இராகவன் கருப்பையா – அரசியல்வாதிகள் மேடைகளில் அல்லது பொது இடங்களில் பேசும் போது மக்களை புண்படுத்தாமல் மிகவும் கவனமாக வார்த்தைகளை பயன்படுத்துவது அவசியமாகும்.
அறிந்தோ அறியாமலோ அவர்கள் வரம்பு மீறி பேசித் திரிந்தால் ‘சுவர் மீது விட்டெறிந்த பந்தைப் போல’ பெரும் பாதகத்தையே அது பிறகு ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத்துறை துணையமைச்சர் ரமணன் அண்மைய காலமாக சற்று முரட்டுத்தனமான வார்த்தைகளை பயன்படுத்தி நம் சமூகத்தினரின் உணர்வுளை காயப்படுத்தி வருவது வருந்தத்தக்க ஒன்றாகும்.
இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை மடானி அரசாங்கம் புறக்கணிப்பதாகக் குற்றம் சாட்டுபவர்கள் ‘பைத்தியம்’ என கடந்த வாரம் அவர் சாடியதை எவ்வகையிலும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
பாதிக்கப்பட்ட நம் சமூகத்தினரை வர்ணிப்பதற்கு இப்படியொரு கடுமையான வார்த்தையை அவர் பயன்படுத்தியிருக்க வேண்டிய அவசியமே இல்லை.
நம் நினைவுக்கு எட்டிய வரையில் கடந்த காலங்களில் கூட நம் சமூகத்ததைச் சார்ந்த அரசியல்வாதிகளில் முன்னாள் ம.இ.கா. தலைவர் சாமிவேலு மட்டும்தான் சில சமயங்களில் கொஞ்சம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவார்.
இருந்த போதிலும் தனது அரசியல் முதிர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் மக்களின் மனங்களை பாதிக்காதபடி அவர் பார்த்துக் கொள்வார்.
ஆனால் அரசியலில் ஆர்வம் உள்ள ரமணன் சற்று வரம்பு மீறி நடந்து கொள்வதைப் போல் தெரிகிறது.
பிரதமருக்கு எதிரானக் கருத்தாக இருந்தாலும் கூட வரையறைக்கு உட்பட்ட பேச்சி சுதந்திரம் எல்லாருக்கும் உண்டு என்பதை ரமணன் உணர வேண்டும்.
அரசாங்கத்தை எல்லா சமயங்களிலும் அனைத்துத் தரப்பினரும் பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பது தவறு.
பிரதமரிடம் நற்பெயரை சம்பாதிக்க வேண்டும் எனும் வேட்கையில் தறிகெட்டத்தனமாக அனாவசியமான வார்த்தைகளை பயன்படுத்தி நம் சமூகத்தினரின் மனங்களை அவர் காயப்படுத்தக் கூடாது.
அவர் இன்று அனுபவிக்கும் பதவி சுகங்கள் எல்லாமே மக்களால் வழங்கப்பட்டது என்பதை அவர் மறந்துவிடக்கூடாது. அரசாங்கம் அவருக்கு வழங்கும் சம்பளம் கூட மக்களின் பணம்தான் என்பதை மறக்கக்கூடாது.எனவே துணையமைச்சர் எனும் மமதையில் எப்படி வேண்டுமானாலும் மக்களை தரக் குறைவாக பேசலாம் எனும் போக்கை உடனே அவர் கைவிட வேண்டும்..