தேர்தல் வாக்குறுதிகள் மீறல்: இயல்பான மக்களுக்கு இயல்பான ஒன்று!

இராகவன் கருப்பையா – நம் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஏறத்தாழ 56 ஆண்டுகள் வரையில் நடந்தேறிய அத்தனை பொதுத் தேர்தல்களின் போதும் பெரும்பாலான மக்கள் தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி அவ்வளவாகக் கருதியதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் எல்லா காலங்களிலும் தேசிய முன்னணிதான் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். விரும்பியோ விரும்பாமலோ அதனை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் எனும் சூழல் நிலவியது.

இருப்பினும் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதத்தில் நிலைமை பெரிய மாற்றம் கண்டது எல்லாருக்கும் தெரியும். அந்த சமயத்தில் நமக்கெல்லாம் ஒரு விடிவெள்ளியாகக் காட்சியளித்தார் முன்னாள் பிரதமர் மகாதீர்.

எதிர் கட்சிகளோடு சேர்ந்து ஆளும் தேசிய முன்னணியைக் கவிழ்க்க தனிப்பட்ட முறையில் அவருக்கு உள்நோக்கம் இருந்த போதிலும் 60 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடிய சாத்தியம் பெரும்பாலோரின் கண்களிலும் தென்பட்டது உண்மைதான்.அதனால்தான் தேர்தல் வாக்குறுதிகள் உள்பட அச்சமயத்தில் மகாதீர் அள்ளித் தெளித்த அத்தனை விஷயங்களையும் வெகுசன மக்கள் நம்பினார்கள்.

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி தன் கைக்கு வந்த மறுகணமே முன்னாள் பிரதமர் நஜிப் உள்பட நாட்டின் ‘மேகா’ ஊழல்வாதிகளை வளைத்துப் பிடிக்க வகை செய்தது நமக்கெல்லாம் மகிழ்சியளித்த போதிலும் இதர வாக்குறுதிகளில் திடீரென அவர் பல்டியடித்தது நம்மை வியப்பில் ஆழ்த்தியது.

“தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றும் ‘பைபல்’ அல்ல,” என கொஞ்சமும் நா கூசாமல் அவர் குறிப்பிட்டது மட்டுமின்றி, “தேர்தல் வாக்குறுதிகள் கல்லில் எழுதப்படவில்லை,” என எக்காளமாக பேசித்திரிந்தது எல்லாருக்குமே அதிர்ச்சிதான்.

வாக்குறுதிபடி 2 ஆண்டுகள் கழித்து பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைக்கத் தவறியதும் மகாதீர் மீதான மக்களின் அதிருப்தியை எல்லைக்கே கொண்டுச் சென்றது எனலாம்.

இருப்பினும் பிறப்புப் பத்திரங்களின்றி பரிதவித்துக் கொண்டிருக்கும் நம் சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானோரில் சுமார் 3,000 பேரின் பிரச்சனைகளைத் தீர்த்தது மட்டுமின்றி ‘டோல்’ கட்டணங்களில் 18% கழிவு வழங்க ஏற்பாடு செய்ததையும் நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.

ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான அன்வாரின் நிலைப்பாடு என்ன என்பதுதான் நிறைய பேருடைய, குறிப்பாக இந்திய சமூகத்தினரின் கேள்வியாக உள்ளது.

அவருடைய பி.கே.ஆர். கட்சியைச் சேர்ந்த 2 இந்திய துணையமைச்சர்களான சரஸ்வதியும் ரமணனும் அவ்வப்போது அங்குமிங்கும் அவருடைய தலைமைத்துவத்தை பாராட்டி நிலைமையை மழுப்பி வருகிற போதிலும் நம் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலோர் அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாகவே கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

இந்தியர்களை அன்வார் கவனிக்கத் தவறிவிட்டார் எனும் குறைபாடு ஒரு புறமிருக்க, ‘டோல்’ கட்டணம் தொடர்பாகவும் பெட்ரோல் விலை குறித்தும் அவர் வழங்கிய வாக்குறுதிகள் அவருக்கு ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ, மக்கள் அவற்றை இன்னும் மறக்கவில்லை.

“நான் பிரதமரான மறுநாளே ‘டோல்’ கட்டண வசூலிப்புகள் நிறுத்தப்படும், நான் பிரதமரானவுடன் பெட்ரொல் விலை குறைக்கப்படும்,” என்றெல்லாம் தேர்தல் பிரச்சாரங்களின் போது சூளுரைத்த அவர், தற்பொது அவற்றைப் பற்றியெல்லாம் வாய் திறப்பதே இல்லை.

இவற்றுக்கு மத்தியில், அடுத்த மாத வாக்கில் நம் நாட்டில் பெட்ரோல் விலை அதிகரிக்கக் கூடும் என சிங்கப்பூர் ஊடகம் ஒன்று அண்மையில் வெளியிட்ட தகவல் நமக்கெல்லாம் ஒரு அதிர்ச்சிதான்.

இந்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த ஆயிரக்கணக்கான நம் சமூகத்தினருக்கு பல்வேறு காரணங்களினால் பிறப்புப் பத்திர விவகாரம் இன்னமும் ஒரு இடியப்ப சிக்கலாகத்தான் உள்ளது.

இதன் தொடர்பாக மகாதீரின் 22 மாதகால ஆட்சியின் போது மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகளைப் போல தற்போதைய அரசாங்கம் என்ன செய்கிறது என்று தெளிவாகத் தெரியவில்லை.

டோல் கட்டண வசூலிப்பை முற்றாக நிறுத்தாவிட்டாலும் மகாதீர் செய்ததைப் போல குறிப்பிட்ட விழுக்காட்டுக்குக் குறைத்திருந்தாலும் வெகுசன மக்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள்.

எனவே அரசியல்வாதிகளின் இத்தகைய போக்கை வைத்துப் பார்க்கப் போனால், “தேர்தல் வாக்குறுதிகளை தாராளமாக மீறலாம், அதில் தவறே இல்லை, யார் என்ன செய்ய முடியும்,” என பொது மக்களுக்கு அவர்கள் சவால் விடுவதைப் போல்தான் உள்ளது.

அப்படியானால் இத்தகைய நிலைப்பாடு அரசியல்வாதிகளுக்கு இயல்பான ஒன்றுதானோ என்று நம்மை எண்ணத் தோன்றுகிறது. மக்களும் அதை இயல்பு என்று ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளனர்.