மெட்ரிக்குலேஷன் பயில தாமதமாக இடம் கிடைத்த மாணவர்கள்  கதியை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும்  

~இராகவன் கருப்பையா – எஸ்.பி.எம். தேர்வுகளில் 10ஏ பெற்றுள்ள மாணவர்களை மெட்ரிக்குலேஷன் வகுப்புகளில் சேர்ப்பதில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகளை யார் களைவார் என்று தெரியவில்லை.

அத்தேர்வுகளில் 10ஏ பெறும் அனைத்து மாணவர்களுக்கும் அடுத்த ஆண்டிலிருந்து மெட்ரிக்குலேஷன் வகுப்புகளில் கட்டாயம் இடம் கிடைக்கும் என பிரதமர் அன்வார் அண்மையில் அறிவித்தது நாம் எல்லாரும் அறிந்ததே.

இப்புதிய நடைமுறை அடுத்த ஆண்டுதான் அமலாக்கம் காணும் என அறிவிக்கப்பட்ட போதிலும் இவ்வாண்டிலேயே அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

எனினும் கடந்த மாத இறுதியில் வகுப்புகள் தொடங்கிவிட்ட நிலையில் 10ஏ பெற்றுள்ள நம் சமூகத்தைச் சேர்ந்த எண்ணற்ற மாணவர்கள் இன்னமும் அந்த வகுப்புகளில் இடம் கிடைக்காமல் தத்தளிக்கின்றனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் அடுத்தடுத்த சேர்க்கைகளில் அவர்களுக்கு இடம் கிடைக்கும் என்றும் நமது அரசியல்வாதிகள் ஆலோசனை கூறுகின்றனர்.

ஆனால் முதல் சேர்க்கையில் இடம் கிடைக்காத மாணவர்கள் அடுத்தடுத்த சேர்க்கைகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டாலும் அவர்கள் எதிர்நோக்கக் கூடிய எதிர்மறையான சவால்களை பலர், குறிப்பாக அரசியல்வாதிகள் அறிந்திருக்கவில்லை என்பது வருந்தத்தக்க ஒன்றாகும்.

இவ்வாண்டின் மெட்ரிக்குலேஷன் வகுப்புகளுக்கான பதிவும் முதல் சேர்க்கையும் கடந்த ஜுன் மாதம் 30ஆம் தேதி நிறைவு பெற்றது. இரண்டாவது சேர்க்கை இம்மாதம் 17ஆம் தேதி எனும் நிலையில் 3ஆவது சேர்க்கை வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும்.

இந்த மெட்ரிக்குலேஷன் வகுப்புகள் ஒரு ஆண்டு மட்டுமே நீடிக்கக் கூடிய ஒரு குறுகிய கால பாடத்திட்டமாகும். எனவே சற்றும் காலம் தாமதிக்காமல் கடந்த மாதம் 30ஆம் தேதியே பாடங்களைத் தொடக்கியிருப்பார்கள்.

ஆனால் அந்த முதல் பதிவிலேயே இடம் வழங்கப்படாமல் 2ஆவது 3ஆவது பதிவுகளில் சேர்த்துக் கொள்ளப்படுபவர்களின் நிலை மிகவும் பரிதாபம். ஏனெனில் இவர்களுக்காக  விரிவுரையாளர்கள் பின் நோக்கிச் சென்று பாடங்களை மீண்டும் ஒரு முறை ஒப்பிவிக்கமாட்டார்கள். அதற்கான சாத்தியமே இல்லை.

இதனால் வினா விடை மற்றும் சிறு சிறு கேள்விகள் தொடர்பான கல்வியை இவர்கள் இழந்து விடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அது தொடர்பான மதிப்பெண்களும் இவர்களுக்குக் கிடைக்காது.

இதன் விளைவு என்னவெனில், கல்வி ஆண்டின் இறுதியில் இவர்கள் 4.0 எனும் முழுமையான மதிப்பெண்ணை பெறத் தவறிவிடுகின்றனர் என இத்துறையில் பாண்டியத்துவம் பெற்றுள்ள கல்விமான்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற தொழில்நுட்ப விவரங்கள் கல்வி சார்ந்த வல்லுனர்களுக்கு மட்டும்தான் தெரியுமே தவிர நம் அரசியல்வாதிகளில் நிறைய பேருக்குத் தெரியாது என்பது மறுக்க முடியாத உண்மை. “மேல் முறையீடு செய்யுங்கள், அடுத்த சேர்க்கையில் இடம் கிடைக்கும்” என கெத்தாகக் கூறி விடுவார்கள். ஆனால் பாதிக்கப்படுவது மாணவர்கள்தான்.

எனவே தகுதி பெற்ற எல்லா மாணவர்களையும்  ஜூன் மாதத்தின் முதல் பதிவிலேயே வகுப்புகளில் சேர்த்து அவர்களுக்கான கல்வியை ஒருசேரத் தொடக்க வகை செய்ய வேண்டும். இதில் பாகுபாடு காட்டக் கூடாது.

நம் சமூகத்தைச் சேர்ந்த நிறைய மாணவர்கள் மெட்ரிக்குலேஷன் கல்வியை நிறைவு செய்தும் இது போன்ற தொழில்நுட்ப சிக்கல்களில் மாட்டிக் கொண்டு மவுனத்தை மட்டுமே துணைக்கழைத்து கண்ணீர் சிந்திய கதைகளும் கடந்த காலங்களில் ஏராளம்.

எனவே நம் அரசியல்வாதிகள், “நாங்கள் போராடினோம். அதனால்தான் மெட்ரிக்குலேஷன் வகுப்புகளில் இடங்கள் கிடைத்தன,” என்று மார்தட்டிக் கொள்வதை நிறுத்திக் கொண்டு, இடம் கிடைத்தும் எம்மாதிரியான சிக்கல்களை நம் பிள்ளைகள் எதிர் நோக்குகின்றனர் என்பதை சற்று மீளாய்வு செய்து அவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.