வங்காளதேச இரும்பு பெண்மணியின் வீழ்ச்சி!

எம். நியாஸ் அசாதுல்லா (மொழியாக்கம் சுதா சின்னசாமி)

யேமனின் அமைதி ஆர்வலர் தாவக்கோல் கர்மன் ஒருமுறை கூறியது போல், “இளைஞர்கள் புரட்சியின் நெருப்பு; அவர்களை அடக்க முடியாது, ஒடுக்க முடியாது, பேசவிடாமல் செய்ய முடியாது.” அதுதான் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி வங்காளதேசத்தில் நடந்தது. அதிகாரத்தை தன்னிச்சையாக நடத்திய ஷேக் ஹாசினா திடீரென கவிழ்க்கப்பட்டதை, நோபல் பரிசு வென்ற முஹம்மது யூனஸ் “வங்காளதேசத்தின் இரண்டாம் சுதந்திர நாள்”என்று சொன்னார்.

தொடக்கத்தில் பொதுத்துறை வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டின் அதிக அரசியலமைக்கப்பட்ட முறையை எதிர்த்து மாணவர்கள் அமைதியான போராட்டத்தைத் தொடங்கினர். அது விரைவில் அரசை எதிர்க்கும் Gen Z இளையோர் புரட்சியாக மாறியது.

உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவு, ஊழல் மற்றும் எதிர்ப்புகளை கடுமையாக ஒடுக்குவது ஆகியவற்றால் ஏற்கனவே மிகவும் அதிருப்தியடைந்திருந்த சமூகத்தில் இந்த இளைஞர் எழுச்சி ஒரு தீப்பொறியாக இருந்தது.

கொந்தளிப்புக்கு வித்திட்ட சம்பவம்

ஜூலை 16 அன்று மாணவர் தலைவர் அபு சையது என்பவர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டதே இதற்கான வித்தாக அமைந்தது. நீதி கேட்டு பத்தாயிரக்கணக்கான பங்களாதேஷ் மாணவர்கள் தெருக்களில் இறங்கினர். ஆனால், கொலையை மறுத்த ஹசினா அரசு, கட்சியின் மாணவர் பிரிவு, எல்லை பாதுகாப்புப் படையினர் மற்றும் இராணுவத்தைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களை ஒடுக்கியது.

இந்த வன்முறை நடவடிக்கையால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், ஹசினா ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஹசினா அவர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தினார்.

பின்னர் ஆகஸ்ட் 4 அன்று, அரசு ஒரு புதிய ‘இணைய மற்றும் தெரு தடையை’ விதித்தது. இததைத் தொடர்ந்து சுமார் 100 பேர் கொல்லப்பட்டனர். நாட்டின் சுதந்திரத்திற்கு பிந்தைய வரலாற்றில் இதுவே மிகக் கொடூரமான நாளாக அமைந்தது. இதனால் ஆசியாவின் இரும்புப் பெண்ணான ஹசினாவுக்கு எதிரான போக்கு மாறியது.

தடையை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்ற ஹசினாவின் உத்தரவை இராணுவத் தளபதி மறுத்தார். மறுநாள் காலை டாக்காவில் உள்ள ஹசீனாவின் அதிகார இல்லத்தை நோக்கி பெரும்பான்மையான மக்கள் பேரணியாக சென்றபோது அவர் உடனடி ராஜினாமா செய்தார்.

மேலும் இரத்தவெள்ளத்தைத் தவிர்க்க விரும்பிய இராணுவம், ஹசினாவை ஹெலிகாப்டர் மூலம் தப்பிச் செல்ல வழிவகுத்ததுடன், அதே நேரத்தில் கட்சியிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டு, மாற்றத்தின் போது நடுநிலையான நிலைப்பாட்டைக் காட்டியது.

பங்களாதேசின் அதிக அரசியல்மயமாக்கப்பட்ட வேலை ஒதுக்கீட்டு முறை, ஹசினாவின் உறுதியற்ற வாக்குறுதிகளாகவும் ஊழலின் அடையாளமாகவும் ஆகிவிட்டது.

பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்த வேளையில், போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறியதால், பட்டம் பெற்ற பல மில்லியன்கள் பட்டதாரிகள் வேலையின்றி இருந்தனர். எதிர்பார்ப்புகளின் அதிகரிப்பும் குறைந்த வாய்ப்புகளின் கவலையும் ஒட்டுமொத்த தலைமுறையினரை தோல்வி உணர்வில் தள்ளியது.

