என்னைக் கடத்திய நொடிகள்: வீர.இராமன் நூல் வெளியீடு

~இராகவன் கருப்பையா – நம் நாட்டின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான ஜொகூரைச் சேர்ந்த அ.வீர.இராமன் ‘என்னைக் கடத்திய நொடிகள்’ எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் ஒன்றை வெளியீடு செய்ய உள்ளார்.

இந்த நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 23/6/24 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ஜொகூர், சிம்பாங் ரெங்காமில் உள்ள தேசிய வகை துன் டாக்டர் இஸ்மாயில் தோட்டத் தமிழ் பள்ளி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நீண்ட நாள்களாக தமிழ் எழுத்துத் துறையில் தடம் பதித்து வரும் 78 வயதுடைய இலக்கியவாதியான வீர.இராமன், கவிதைத் துறையிலும் கோலோச்சி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஊசி குத்தத்தான் செய்யும்’ மற்றும் ‘அக்கினி குஞ்சுகள்’ ஆகிய இரு கவிதைத் தொகுப்பு நூல்களை ஏற்கெனவே அவர் வெளியீடு செய்துள்ளார்.

ஏறத்தாழ 3 ஆண்டுகள் மட்டுமே ஆரம்பப் பள்ளிக்குச் சென்ற அவர் குடும்ப சூழல் காரணமாகக் கல்வியை தொடர இயலாத நிலையில் தமிழ் மொழி மீதான ஆளுமையையும் எழுத்துத் துறை வன்மையையும் சுயமாகவே வளர்த்துக் கொண்டார்.

போக்கு வரத்து வசதிகள் இல்லாத காலக்கட்டதில் தாம் வசித்த தோட்டத்திலிருந்து தொலைவில் உள்ள நகருக்கு மணிக்கணக்கில்  நெடுந்தூரம் நடந்தே சென்று தமிழ் மொழி சஞ்சிகைகளையும் புத்தகங்களையும் வாங்கி வந்து வாசித்து தமது புலமைக்கு செறிவூட்டியுள்ளார் வீர.இராமன்.

வாலிபக் கவிஞர் வாலியின் படைப்புகளைப் போல இவர் புனையும் கவிதைகள் மற்றும் எழுதும் கட்டுரைகளிலும் வாலிபத்தன்மை சற்று அதிகமாகவே இருக்கும்.

‘ஊசி குத்தத்தான் செய்யும்’  எனும் நூலில் உள்ள கவிதைகளில் ஒன்றில் ‘முத்தப் பசியாறல்’ எனும் புதியதொரு வார்த்தையை புகுத்தி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள் உள்பட தமிழ் சார்ந்த நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் பெரும்பாலான சமயங்களில் அவற்றுக்கு ஆதரவு வழங்கும் வழக்கத்தைக் கொண்டுள்ள இவர் நாடலாவிய நிலையில் எண்ணற்ற அபிமான வாசகர்களைக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கெடா மாநில எழுத்தாளர் இயக்கத் தலைவர் மாரி சச்சிதானந்தம், விரிவுரையாளர் முனைவர் க.உதயகுமார், தென்றல், வானம்பாடி ஆசிரியர் வித்யாசாகர், ‘புத்ரி’ நிறுவன உரிமையாளர் பரமசிவம், தலைமையாசிரியர் கணேஷ் மற்றும் குளுவாங் வழக்கறிஞர் கீ.சீலதாஸ் உள்பட எண்ணற்ற பிரமுகர்கள் இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.