இராகவன் கருப்பையா- லங்காவி தீவில் கடந்த 1800களில் மசூரி எனும் ஒரு பெண் ‘நடத்தை கெட்டவள்’ என குற்றஞ்சாட்டப்பட்டு கொல்லப்படுவதற்கு முன் அத்தீவு மீது அவள் சாபமிட்ட வரலாறு நாம் அறிந்ததுதான்.
நிரபராதியான தம் மீது அநியாயமாக இத்தண்டனை நிறைவேற்றப்படுவதால், “இத்தீவு ஏழேழு தலைமுறைக்கும் செழிக்காமல் பின் தங்கிய நிலையிலேயே கிடக்கும்,” என அவள் சாபமிட்டதாக கூறப்படுகிறது.
மசூரி குறிப்பிட்ட அந்த ஏழு தலைமுறை சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் முடிவடைந்துவிட்டதாகக் கூறப்படுகிற போதிலும் லங்காவி தற்போது பிற்போக்கு சிந்தனையுடைய சில அரசியல்வாதிகளின் கைகளில் மாட்டிக் கொண்டு படும் பாட்டை பார்க்கப் போனால் அவருடைய சாபம் இன்னும் தீரவில்லை என்றே நினைக்கக் தோன்றுகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து ஏறத்தாழ 2 வருடங்களுக்கு கோறனி நச்சிலின் தாக்கத்தினால் முடங்கிக் கிடந்த அத்தீவு தனது பழைய பொழிவை மீண்டும் எட்டிப் பிடிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால் அத்தீவு குறித்து அண்மையில் நாடாளுமன்றத்தில் கருத்துரைத்த சுற்றுலாத் துறை துணையமைச்சர் கைருல், லங்காவியை முஸ்லிம்களுக்கே உரிய ஒரு சுற்றுப்பயணத் தளமாக மாற்றப்படுவதற்கு பரிந்துரை செய்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
தாராள மயக் கொள்கைகளைக் கொண்டு மில்லியன் கணக்கான அனைத்துலக சுற்றுப்பயணிகளை ஈர்த்துக் கொண்டிருக்கும் அண்டை நாட்டு சுற்றுலாத் தளங்களான இந்தோனேசியாவின் பாலி, தாய்லாந்தின் கிராபி, புக்கெட், பட்டாயா மற்றும் கோ சமுய் போன்றவற்றோடு போட்டியிடுவதில் லங்காவி பெரும் சவாலை எதிர்நோக்குகிறது என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான்.
அப்படியிருந்தும் லங்காவிக்கான சுற்றுப்பயணிகளின் வருகையை மேலும் குறுகலாக்கும் தூர நோக்கு இல்லாத ஒரு யோசனையை கைருல் பரிந்துரைத்தது வியப்பாகத்தான் உள்ளது.
அவருடைய யோசனை அமுலாக்கம் கண்டால் முஸ்லிம்களின் ஆதரவு பெருகக் கூடும் எனும் போதிலும் அமெரிக்க, ஐரோப்பிய, இந்திய, சீன சுற்றுப் பயணிகளை நாம் இழக்கக் கூடிய சாத்தியம் அதிகமாகவே உள்ளது.
நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகத் துரிதமாக வருமானத்தை ஈட்டும் துறைகளில் அயல்நாட்டு சுற்றுப் பயணிகளின் வழி கிடைக்கும் பணம்தான் முன்னணி வகிக்கிறது என்பதை கைருல் அறிவாரா தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் நானும் பேசிவிட்டேன் என்பதற்காக பிற்போக்குடைய ஒரு யோசனையை பரிந்துரைத்து பலருடைய கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறார்.
வழக்கமாக பாஸ் கட்சியைச் சேர்ந்த தீவிர போக்குடைய ஒரு சில அரசியல்வாதிகள்தான் இப்படியெல்லாம் பரிந்துரை செய்வார்கள். ஆனால் அவர்கள் யாரும் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது சற்று வியப்புதான். அது மட்டுமின்றி, பாஸ் கட்சியின் கெடா மாநில மந்திரி பெசார் சனூசி இக்கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவேகமாக பேசியுள்ளார்.
“எங்கள் மாநிலத்திற்கு பொன் முட்டையிடும் வாத்தைப் போல உள்ள லங்காவி தீவை அப்படியெல்லாம் நாங்கள் மாற்றமாடோம். எல்லா சுற்றுப் பயணிகளையும் சரி சமமாக நாங்கள் வரவேற்போம்,” என்று அதிரடியாக ஒரு அறிவிப்பை செய்த அவர் கைருலின் யோசனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மற்றொரு வேடிக்கை என்னவென்றால் வரி விலக்கைக் கொண்டுள்ள அத்தீவில் தாராளமாக மதுபானங்களை அருந்துவதற்கும் இஷ்டபடி உடை அணிவதற்கும் அதிகமான கட்டுப்பாடுகள் விதித்தால் சுற்றுப் பயணிகளின் வருகையை அது பாதிக்கும் என சுற்றுலாத்துறை அமைச்சர் தியோங் கிங் சிங் அண்மையில்தான் குறிப்பிட்டிருந்தார்.
இவ்விவகாரத்தில் அமைச்சருக்கும் துணையமைச்சருக்கும் ஒருங்கிணைந்த கருத்து இல்லை என்பதையே இது புலப்படுத்துகிறது. அமைச்சரின் பார்வை நாட்டின் பொருளாதார வளப்பத்திற்கு வித்திடும் வேளையில் துணையமைச்சரின் கூற்று மசூரியின் சாபத்திற்கு உரமிடுவதைப் போல் உள்ளது.