இராகவன் கருப்பையா – முட்டை விலைகள் குறைக்கப்படுவதாக அண்மையில் அரசாங்கம் அறிவித்தது வரவேற்கத்தக்க ஒரு முன்னெடுப்புதான் எனும் போதிலும் வெகு சன மக்களுக்கு அது மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.
நம் நாட்டில் கிட்டதட்ட அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் புகழ் பெற்ற ஒரு உணவுப் பொருளாக விளங்கும் முட்டையின் விலையில் தலா 3 காசு குறைக்கப்பட்டது.
இருந்த போதிலும் முன்னதாக மேற்கொள்ளப்பட்ட டீசல் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள எதிர்மறையான தாக்கமானது, இந்த முட்டை விலை குறைப்பின் உற்சாகத்தை குன்றச்செய்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
டீசல் விலை அதிகரிப்பு அத்தியாவசியமான ஒன்றுதான். ஏனெனில் அந்த எரிபொருளுக்கான அரசாங்க உதவித் தொகையை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கடத்தல் பேர்வழிகளின் நடவடிக்கைகளினால் அன்றாடம் மில்லியன் கணக்கான ரிங்கிட் இழப்பு எற்படுவதாக கூறப்படுகிறது.
இந்த விலை உயர்வினால் உண்மையான டீசல் பயனீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு பல்வேறு உதவித் திட்டங்களையும் அரசாங்கம் அமுல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இருந்த போதிலும் சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினருக்கு அத்தகைய உதவிகள் இன்னமும் சென்று சேரவில்லை என்று நம்பப்படுகிறது. இதனால் அவர்கள் விரக்தியடைந்துள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலில் அதன் தாக்கம் சங்கிலித் தொடராக விரிவடைந்து பொது மக்களை பாதிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வினால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களின் சுமையை இது மேலும் மோசமாக்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
உதாரணத்திற்கு சந்தைகளுக்கு காய்கறிகளோ மீன்களையோ அனுப்பும் சுமையுந்து உரிமையாளர்களுக்கு உதவித் தொகை சென்றடையவில்லை என்றால் அவர்கள் என்னதான் செய்வார்கள்?
டீசல் விலை உயர்வின் தாக்கத்தை சமாளிப்பதற்கு அந்த உணவுப் பொருள்களின் விலைகளைதான் அவர்கள் அதிகரிப்பார்கள். இதனால் பாதிக்கப்படுவது பயனீட்டாளர்கள்தான்.
ஆக முட்டை விலையை குறைத்துவிட்டோம், மக்களுக்கு இனி சிரமம் இருக்காது என்று அரசாங்கம் எண்ணக் கூடாது. மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் இதர அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை குறைப்பதற்கும் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
டீசல் விலை அதிகரிப்போடு ஒப்பிடும் போது முட்டை விலை குறைப்பு வெறும் தூசுதான். இந்த விலை குறைப்பை மக்கள் கொண்டாடி மகிழ்வார்கள் என்று எதிர்பார்ப்பதில் நியாயமில்லை, அர்த்தமுமில்லை.
உதாரணத்திற்கு ஒரு உணவகத்தில் முட்டையோடு சமைக்கப்படும் ‘நாசி கோரெங்’ அல்லது ‘மீ கோரெங்’ போன்றவற்றின் விலையில் 3 காசுகள் குறைக்கப்படுமா எனும் கேள்வி எழுகிறது. அப்படியே குறைந்தாலும் அந்த உணவை உட்கொள்பவருக்கு எப்படிப்பட்ட தாக்கத்தை அது ஏற்படுத்தும்?
சாமானிய மக்களைச் சேர்ந்த ஒரு குடும்பம் மாதம் ஒன்றுக்கு 20 முட்டைகளை வாங்கினாலும் அவர்கள் மிச்சப்படுத்துவது மொத்தம் 60 காசுகள்தான். ஆனால் இதர பொருள்களின் விலை உயர்வுகளை சமாளிக்க முடியாமல் அவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியிருப்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளதா தெரியவில்லை.
எனவே முறையான அமுலாக்கம் இல்லாத நிலையில் டீசல் விலை அதிகரிப்பினால் மக்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிப்படையாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.
அதோடு, முட்டையைப் போல இதர உணவுப் பொருள்களின் விலைகளையும் அரசாங்கம் கட்டுப்படுத்துவது அவசியமாகும்.