பொருளாதார ரீதியாக, ஹசினாவின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சி பரவலாக பகிரப்படவில்லை. ஆட்சியைச் சேர்ந்த, ஆதரித்த வணிகங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பெரும்பாலான லாபங்களை அடைந்தனர். மேலும், கட்டுப்படுத்தப்பட்ட வேலை ஒதுக்கீட்டு முறை கட்சி விசுவாசிகளை மட்டும் நலனடைய செய்தது.

ஏற்றுமதி சார்ந்த தனியார் துறைகள், குறிப்பாக திரிபுணியல் (ஆடை, துணி) நிறுவனங்கள் குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்தது. இதனால் இந்த தனியார் நிறுவங்கள் வளர்ந்து வரும் படித்த தொழிலாளர் சக்தியை வேலைக்கு எடுக்க போராடியது. அங்கும் கூட பெண் தொழிலாளர்களின் விகிதமும் குறைந்து வருகிறது.

கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை தனியார் துறை வேலைவாய்ப்பு உருவாக்கத்துடன் இணைப்பதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, அரசு கேள்விக்குரிய பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை ஏற்று நடத்தியது.

அரசு அலுவலகத்தின் அளவு அதிகரித்ததால், அரசு ஊழியர்களுக்கான பயன்கள் மற்றும் சம்பளமும் அதிகரித்தது, இதனால் தனியார் துறை முதலீட்டிற்கான நிதியை குறைத்தது.

அதிகரித்து வரும் ஊழல், நெருங்கியவர்களுக்கு சலுகை, வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் தேங்கிய தொழிலாளர் சந்தையை கட்டுப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், ஹசினாவின் ஆட்சி காலப்போக்கில் கடுமையான கட்டுப்பாட்டு அதிகார ஆடசியாக மாறியது.

மூன்று முறை ‘ஏமாற்றுத்’ தேர்தல்கள் மூலம் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஹசினா, நூற்றுக்கணக்கான மக்களை ‘காணாமல்’ ஆக்கியதோடு, அரசியல் கைதிகளாக சிறையிலும் அடைத்துள்ளார்.

இப்போது, அவரது அதிர்ச்சியளிக்கும் வீழ்ச்சி, யூனுஸுக்கு வாய்ப்பளித்துள்ளது, அவர் 16 பேர் கொண்ட புதிய தற்காலிக அரசாங்கத்தை தலைமை தாங்குகிறார்.

ஏழைகளை ஆதரிக்க சிறு நிதியுதவி கொள்கைக்கு முன்னோடியாக இருந்த யூனுஸின் கிராமீன் வங்கியை அழிக்க ஹசினா நீண்ட காலமாக முயற்சித்ததை கருத்தில் கொள்ள வேண்டும்.

பங்களாதேசின் சட்ட அமைப்பை ஆயுதமாகக் கொண்டு, ஹசினா யூனுஸுக்கு எதிராக கிட்டத்தட்ட 200 பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் 84 வயதான அவரை குற்றவாளி என நிரூபித்தார்.

பங்களாதேச ஜனநாயகத்தை மீட்டெடுக்க புதிய அரசு பல சவால்களை ஒரே நேரத்தில் கையாள வேண்டும்.

அவற்றில் பொருளாதாரத்தை நிலைப்படுத்துதல், வணிக சமூகத்தின் நம்பிக்கையை மீட்டெடுத்தல், சர்வதேச மேம்பாட்டு வங்கிகளின் ஆதரவைப் பெறுதல் மற்றும் பொது ஒழுங்கை மீட்டெடுத்தல் ஆகியவை அடங்கும்.

உலகின் மிகப்பெரிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஒன்றின் நிறுவனர் என்ற தனது அடித்தள அனுபவமும், சமூக வணிகத்தை ஊக்குவிக்கும் அவரது முயற்சியும், தேசிய மற்றும் உலக அளவில் அவருக்கு உள்ள மதிப்பையும் கருத்தில் கொண்டால், யூனஸ் இந்த பணிக்கு தகுதியுடையவர் எனலாம்.

ஜனநாயகம் மீண்டும் திரும்புமா என்பது உறுதி இல்லை. மூன்று தேர்தல்களில் ஒரே நபர் ஆட்சியில் இருந்துள்ளார் எனும் பட்சத்தில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தத் தேவையான நிறுவனங்கள் பலவீனமடைந்துள்ளன.

