கணேசன் குணசேகரன் – 1897-இல் உருவாக்கப்பட்ட முதல் தமிழ்ப்பள்ளி முதல் கடந்த 127 ஆண்டுக் கால வரலாற்றைக் காணும் பொழுது *தமிழ்ப்பள்ளி நம்மில் பலரின் உடலாகவும், உயிராகவும் நமது வாழ்க்கையோடு இரண்டற கலந்து விட்டது என்பது மறக்கவோ, மறைக்கவோ முடியாது என்பது ஒரு வரலாற்றுப் பதிவு.
நாட்டில் இன்று மொத்தம் 528 தமிழ்ப்பள்ளிகள் இருப்பது கணக்கெடுப்பின் வழி தெரியவருகிறது.
ஏறக்குறைய 100 தமிழ்ப்பள்ளிகளுக்கு மேல் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் மாணவர் எண்ணிக்கையால் மூடு விழா காணும் அபாயத்தை எதிர் நோக்கி வருகிறது.
மாணவர் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருவதை கண்டு இந்தியச் சமுதாயம் இந்த சிக்கலுக்குத் தீர்வு காண என்ன வழி என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது.
மலேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்தியர்களான நாம் வேகமாகக் குறைந்து வருவது காரணமாக இருந்தாலும், இந்திய பெற்றோர் பிள்ளைகளைப் பிற மொழிப் பள்ளியில் சேர்ப்பதும் ஒரு முக்கியமான காரணமாகிறது.
மற்றொரு செய்தி தமிழ்ப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர் தங்களது பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளியில் சேர்ப்பதற்கு மாறாகப் பிற மொழி பள்ளிகளில் சேர்த்து வருவதாகும்..
ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் குழந்தைக்கு தரமான கல்வி வேண்டும் என்பதில் தவறில்லை. ஆனால் அந்த தரமான கல்வி தமிழ்ப்பள்ளி வழி கிடைப்பது ஒரு காலத்தில் சிரமம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால் இன்று நிலை முற்றாக மாறிவிட்டது. தமிழ்ப்பள்ளியின் ஆற்றல் இன்று தேசிய பள்ளிகளை விட அதிகரித்துள்ளதைக் காண முடிகிறது.
தரமான கட்டிட வசதி, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், ஆர்வத்துடன் இயங்கும் சமூக அமைப்புகள், தொண்டூழிய அமைப்புகள் போன்றவை தமிழ்ப்பள்ளிக்கு ஒரு புதிய உருமாற்றத்தை உருவாக்கி உள்ளன.
தேசிய அளவில் நமது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறிவியல் விழா, கணிதப்போட்டி, சதுரங்கப்போட்டி போன்றவற்றில் கலந்து கொண்டு சாதனை புரிந்தும் வருகிறார்கள்.
பொது மக்களும் தமிழ் மொழி ஆர்வலர்களும், பொது இயக்கங்களும் இன்றுவரை தமிழ்ப்பள்ளிகளைப் பாதுகாக்கவும், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தொடர்ந்து விழிப்புணர்வு பரப்புரை செய்து வரும் வேளையில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்களது பிள்ளைகளை வேறு மொழிப் பள்ளிகளுக்கு அனுப்பும் விகிதமும் பெருமளவு குறைந்துள்ளது மேலும் நம்பிக்கையை கூட்டுகிறது.
இந்திய சமுதாயத்தின் எதிர்காலம் மீது அக்கறையும் பொறுப்பணர்வும் கொண்ட தூர நோக்க சிந்தனையுடையவர்களே சமுதாயத்திற்குத் தேவை. அப்படிப்பட்ட சிந்தனை எழுச்சியை ஆசிரிய பெருமக்கள்தான் விதைக்கவேண்டும்.