திருக்குறளுக்கு மரியாதை வேண்டும்

இராகவன் கருப்பையா – ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றான திருக்குறளை  காலங்காலமாக நாம் போற்றி, புகழ்ந்து, பின்பற்றி, பயனடைந்து வருகிறோம்.

தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பன்னாட்டு இனத்தவரும் பயனடையும் வகையில் 80கும் மேற்பட்ட மொழிகளில் அது மொழி பெயர்க்கப்பட்டு அதன் மேன்மை போற்றப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை அறிவிக்கும் போது பிரதமர் அன்வார் பொருத்தமான ஒரு குறளைத் தேர்வு செய்து வாசிக்க முற்படுவது தவறில்லை. அது வரவேற்கத்தக்க ஒரு முயற்சிதான்.

இவ்வாண்டு, ‘உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு’ எனும் 724ஆவது குறளை அவர் வாசித்தார். அதாவது, ‘மிக்க பசியும், ஓயாத நோயும்(வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்,’ என்பதே அதன் பொருளாகும்.

யாருடையத் துணையோடு இந்தக் குறளை அவர் தேர்வு செய்தார் என்று தெரியாது. எனினும், அது சூழ்நிலைக்கு ஏற்ற ஒன்றுதான் என்பதில் ஐயமில்லை.

இருந்த போதிலும் அவர் தட்டுத் தடுமாறி அக்குறளை வாசிக்க முற்பட்ட போது இதர உறுப்பினர்கள் நகையாடியது, தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த நமக்கு வேதனையாக இருந்தது.

திருக்குறளின் மாண்பை அறியாதவர்களுக்கு அது ஒரு கேலிக் கூத்தாக இருக்கலாம், கைக் கொட்டி சிரிக்கலாம். ஆனால் திருக்குறளோடு இரண்டறக் கலந்துவிட்ட நமக்கு அப்படி இல்லை.

அரிய பொக்கிஷமான அந்த வாழ்வியல் நூலை எந்த அளவுக்கு நாம் போற்றி, புகழ் பாடி, மதிக்கின்றோம் என்று அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

ஆனால் அச்சமயத்தில் அவையில் இருந்த நம் சமூகத்தைச் சேர்ந்தப் பிரதிநிதிகளுக்கு அது உரைத்ததா அல்லது அவர்களும் கூத்தில் கோமாளிகளாக, கூட்டத்தோடு கூட்டமாக கோவிந்தா போட்டார்களா தெரியாது.

எனவே இனிவரும் காலங்களில் நம் திருக்குறளுக்கு இப்படிப்பட்ட  ஒரு நிலை  ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வது நம் சமூகத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பாகும்.

மற்றவர்கள் கண்டுகொள்ளாவிட்டாலும், தமிழ் மொழியில் ஆற்றல்  பெற்றுள்ள கிளேங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் அல்லது தாப்பா உறுப்பினர் சரவணன் இதனை முன்னெடுக்க வேண்டும்.

குறளை தேர்வு செய்யும் பிரதமர், , அதனை சரியாக வாசிக்கும் வேண்டும் என இவர்கள் ஆலோசனை வழங்குவது அவசியமாகும்.