ஹசினா பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, வங்காளதேசத்தில் அரசு இல்லாததால், சட்டவிரோதச் செயல்கள் மற்றும் அவருடைய ஆட்சியின் உறுப்பினர்களுக்கு எதிரான வன்முறை கடுமையாக அதிகரித்தது. நூற்றுக்கணக்கான காவல் நிலையங்கள் எரிக்கப்பட்டன, பாராளுமன்ற கட்டிடம் சேதமாக்கப்பட்டது.

மேலும், மற்ற அரசியல் கட்சிகள் முக்கிய நிறுவனங்களின் கட்டுப்பாட்டைப் பிடிக்க முயற்சி செய்யக்கூடும் என்ற அச்சங்கள் ஏற்கனவே உள்ளன. உதாரணமாக, நாட்டின் புதிதாக நியமிக்கப்பட்ட அட்டர்னி ஜெனரல் முக்கிய எதிர்க்கட்சியான வங்காளதேச தேசியவாத கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார்.

நாட்டின் முக்கிய கட்சிகளில் எதுவும் ஊழல் மற்றும் ஒடுக்குமுறையின் வரலாற்றிலிருந்து விடுபடவில்லை எனலாம். யூனுஸின் இடைக்கால ஆட்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போதுமானதாக இருக்காமல் அமைய அனைவரும் தேர்தலை விரைவுபடுத்த முயற்சிக்கின்றனர்.


அரபு வசந்தம் இறுதியில் அரபு குளிராக மாறியது எப்படியோ, அதேபோல வங்காளதேசத்தின் ஜனநாயகத்தின் புதுப்பித்தல் ஆரம்ப பருவத்திலேயே நசுக்கப்படலாம் என்று ஹார்வர்ட் சட்டக் கல்லூரியின் நோவா பெல்ட்மேன் கூறுகிறார். ஏமாற்றமான முடிவு ஏற்படலாம் என்றாலும், அது நிச்சயம் நடக்கும் என்று சொல்ல முடியாது. அரபு உலகில் நடந்த பெரும் எழுச்சிகள் ஓரளவு தோல்வியடைந்ததற்கு இளைஞர்கள் அதில் குறைந்த பங்கு வகித்ததே காரணம்.

இளைஞர்களின் சக்தி

இதற்கு நேர்மாறாக, வங்காளதேசில் Gen Z தலைமுறையினர் போராட்டத்தை வழிநடத்தியுள்ளனர். மேலும் அவர்கள் ஒரு சர்வாதிகாரியை வீழ்த்துவதோடு மட்டும் நிற்கவில்லை. ஒரு இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்படுவதற்கு முன்பு இருந்த அந்த இடைவெளி காலகட்டத்தில் மாணவர்கள் மற்றும் மாணவ சாரணியர்கள், போக்குவரத்து அதிகாரிகளாகவும், துப்புரவு பணியாளர்களாகவும், பாதுகாப்பு படையாகவும் உருவெடுத்து கடமைகளைச் செய்தனர்.

முக்கியமாக, வங்காளதேச இளைஞர்கள் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு, நாட்டின் எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுத்து வருகின்றனர். அவர்கள் நேர்மையான ஆட்சியையும் திறமைக்கு முக்கியத்துவம் தரும் சமூகத்தையும் உருவாக்க வேண்டும் என்ற தெளிவான நோக்கத்துடன் செயல்படுகின்றனர்.

இராணுவ படைத்துறை அல்லது முக்கிய அரசியல் கட்சிகள் பொறுப்பேற்கும் வரை காத்திருப்பதற்கு பதிலாக, யூனுஸை பொறுப்பேற்கும்படி அவர்கள் வலியுறுத்தினார்.

ஹாசினாவின் கட்டுப்பாட்டில் இருந்த பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றதன் மூலம், வங்காளதேசம் புதிய தலைமைத்துவப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாணவர் போராட்டத் தலைவர்கள் இருவர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

நாட்டுத் தலைவர்கள் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டு, இளைஞர்கள் தொடர்ந்து உறுதியாக இருந்தால், நாட்டின் ‘வங்காள வசந்தம்’ தொடரும்.

எம். நியாஸ் அசாதுல்லா உலகத் தொழிலாளர் அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிரிவின் தலைவர். இவர் இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறை பேராசிரியராகவும், வங்காளதேசத்தின் வடக்கு-தெற்கு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியும் செய்கிறார்.

இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் ஆசிரியரின் சொந்தக் கருத்துகள். இது மலேசியாகினியின் நிலைப்பாட்டை பிரதிபலிக்காது.