணர்ந்துள்ளது.

இவ்விவரங்களை பிற்காலத்தில் ராமையாவே  தனது நண்பர்கள் சிலரிடம் விவரித்துள்ளார். மிகவும் கண்டிப்பான குணமுடைய அவரின் இச்செயல்  நாடலாவிய நிலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அக்காலக் கட்டத்தில் தங்காக் நகரில் அஞ்சலகத் தலைமைப் பொறுப்பில் மிகவும் சிறப்பாக சேவையாற்றி பிரபலமடைந்த அவரை அந்த வட்டாரத்தில் எல்லாருமே ‘மாஸ்ட்டர்’ என்றுதான் அழைப்பார்கள்.

கடந்த 1946ஆம் ஆண்டில் எழுத்துலகில் கால் பதித்த அவர் தனது வாழ்நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் 500கும் மேற்பட்ட சிறுகதைகளையும் 50கும் மேற்பட்ட கவிதைகளையும் 12 நாவல்களையும் எழுதி சாதனைப் படைத்துள்ளார்.

எழுத்துலகிற்கு இவர் ஆற்றிய பங்கிற்கு அங்கீகாரமாக அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று இலக்கியத்துறையில் இவருக்கு ‘முனைவர்’ பட்டமளிப்பு கௌரவித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மலேசிய தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் குறிப்பிடத்தக்கவரான மா.இராமையா கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி தமது 86ஆவது வயதில் காலமானார்.