இராகவன் கருப்பையா – கடந்த 24 நாள்களில் நாட்டுக்காக சேவையாற்றிய வேளையில் மொத்தம் 12 வீரர்களை பலி கொண்ட 2 சம்பவங்கள் நம்மை சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.
ஆகக் கடைசியாக இன்று 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடியற்காலை 2.30 மணியளவில் ஜொகூரின் உலு திராம் நகரில் உள்ள காவல் நிலையமொன்றில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் என்று நம்பப்படும் ஒரு சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. இத்தாக்குதலில் 2 காவல்படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி பேராக், லுமுட் நகரில் நிகழ்ந்த ஹெலிகொப்டர் விபத்தொன்றில் அரச மலேசிய கடற்படையைச் சேர்ந்த 10 வீரர்கள் மரணமடைந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. சுமார் 4 மாதங்களுக்கு முன் மணமுடித்த ஹெலிகொப்டர் விமானியான 31 வயதுடைய சிவசுதனும் அவர்களில் ஒருவர்.
இவர்கள் அனைவருமே நாட்டுக்காக சேவையாற்றிக் கொண்டிருந்த போதுதான் இப்படிப்பட்ட அசம்பாவிதங்களில் பலியானார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
எனவே இத்தகைய சூழலில் மரணத்தைத் தழுவும் தற்காப்புப் படையினரை தேசிய வீரர்களாக அங்கீகரித்து அவர்களுக்கென பிரத்தியேகமானதொரு ஓய்வூதியத் திட்டத்தை(பெஷன்) அரசாங்கம் அமல்படுத்த வேண்டும்.
இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டு நிரந்தர முடத்தன்மைக்கு உள்ளாகும் வீரர்களையும் இதே நிலையில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவர்களை தேசிய வீரர்கள் என வாயளவில் மட்டும் பாராட்டி விட்டு வெறுமனே இருந்து விடக் கூடாது. ஏனெனில் இவர்கள் நாட்டுக்காக தியாகம் செய்து உயிர் நீத்தவர்கள்.
நடப்பில் இருக்கக் கூடிய ஓய்வூதியத் திட்டம், காப்புறுதி, சொக்சோ, மற்றும் இதர பல திட்டங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு, சேவையில் இருக்கும் போது மரணமடையும் வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு தனிப்பட்ட ஒரு உதவித் திட்டத்தை வரைவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.
உதாரணத்திற்கு இன்றைய அசம்பாவிதத்தில் உயிரிழந்த 2 காவல்துறை வீரர்களும் 21 மற்றும் 22 வயதுடையவர்கள் என்று நம்பப்படுகிறது. ஏறத்தாழ 2 ஆண்டுகளுக்கு முன்தான் காவல்துறையில் சேர்ந்த இந்த இருவரும் ‘கொன்ஸ்தபல்’ எனும் தரவரிசையில் உள்ளவர்கள்.
இவர்களுக்கும் எண்ணற்றத் திட்டங்களும் கனவுகளும் இருந்திருக்கும். இவர்களுடைய வருமானத்தை நம்பியிருக்கும் குடும்ப உறுப்பினர்களும் பல எதிர்காலத் திட்டங்களை வகுத்திருக்கக் கூடும்.
எனவே இதுபோன்ற நிலையில் மரணிக்கும் வீரர்களின் தியாகத்திற்கு அங்கீகாரமாக அவர்களுடைய குடும்பங்களுக்கு நிரந்தர வருமானத்தை இந்த சிறப்புத் திட்டம் உருவாக்கிக் கொடுக்க வகை செய்யும்.