இராகவன் கருப்பையா – நம் நாட்டில் ஒரு சில உணவகங்களிலும் அங்காடிக் கடைகளிலும் பரிமாறப்படும் உணவுகளில் உமிழ் நீர் கலந்திருக்கும் அவலம் ஏற்படுவதைப்போல் தெரிகிறது.
உணவு தயார் செய்யப்படும் வேளைகளில் அல்லது வாடிக்கையாளர்களிடம் பரிமாறுவதற்கு முன் சம்பத்தப்பட்ட ஊழியர்கள் அந்த உணவில் எச்சில் துப்பும் காட்சிகளைக் கொண்ட காணொளிகள் அண்மைய காலமாக பகிரப்பட்டு வருகின்றன.
இது போன்ற முறைகேடுகள் நீண்ட நாள்களாகவே நம் நாட்டில் இருந்து வருவதாக நம்பப்படுகிறது. இருப்பினும் சுகாதார அமைச்சு எம்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றுதான் தெரியவில்லை.
இத்தகைய ஒழுங்கீனத்தை உறுதிப்படுத்தும் வகையிலான காணொளிகள் சமீப காலமாக அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதால் வெகுசன மக்களின் கவனத்தை அது ஈர்த்துள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் ஏன் இப்படி செய்கின்றனர் என்று தெரியவில்லை. ஆனால் இவர்களுடைய உமிழ் நீரால் மாசு படியும் உணவைத்தான் நாம் உட்கொள்ள வேண்டுமா எனும் கேள்வி எழுகிறது.
இதனால் கடுமையான நோய்கள் கூட பரவக் கூடிய சாத்தியம் இருப்பதையும் நாம் நிராகரிக்க முடியாது. ஏனெனில் அந்த ஒழுங்கீனவாதி எத்தகைய நோயால் அவதிப்படுகிறார் என்று தெரியாது.
எச்சில் துப்புபவர்கள் முறைப்படி கழுவுதொட்டி, கழிப்பறை அல்லது நீரோட்டம் உள்ள சாக்கடையில்தான் அதனை செய்ய வேண்டும். ஆனால் ஒரு சில உணவகங்களிலும் அங்காடிக் கடைகளிலும் அந்த ஊழியர்கள் வேண்டுமென்றே உணவில் உமிழ்வதாகத் தெரிகிறது.
இத்தகைய இழிச் செயலை அவர்கள் எப்படி நியாயப்படுத்துவார்கள் என்று தெரியாது. எம்மாதிரியான காரணங்களை அவர்கள் முன்வைத்தாலும் அவை ஏற்புடையதாகவும் இருக்காது.
எனவே சுகாதார அமைச்சு இத்தகையோருக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
இப்படிப்பட்ட அருவருப்பான செயல்களைப் புரியும் ஊழியர்களின் முதலாளிகளையும் சுகாதார அமைச்சு அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும்.