அரசியல்வாதிகளின் சிறப்பு அதிகாரிகள் பொது மக்களை அனுசரிக்க வேண்டும்

இராகவன் கருப்பையா – அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ‘சிறப்பு அதிகாரி’களை நியமனம் செய்து குறிப்பிட்ட சில பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படைப்பது அண்மைய காலமாக வழக்கத்தில் உள்ள ஒன்றாகிவிட்டது.

அரயல்வாதிகளில் பலருக்கு, மூத்த செயலாளர், அரசியல் செயலாளர், அந்தரங்கச் செயலாளர், பத்திரிகை செயலாளர் போன்ற பல்வேறு அதிகாரிகள் பணியில் உள்ள போதிலும், இவர்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு ‘சிறப்பு அதிகாரி’ எனும் ஒருவரும் தற்போது உலா வருவதை நாம் காண்கிறோம்.

அவர்களுடைய பொதுவான பணி என்னவென்று துல்லியமாக நமக்குத் தெரியாது எனும் போதிலும்  ஒவ்வொருவருக்கும் இது மாறுபட்ட நிலையில் இருப்பதைப் போல் உள்ளது. எனினும் அவர்களுடைய முதன்மைப் பணி சம்பந்தப்பட்ட அந்த அரசியல்வாதிகளுக்கும் பொது மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருப்பதுதான் என்பது மட்டும் நமக்கு தெளிவாகத் தெரிகிறது.

ஏனெனில் ஏதாவது உதவிக்கு அல்லது சந்திப்புறுதி ஒன்றை ஏற்படுத்துவதற்கு தங்களை அணுகுவோரிடம், “என் சிறப்பு அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள்” என்றுதான் பல வேளைகளில் அரசியல்வாதிகள் பணிக்கின்றனர்.

பெரும்பாலான சமயங்களில் தங்களுக்கு அறிமுகமானவர்களிடம் அரசியல்வாதிகள் இப்படி நடந்து கொள்வதில்லை என்பது நமக்குத் தெரியும். அறிமுகம் இல்லாதவர்களுக்குதான் இந்த பரிதாப நிலை.

இத்தகைய சூழலில் இந்த ‘சிறப்பு அதிகாரி’களில் பலருடைய போக்குதான் நமக்கு வியப்பாகவும், ஏமாற்றமாகவும், சில சமயங்களில் எரிச்சலூட்டும் வகையிலும் கூட உள்ளது.

ஏனென்றால் தங்களுடைய முதலாளிகளுக்கும் பொது மக்களுக்கும் இடையே பாலமாக இருக்க வேண்டிய அவர்கள் காட்டும் பந்தாவினால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

அவர்களில் சிலர் தங்களுடைய முதலாளிகள் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் மாயையான செல்வாக்கையும் அதற்கேற்ற சொந்த பலத்தையும் காட்டும் வகையில் அதிகாரமாகக் கூட நடந்து கொள்கின்றனர்.

மேலும் சிலர் பொது மக்களின், குறிப்பாக தங்களுக்கோ தங்களுடைய முதலாளிகளுக்கோ அறிமுகம் இல்லாதவர்களின் தொலைபேசி அழைப்புகளைக் கண்டு கொள்வதே இல்லை.

அரசியல்வாதிகளுக்கும் உதவி நாடி வருவோருக்கும்   இடையில் இப்படி தடங்களாக குறுக்கே நின்றால் எப்படிதான் பொது மக்களின் பிரச்சனைகள் தீரும்?

குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில், அல்லது அவ்வளவு முக்கியம் இல்லை என்று கருதும் வைபவங்களில் கலந்து கொள்ள இயலாத அரசியல்வாதிகள் சில வேளைகளில் தங்களுடைய பிரதிநிதியாக இந்த ‘சிறப்பு அதிகாரி’களை அத்தகைய நிகழ்வுகளுக்கு அனுப்புகின்றனர்.

அங்கு அவர்களுக்கு ஒரு பிரமுகருக்கு உண்டான அத்தனை மாலை மரியாதைகளும் வழங்கப்படுகிறது. இதனாலோ என்னவோ இந்த ‘சிறப்பு அதிகாரி’களுக்கு தலை கனம் வரம்பு மீறி போய்விடுகிறது.

அமைச்சர்களின்  பதவிகளே நிரந்தரமான ஒன்றல்ல எனும் சூழல் நிலவும் போது, இவர்களுடைய சேவை காலமும் தற்காலிகமான ஒன்றுதான் எனும் நிதர்சனத்தை இந்த ‘சிறப்பு அதிகாரி’கள் உணர வேண்டும்.

ஏதோ பெரிய பதவி கிடைத்துவிட்டதைப் போல தலை கால் தெரியாமல் ஆடக் கூடாது. அரசியல்வாதிகளின் வேலையே மக்களுக்கு சேவையாற்றுவதுதான். எனவே அவர்களுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருக்க வேண்டிய கடப்பாட்டை இந்த ‘சிறப்பு அதிகாரி’கள் மறந்துவிடக் கூடாது.

தங்களுடைய முதலாளிகளுக்கு மேடைகளில் போர்த்தப்படும் பொன்னாடைகளையும் அணிவிக்கப்படும் மாலைகளையும் அவர்களுடைய கார்களில் கொண்டு போய் வைப்பதையும் தாண்டி, பொது மக்களின் பிரச்சனைகளை தீர்க்க உதவும் நிலையிலும் அவர்கள் உள்ளனர் என்பதுதான் உண்மை.

எனவே அரசியல்வாதிகளுக்கும், உதவி நாடி வரும் சாமானிய மக்களுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்தி அவர்களுடைய பிரச்சனைகளை களைய உதவ வேண்டுமே தவிர, இந்த ‘சிறப்பு அதிகாரி’கள் தங்களுடைய பந்தா உணர்வாலும் அலட்சியப் போக்கினாலும் உறவை துண்டித்துவிடக் கூடாது.