தேசிய முன்னணி நம் சமுதாயத்தை எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றது!

[Karanraj Sathianathan]

தேசிய முன்னணி இந்திய தலைவர்கள் திரும்பவும் திரும்பவும் இந்த அரசாங்கம் நாம் கேட்பதெல்லாம் செய்கிறது. நஜிப் மிகவும் சிறந்த பிரதமர் என்றும் கூறிவருகிறார்கள்.

தேசிய முன்னணி அரசாங்கம் நம் சமுதாயதிற்கு நிறைய வேலை, கல்வி, வியாபார வாய்ப்புகளை தருகின்றனர் என்றும் கூறி வருகின்றனர். இப்பொழுது நமது மாணவர்கள் நிறையப்பேர் உயர் கல்வி கற்கின்றனர், அரசாங்க பணியிலும், அரசு சார்பு நிறுவனத்திலும் நம்மவர்க்கு அதிகமாக வேலை வாய்ப்பு கிடைக்கிறது என்றும் சொல்லிகொள்கின்றனர். ஆனால் என் நண்பர்கள் பணிபுரியும் அரசாங்க இலாகாவிலும், அரசு சார்பு நிறுவனத்திலும் மலாய்காரர்களே வேலைக்கு தேர்ந்தெடுக்கபடுகின்றனர். ஏன் அரசாங்க மருத்துவ கல்லூரிகளிலும் இதேதான் நடக்கின்றது.

நேரடி பேட்டிக்கு நிறைய இந்திய மாணவர்கள் வந்தாலும் எடுக்கப்படுவதோ மலாய்காரர்களே. இந்த வாரத்தில் ஒரு அரசாங்க மருத்துவ கல்லூரியில் பயில வந்த 250 மேலான மாணவர்களில் ஆறு பேர்தான் இந்திய மாணவர்கள். உயர் நிலை கல்வி கழகங்களிலும் நம் தலைவர்கள் கூறியபடி நடக்கவில்லை. இவர்கள் கூறியது ஒன்பது சகவித மாணவர்கள் எடுக்கபட்டனர்.

இந்த அரசாங்கம் இந்தியர்களுக்கு மிகவும் பரிவான அரசாங்கம், நஜிப், முகைதீன் நம் சமுதாயதிற்க்கு அதிக நன்மைகள் செய்கின்றனர் என்றும் கூறுவர். உண்மையில் எடுத்ததோ 3.66 % தான். இந்த புள்ளி விபரத்தை பார்த்தால் தேசிய முன்னணி அரசாங்கம் நம் சமுதாயத்தை பல வழிகளில் ஏமாற்றி வருகிறதே தவிர நாம் இந்நாட்டின் பிரஜைகள் என்று மதித்து நம்முடைய மக்கள் சதவிகிதத்திற்கு தற்க வாய்ப்புகளை சலுகைகளையும் உரிமைகளையும் தரமறுக்கிறது.

பொது தேர்தல் வரப்போகிறது என்றால் நமக்கு பரிசு கூடைகள், கோழி, ஆட்டு இறைச்சி கறியோடு சோறும் கிடைக்கும். இப்பொழுது மதுபானமும் கிடைக்க நல்ல வாய்ப்பு உள்ளது. தேசிய முன்னணி நமக்கு RM500.00  வேற கொடுக்கிறது. இதெல்லாம் தேர்தலில் வென்றபின் கிடைக்காது. நம் சமுதாயத்தினரையும் எந்த அரசியல்வாதியும் வந்து பார்க்கமாட்டார்கள்! கொடுக்கும் RM 500.00 வைத்து அடுத்த பொது தேர்தல் வரை நாம் சிறிது, சிறிதாக பயன்படுத்த வேண்டும். கணக்கு போட்டு பார்த்தால் ஒரு நாளைக்கு 24 .7 சென் ஆகும். இந்த 24 .7 செனில்(24.7 sen) நீங்கள் மிட்டாய் வாங்கி, பிள்ளைகளுக்கு கொடுங்கள். இதன்படி பார்த்தால் உங்கள் ஓட்டுக்கு இதே அதிகமா அல்லது குறைவா??? இந்த பணம் யாருடைய பணம்? அரசாங்கதுடையதா அல்லது நாட்டு மக்களின் வரி பணமா?

