பயணக் கட்டுரை- உலகை ஈர்க்கும் ‘ஃபூ குவோக்’ தீவு

இராகவன் கருப்பையா – தென் கிழக்காசியாவில் துரித வளர்ச்சி கண்டுவரும் நாடுகளில் ஒன்றான வியட்நாமின் ‘ஃபூ குவோக்’ தீவில் அனைத்துலக சுற்றுப்பயணிகளை கவர்ந்திழுக்கும் முறை நம்மை பிரமிக்க வைக்கிறது.

சர்வதேச நிலையில் மாலத் தீவுக்குப் அடுத்து 2ஆவது சிறப்பானத் தீவாகக் கருதப்படும் இந்த ‘ஃபூ குவோக்’ தீவு, வியட்நாமில் உள்ள சமார் 4,000 தீவுகளிலேயே ஆகப் பெரியதாகும்.

சுற்றுப் பயணிகளுக்கு பிரசித்திப் பெற்ற இத்தீவில் விடுமுறையைக் கழிக்க 4 நாள் சுற்றுப் பயணம் ஒன்றை கடந்த மாதம் மேற்கொண்டிருந்தோம்.

காப்புறுதி நிர்வாகிகளான 5 பேர் கொண்ட அக்குழுவுக்கு கணக்கியல் துறையின் பிரபல தொழில் முனைவருமான அமுதா கர்பண்ணன் தலைமையேற்றிருந்தார். என்னோடு, நாயுடு, மஹாஷான் மற்றும் பிரகாஷ் ஆகியோர் இதர நிர்வாகிகளாவர்.

வியட்நாமின் தென்கோடியில் தாய்லாந்து வலைகுடாவில் ஏறத்தாழ 590 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட அத்தீவில் சுமார் 180,000 பேர்தான் வியட்நாமிய நிரந்தரவாசிகள்.

ஆனால் அன்றாடம் உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுப்பயணிகள் அங்கு வந்து குவிகின்றனர்.

ஆண்டு ஒன்றுக்கு அங்கு படையெடுக்கும் சுமார் 5 மில்லியன் சுற்றுப் பயணிகளில் 60 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் தென் கொரியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைச் சேர்ந்த சுற்றுப் பயணிகளும் அங்கு அதிகமாகக் காணப்படுகின்றனர். சில வட இந்திய தொழிலதிபர்கள் தங்களுடைய குடும்பத் திருமணங்களைக் கூட குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய விருந்தினர்களை வரவழைத்து அங்கு ஆடம்பரமாக ஏற்பாடு செய்கின்றனர்.

இத்தனை மில்லியன் சுற்றுப் பயணிகளை அத்தீவு ஈர்ப்பதற்கு மற்றொரு காரணம் கடந்த 10 ஆண்டுகளாக விசா இன்றி அங்கு வருகை மேற்கொள்வதற்கான சலுகைகளை வியட்நாமிய அரசாங்கம் வழங்கியுள்ளதுதான். விசா இல்லாமல் சுற்றுப்பயணிகள் கூடிய பட்சம் ஒரு மாத காலத்திற்கு அத்தீவில் தங்கலாம்.

கம்போடிய நாட்டின் தென் பகுதியில் அதன் எல்லைக்கு அருகில் இத்தீவு அமைந்துள்ளதால் சில மணி நேரங்களில் விசைப்படகின் வழி அந்நாட்டுக்குக் கூடச் சென்றுவிடலாம்.

நீண்ட நாள்களாக ‘ஃபூ குவோக்’கின் பொருளாதார வளர்ச்சி மீன்வளம் மற்றும் விவசாயத்தைச் சார்ந்திருந்தது. எனினும் அண்மைய ஆண்டுகளாக சுற்றுப் பயணத் துறை இதர எல்லாத் துறைகளையும் முந்திக் கொண்டு அத்தீவின் மேம்பாட்டுக்கு முக்கிய பங்காற்றுகிறது.

ஏறத்தாழ அத்தீவின் சுற்று வட்டத்தில் உள்ள எல்லா கடற்கரைகளிலும் அவர்கள் சுற்றுப் பயணிகளை ஈர்ப்பதற்கென்றே பல்வேறு வசதிகளையும் பொழுது போக்கு அம்சங்களையும் செம்மைப்படுத்தி வைத்துள்ளனர்.

