ஆட்டுக் கறியும் வாக்கு வேட்டையும்

இராகவன் கருப்பையா — கடந்த புதன்கிழமை, தொழிலாளர் தினத்தன்று கெர்லிங் வட்டாரத்தில் மிகப்பெரிய விருந்து நிகழ்ச்சி யொன்றை உலு சிலாங்கூர் தொகுதி ம.இ.கா. ஏற்பாடு செய்திருந்தது.

ஆட்டுக் கறி சமையலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வழங்கப்பட்ட இவ்விருந்து நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து சிறப்பித்ததாக கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான பக்காத்தானின் பிரச்சாரக் குழ நிர்வாகி வேய்ன் ஒங் கூறினார்.

இந்த வட்டாரத்தில் உள்ள வாக்காளர்களில் நிறைய பேர் யாருக்கு வாக்களிப்பது என்று இன்னமும் முடிவு செய்யாமல் இருப்பதாக சிலாங்கூர், பாலாக்கோங் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜ.செ.க.வின் ஒங் குறிப்பிட்டார்.

விருந்துக்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கப் போனால் அதிகமானோர் கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பார்கள் எனும் நம்பிக்கை இருப்பதாக அவர் மேலும் சொன்னார்.

நம் சமூகத்தினர் இன்னமும் ஆட்டுக் கறிக்கு ஓட்டு போடும் சமூகமா? என்ற வினாவும் எழுந்துல்ளது என ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளர் ஒருவர் மன வேதனையுடன்  தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அரசியல் கட்சிகள் மக்களுக்கான தங்களுடைய சாதனைகளை பட்டியலிட்டு, சம்பந்தப்பட்ட தொகுதியை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து விளக்கமளித்துதான் வாக்கு சேகரிக்க வேண்டுமே தவிர ஆட்டுக் கறியைக் காட்டி நம் சமூகத்தினரை வசீகரப்படுத்தும் முயற்சியில் அவர்களை கேவலப்படுத்தக் கூடாது என்றார் அவர்.

கடந்த காலங்களில் உலு சிலாங்கூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தலின் போது ம.இ.கா. வேட்பாளர் அங்கு போட்டியிட்ட போதும் இதே நிலைதான் அங்கு நிகழ்ந்துள்ளது.

வாக்காளர்களின் உணர்வுகளை வெகுவாக பாதித்த அந்த ஆட்டுக் கறி விவகாரத்தை  அச்சமயத்தில் நாடு தழுவிய நிலையில் நிறைய பேர் கண்டித்து கருத்து பரிமாற்றம் செய்தனர்.

நம் இனத்தை நாமே தரம் தாழ்த்தி நடத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என பதவி ஓய்வு பெற்ற அந்த விரிவுரையாளர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலின் போது நம் சமூகத்திற்கென பக்காத்தான் ஹராப்பான் அள்ளித் தெளித்த வாக்குறுதிகளில் பலவற்றை அக்கூட்டணி இன்னமும் நிறைவேற்றாமல் உதாசீனப்படுத்தி வருவதால் விரக்தியின் உச்சத்தில் நாம் இருப்பதை அனைத்துத் தரப்பினரும் நன்கு உணர்ந்துள்ளனர்.

இதற்கிடையே “மலாய்க்காரர்களுக்கு அரசாங்கம் வழங்கும் உதவிகளைப் பார்த்து இந்திய சமூகம் கோபப்படவோ பொறாமைப்படவோ கூடாது,” என பிரதமர் செய்த ஒரு திடீர் அறிவிப்பு நம் சமூகத்தினரிடையே பெருத்த அதிருப்தியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது மட்டுமின்றி நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

எது எப்படியோ கெர்லிங் வாக்காளர்கள் சுயநல அரசியல்வாதிகளின் வெற்று வாக்குறுதிகளுக்கு இனிமேலும் சோரம் போகாமல், ஆட்டுக்கறியையும்  தாண்டி சுயமாக மீளாய்வு செய்து தங்களுடைய ஜனநாயகக் கடப்பாட்டை நிறைவேற்ற வேண்டும்.