தேசிய முன்னணி நம் சமுதாயத்தை எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றது என்று அறிய விரும்பினால் இணையத்தில் உள்ள பல செய்தி தளங்களில் வரும் செய்திகளை படியுங்கள். தொலைக்காட்சி இரண்டில் தினமும் இரவு 7.30 மணிக்கு போடப்படும் தமிழ் செய்திகளில் பெரும்பான்மையானது தேசிய முன்னணியின் பிரசாரமாகும். தமிழ் தினசரிகள் அரசாங்க சட்டத்தை பின்பற்றுவதால் அவை உண்மை, நேர்மையான செய்திகளை பிரசுரிக்க மாட்டாது. ஆங்கில தினசரிகளும் இதைதான் செய்கின்றன. ஆனால் சீன தினசரிகள் துணிச்சலாக, உண்மையான செய்திகளை பிரசுரிகின்றன. அதனால்தான் சீனர்களுக்கு இந்நாட்டில் நடப்பன அதிகமாக தெரியும்.

மலேசியா சீனர் சங்கம் எப்படியாவது சீனர்களின் சகவிததிக்கு அதிகமாகவே வாய்ப்புக்களை பெறுகின்றனர். அப்படி இருந்தும் சீனர்கள் எதிர்கட்சிகளையே ஆதரிக்கின்றனர். நம் சமுதாயத்தினரோ கடந்த 54 வருடங்களாக தேசிய முன்னணியை ஆதரித்தும் பெரும்பாலான வாய்ப்புக்களை இழந்தேவருகின்றனர். ஏன் இந்த ஓரவஞ்சனை? இதை தட்டிக்கேட்பது யார்? நம் சமுதாய தலைவர்கள் என்றுமே நம் சமுதாயதிக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளையும், சலுகைகளும், வாய்ப்புகளையும் விட்டு கொடுத்துகொண்டே வருகின்றனர். ஆனால் இவர்கள் நம்மிடம் பேசும்போது ஏதோ பெரிய வீரர்கள் போலவும், நம் சமுதாயதிக்கு பாடுபடுகிறவர்கள் போலவும் காட்டிகொள்கின்றனர். அம்னோ தலைவர்களிடம் தங்கள் குரலை தாழ்த்தி மிகவும் பணிவுடம் சிலவற்றை மட்டும் கேட்பார்கள்.

அம்னோ தலைவர்கள் இவர்கள் நூறு கேட்டால், ஒரு ஐந்து மட்டுமே தருவார்கள். அதோடு நம் தலைவர்கள் அம்னோவின் குட்டி, குட்டி தலைவர்களிடமும் – ஏன் அரசாங்க மலாய் பணிவாளர்கிடமும் மிகவும் பணிவன்புடன் தான் பேசுவர். இவர்களுக்கு தங்கள் வீரத்தையும், துணிச்சலையும் காண்பிக்க கட்சி உறுப்பினர்கள் மற்றும் இந்திய சமுதாயம் இருக்கவே இருக்கிறது.

வரும் பதிமூனாவது பொது தேர்தலில் நம் சமுதாயத்தினர் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் எதிர்கால சந்ததினியரின் எதிர்காலத்தையும் நினைத்து எந்த கூட்டணி உங்களுக்கு அதிக நன்மைகள் செய்யும் என்று ஆராய்ந்து, பிறகுதான் உங்கள் ஒரே பொக்கிசமான வாக்குகளை அந்த கூட்டணிக்கு போடவேண்டும்.

நாம் 54 வருடங்களை சுயநல, ஏமாற்றும், கேடுகெட்ட அரசியல்வாதிகளை நம்பி வீணாகியதே தவிர நம் சமுதாயதிக்கு நன்மைகள் மிகவும் குறைவாகவே கிடைத்துள்ளது. ஆனால் இழந்ததோ மிகவும் அதிகம். உதாரணமாக மைக்க ஹோல்டிங்க்சில் வாங்கிய பங்குகள். நாம் அனைவரும் சுயநலமில்லாமல், ஒன்றுபட்டு நமக்கு அதிக நன்மைகள் செய்யும் அரசியல்வாதிகளையே நாம் தேர்ந்தெடுப்போம். வாழ்க தமிழ் மொழி! வாழ்க தமிழர்கள்!