எனினும் நாங்கள் தங்கிருந்த விடுதிக்கு எதிரே இருந்த கடல் பகுதியில் அலைகள் சுமார் 3 மீட்டர் உயரத்திற்கு முரட்டுத்தனமாகப் பாய்வதால் அங்கு எவ்வித நீர் நடவடிக்கையும் இல்லை. அப்பகுதியில் ஆபத்தைக் குறிக்கும் வகையில் சிவப்புக் கொடிகள்தான் அதிகமாக நடப்பட்டிருந்தன.

இருப்பினும் கரையிலிருந்து சுமார் 60 மீட்டர் தொலைவில் உள்ள எங்கள் அறைகளின் தாழ்வாரத்தில் அமர்ந்திருந்தவாறே அந்த ராட்சச அலைகளின் ஆற்றலை ரசிக்கக் கிடைத்த வாய்ப்பு அலாதியான அனுபவம்தான்.

அநேகமாக அந்த அலைகளை அருகில் இருந்து ரசிப்பதற்கென்றே அந்தத் தங்கும் விடுதியை அப்பகுதியில் நிர்மாணித்திருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

விமான நிலையம், தங்கும் விடுதிகள் மற்றும் பிரசித்திப் பெற்ற ஏனைய இடங்களைத் தவிர்த்து மற்ற எல்லா இடங்களிலும் ஆங்கிலத்தில் உரையாடக் கூடியவர்கள் மிகவும் குறைவுதான். வியட்நாமிய மொழியில் மட்டுமே அவர்கள் பேசுகின்றனர்.

இருந்த போதிலும் கிட்டதட்ட எல்லாருமே தங்களுடைய கை தொலைபேசிகளில் ‘கூகல் மொழி பெயர்ப்பு செயலி’யைக் கொண்டு சுற்றுப் பயணிகளுடன் எளிதில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

அங்காடிக் கடைக்காரர்கள், வாடகைக் கார் ஓட்டுநர்கள் மற்றும் சந்தையில் வியாபாரம் செய்பவர்களும் கூட அந்த செயலியின் சேவைகளை பயன்படுத்துகின்றனர்.

இந்தத் தொழில்நுட்பம் எங்களுக்கும் மிகவும் பயன்மிக்க ஒன்றாக அமைந்திருந்தது. உலகின் எப்பகுதிக்குச் சென்றாலும் மொழி ஒரு தடையாக இருக்காது என்பதையே இது குறிக்கிறது.

இதற்கிடையே ஒரே நாளில் 3 குட்டித் தீவுகளுக்கு பயணிப்பதற்கான சேவைகளுக்கு நாங்கள் முன்கூட்டியே பதிவு செய்திருந்தோம்.

‘ஃபூ குவோக்’ தீவில் உள்ள ஒரு படகுத் துறையிலிருந்து ‘ஸுவோங்’ தீவுக்கு விசைப் படகின் வழி நாங்கள் செய்த அந்த அரை மணி நேரப் பயணம் சற்று பயங்கரமானதாக இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

சுமார் 15 பேர் மட்டுமே பயணிக்கக் கூடிய அந்தச் சிறிய படகு ஒவ்வொரு முறையும் பெரிய அலைகளில் மோதி சில விநாடிகளுக்கு எகிறிப் பாய்ந்து மீண்டும் நீரில் விழுந்தது உண்மையிலேயே ஒரு பயங்கர அனுபவம்தான்.

அந்தச் சமயத்தில் வானிலையும் கூட எங்களுக்குச் சாதகமாக அமையவில்லை. கடுமையான மழை நிலைமையை மேலும் மோசமாக்கியது.

‘ஸுவோங்’ தீவில் கடலுக்கடியில் சென்று கடல்வாழ் உயிரிணங்களைக் காண்பதற்கான வசதிகளை செய்து வைத்துள்ளனர்.

கழுத்துக்கு மேல் காற்று நுழையாதபடி உள்ள ஒரு விசேஷ தலைக் கவசத்தை அணிந்து கொண்டு சுயமாகவே நாம் கடலுக்கடியில் செல்ல வேண்டும். அந்தத் தலைக் கவசத்திற்கு ஒரு சிறிய குழாயின் வழி கடலுக்கு மேலிருந்து பிராண வாயு அனுப்பப்படுகிறது.

அங்கிருந்து பிறகு ‘கம் கி’ தீவுக்கு பயணித்த எங்களுக்கு ‘ஸ்னோர்க்கலிங்’ எனப்படும் நீரடி அனுபவத்தைப் பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

நங்கூரமிட்டிருந்த படகுக்கு அருகில் ‘ஸ்னோர்க்கலிங்’ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த எங்களுக்கு மிகத் தூய்மையான ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு, அப்படகின் ஊழியர் ஒருவரும் நீரில் குதித்து அப்பகுதியில் ஒரு சிறு துரும்புக் கூட இல்லாத படி ஒரு வலையைக் கொண்டு அவ்வட்டாரத்தை சுத்தம் செய்தார்.

