இராகவன் கருப்பையா – நம் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள், குறிப்பாக சில அரசியல் தலைவர்கள், ‘சட்டம்’ என்றால் என்ன என்று தெரியாமல் இருப்பதைப் போல் உள்ளது.
ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் ‘சட்டத்தை’ எப்படி வேண்டுமானாலும் தாண்டவமாடலாம் என்று எண்ணுவது உண்மையிலேயே முட்டாள்தனமான ஒன்று.
முன்னாள் பிரதமர் நஜிப் விவகாரத்தில் இதனை நாம் கண்கூடாகப் பார்த்தோம். பிரதமராக இருந்த காலத்தில் ‘சட்டம்’ தம்மை நெருங்காமல் இருப்பதற்கு அவர் என்னவெல்லாம் செய்தார் என்று மலேசியர்கள் மட்டுமின்றி அனைத்துலக ரீதியில் உலகமே வேடிக்கை பார்த்தது.
அவர் சிறை சென்ற பிறகும் கூட, சட்டத்தை மதிக்காமல் அவரை எப்படி வெளியே கொண்டு வருவது என்பது பற்றி இன்று வரையிலும் அவருடைய ஆதரவாளர்கள் திட்டம் தீட்டி வருகின்றனர் என்பது வேடிக்கையான விஷயம். சட்டத்தை இருட்டாக்க இயலும் என்ற அவர்களின் நம்பிக்கைக்கு காரணம் அரசியல் மற்றும் செல்வாக்காகும்.
அவர் தலைவராக இருந்த அம்னோ இப்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் இந்த அறிவிலித்தனமான செயல் சாத்தியம் என்று அவர்கள் நம்புகின்றனர்.
இருந்த போதிலும் அவர்களுடைய சில்லறைத்தனமான சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு நம் நாட்டின் சட்டத்துறை வெளிச்சத்தில் இருப்பது மகிழ்ச்சியான விஷயம்.
ஆகக் கடைசியாக புதியதொரு சர்ச்சை எழுந்துள்ளது. ஜ.செ.க.வின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் எழுதிய கேலிச் சித்திர புத்தகம் ஒன்றை கடத்த 2019ஆம் ஆண்டு அரசாங்கம் தடை செய்தது.
அந்த புத்தகம் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை ஆதரிக்கிறது எனும் அடிப்படையில் தடை செய்யப்பட்டது.
எனினும் நூலாசிரியர் மேல் முறையீடு செய்ததைத் தொடர்ந்து, அப்புத்தகத்தினால் எவ்விதமான எதிர்மறையான விளைவும் ஏற்படாது எனும் அடிப்படையில் அதன் மீதான தடை நீக்கப்பட்டது.
ஆனால் முஸ்லிம்களின் உணர்வை அப்புத்தகம் பாதிக்கும் என்றும் நாட்டின் நிலைத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அம்னோ இளைஞர் தலைவர் வழக்கம் போல கொடி தூக்கியுள்ளார்.
கம்யூனிஸ்ட் சித்தாந்தத்திற்கும் சமய உணர்வுகளுக்கும் உள்ள தொடர்பு இறை நம்பிக்கையாகும். ஆனால், இறை நம்பிக்கை அற்றவர்கள் எந்த வகையில் ஆபத்தானவர்கள்?
நம்மில் ஒவ்வொருவரும் இறைநம்பிக்கை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்ற நிலையில் எந்த சட்டமும் கிடையாது. நமது ருக்குன் நெகாராவின் கோட்பாடுகளில் ஒன்று இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் ஆகும். ஆனால் அது சட்டம் அல்ல.
அந்த புத்தகம் மீதான தடை தொடர்ந்து இருப்பதற்கான வழிமுறைகளை அரசாங்கம் கண்டறிய வேண்டும் என மற்றொரு அம்னோ தலைவர் வலியுறுத்துகிறார்.
இந்த சர்ச்சையில் சில பாஸ் தலைவர்களும் புகுந்து கொண்டனர். மேல் முறையீட்டு நீதிமன்றம் தனது முடிவை மிகத் தெளிவாக அறிவித்த பிறகும் இந்த மேதாவிகள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது வேடிக்கையாகத்தான் உள்ளது.
எல்லா விஷயங்களிலும் மதத்தைத் திணித்து அதன் வழி இவர்கள் அரசியல் ஆதாயம் தேட நினைப்பது பொது மக்களுக்கும் தெரியாமல் இல்லை. ஆனால் சட்ட விதிகளைக் கடந்து அரசியல் சுயநல முடிவெடுக்குமாறு அரசாங்கத்தைத் தூண்டுவது எவ்வகையிலும் ஏற்புடையதாக இல்லை.
இதுபோன்ற விவகாரங்களில் பிரதமர் அன்வாரும் மவுனம் காப்பது நமக்கு ஏமாற்றமளிக்கிறது. நீதிமன்ற முடிவுகளில் அரசாங்கம் தலையிட முடியாது என ஒரு அறிக்கை விடுவதன் வழி சட்டத்துறை மீதான அரசாங்கத்தின் உறுதியான நிலைபாட்டை அவர் வெளிக்காட்ட முடியும்.
ஆனால் அதற்கும் அரசியல் ஒரு தடையாக இருக்குமோ என்று நமக்கு எண்ணத் தோன்றுகிறது.