பாலஸ்தீனர்களுக்கு சிகிச்சை: விரும்பித்தான் வந்தார்களா?

இராகவன் கருப்பையா – பாலஸ்தீன-இஸ்ரேல் போரில் காயமடைந்தவர்களை இங்கு அழைத்து வந்து சிகிச்சையளிக்கும் மலேசியாவின் திட்டத்தில் ஏதோ பிணக்கு ஏற்பட்டுள்ளதைப் போல் தெரிகிறது.

இதன் தொடர்பாக சில தினங்களுக்கு முன் தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின் வெளியிட்ட ஒரு அறிக்கை நமக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதியன்று இரு ஆகாயப் படை விமானங்களின் வழி மொத்தம் 127 பாலஸ்தீனர்கள் இங்கு கொண்டுவரப்பட்டது நமக்குத் தெரியும்.

சுமார் 8,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எகிப்திலிருந்து இங்கு அவர்கள் வந்து சேர்வதற்கு 10 மணி நேரத்திற்கும் மேலானது.

அந்த 127 பாலஸ்தீனர்களில் மொத்தம் 41 பேர் போரில் காயமடைந்வர்கள். அவர்கள் எல்லாரும் எகிப்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர் என்று நம்பப்படுகிறது. இதர 86 பேரும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள்.

மலேசியாவின் இந்நடவடிக்கை மொத்தம் 2 மாதங்களுக்கு மேற்கொள்ளப்படும் என காலிட் அந்த சமயத்தில் குறிப்பிட்டிருந்தார். அப்படியென்றால் மேலும் பலர் இங்கு அழைத்து வரப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டது.

சிகிச்சைக்குப் பிறகு மலேசியாவை தங்களுடைய 2ஆவது இல்லமாக அவர்கள் கருதுவார்கள் என்றும் கூட அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆனால் சில தினங்களுக்கு முன் இந்த விவகாரம் தொட்டு அவர் பேசியது ஏற்கெனவே அவர் வெளியிட்ட கருத்துகளுக்கு முரண்பாடாக உள்ளது நாம் எதிர்பாராத ஒன்று.

அதாவது இந்நடவடிக்கை இதோடு முடிவுற்றது என்றும் இனிமேல் வேறு யாரும் இங்கு சிகிச்சைக்கு அழைத்து வரப்படமாட்டர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அது மட்டுமின்றி, இங்கு கொண்டுவரப்பட்ட 127 பேரும் சிகிச்சைக்குப் பிறகு தாயகம் செல்ல விரும்புவதாகவும் அங்கேயேதான் அவர்கள் மடிய விரும்புவதாகவும் காலிட் சொன்னார்.

அப்படியென்றால் அவர்கள் எல்லாரும் சுயமாக விரும்பித்தான் இங்கு வந்தார்களா? அல்லது விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக இங்கு கொண்டு வரப்பட்டார்களா எனும் கேள்விகள் எழுகின்றன.

மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்காக நாம் காட்டும் சிறிய பரிவுதான் இந்நடவடிக்கை என பிரதமர் அன்வார் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அந்நடவடிக்கை ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி இப்போது தொடரப்படாதது ஏன் என்று நமக்குத் தெரியவில்லை.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு வெகுசன மக்களின் ஒருமித்த ஆதரவு கிடைக்கவில்லை என்பது உண்மைதான். சமூக வலைத்தளங்களில் பல்வேறான ஆதங்கத்தை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.