இதுவும் கூட எதிர்பாராத ஒரு வியப்புதான். சுற்றுப் பயணிகளின் நலனை எப்படியெல்லாம் அவர்கள் பாதுகாக்கின்றனர் என்பதற்கு இது நல்லதொரு உதாரணம்.

அதனைத் தொடர்ந்து ‘மே ருட் ட்ரோங்’ தீவுக்கு பயணம் செய்த எங்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. கண்ணாடியைப் போன்று மிகவும் சுத்தமாகவும் தெளிந்த நீரையும் கொண்ட அத்தீவின் கடற்கரையில் சுமார் 1 மணி நேரம் ஓய்வெடுத்தப் பிறகு ‘தோம்’ தீவுக்குப் புறப்பட்டோம்.

‘தோம்’ தீவில் நாங்கள் ஏறத்தாழ 2 மணி நேரத்திற்கு மேல் ‘தீம் பார்க்’ எனப்படும் பலதரப்பட்ட நீர் விளையாட்டுகளில் பொழுதைக் கழிக்க வாய்ப்பிருந்தது. இந்தத் தீவுடன் எங்களுடைய விசைப் படகுச் சவாரி நிறைவு பெற்றது.

இங்கிருந்து ‘ஃபூ குவோக்’ தீவுக்கு ‘கேபல் கார்’ எனப்படும் தொங்கூர்தி வழி திரும்பிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

‘ஹொன் தோம்’  எனப்படும் இந்தத் தொங்கூர்தி சேவை உலகிலேயே கடலைக் கடக்கும் மிக நீளமான ‘கேபல் கார்’ சேவையாகும். பல தீவுகளைக் கடந்துச் செல்லும் இதன் நீளம் மொத்தம் 7,900 மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஃபூ குவோக்’ தீவில் உள்ள இந்தத் தொங்கூர்தி நிலையத்தின் முனையத்தை அசல் விமான நிலைய முனையத்தைப் போலவே மிகவும் நேர்த்தியாக அமைத்து வைத்திருப்பது வியக்கத்தக்க ஒன்றுதான்.

இதனிடையே நகரை சுற்றிப் பார்ப்பதற்கு ‘ஸீ டியன்’ எனப்படும் திறந்தவெளி வாடகைக் கார் உகந்ததாக உள்ளது.

ஓட்டுநரைத் தவிர்த்து கூடிய பட்சம் 7 பேர் அமரக்கூடிய இருக்கைகளைக் கொண்ட அந்த மின்சார வாகனம் வியட்நாமியர்களின் உள்நாட்டுத் தயாரிப்பாகும்.

மின்கல சக்தியைக் கொண்டு இயங்குவதால் அந்த வாகனங்களில் இயந்திரச் சத்தம் கொஞ்சம் கூட இல்லை. சுற்றுப் பயணிகளுக்கு மட்டுமின்றி உள்நாட்டவர்களிடையேயும் அவ்வாகனங்கள் பிரபலமாகத்தான் உள்ளன.

அந்தத் தீவின் மற்றொரு விசேஷம் சீத்தாப்பழம். அதிக அளவிளான மருத்துவ குணங்களைக் கொண்ட இந்தப் பழம் எங்கு பார்த்தாலும் விற்பனையில் உள்ளது ஆச்சரியமான ஒன்றுதான். தாங்கள் விரும்பி உண்ணும் பழங்களில் சீத்தாப்பழம் முக்கிய இடத்தை வகிக்கிறது என அவர்களே கூறுகின்றனர்.

பொதுவாக, எந்த இடத்திற்குச் சென்றாலும், விடுமுறை நிறைவடையும் அந்த கடைசி நாள் சற்று சோகமாகத்தான் இருக்கும். நாங்கள் மட்டும் விதிவிளக்கா என்ன? நான்கு நாள்கள் வெறும் 4 மணி நேரத்தில் முடிந்ததைப் போலான ஒரு உணர்வு ஏற்பட்டது ஏதோ உண்மைதான்.

நான்காம் நாள் மதியம் சுமார் 2 மணிக்கு ‘ஃபூ குவோக்’ அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட எங்கள் விமானம் சுமார் ஒரு மணி 45 நிமிடங்களில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்தது.