அடுத்த பொதுத் தேர்தலில் யாருக்குதான் வாக்களிப்பது?

இராகவன் கருப்பையா – நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஏறத்தாழ 3 ஆண்டுகள் இருக்கிற போதிலும் தொகுதிகளுக்காக முண்டியடிக்கத் துடிக்கும் அரசியல்வாதிகள் அதற்கான ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளதைப் போல் தெரிகிறது.

பிரதமர் அன்வாரின் ஒரு சில நடவடிக்கைகள் கூட அடுத்த பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் நகர்வுகள்தான் என்பதில் ஐயமில்லை.

“தற்போதையக் கொள்கைகளில் நாம் உறுதியாக இருந்தால் மேலும் ஒரு தவணக்கான மக்களின் ஆதரவு இந்த ஒற்றுமை அரசாங்கத்திற்குக் கிடைக்கும்,” என சில தினங்களுக்கு முன் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் ‘சைலண்ட் மெஜோரிட்டி’ எனப்படும் ‘அமைதியாக இருக்கும்’ ஒரு சாராரின் எண்ணங்களை அன்வார் கருத்தில் எடுத்துக் கொண்டதாக  தெரியவில்லை.

கடந்த தேர்தலின் போது, ‘சீர்திருத்தம்’ தொடர்பாக அவர் அளித்த பல்வேறு வாக்குறுதிகள் காற்றில் கரைந்துவிட்டது அந்த ‘சைலண்ட் மெஜோரிட்டி’யினரின் மனங்களில் ஆழமாகப் பதிந்துள்ளது.

“தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அன்வார் நிறைவேற்றத் தவறிவிட்டார்,” என மலாய்க்காரர் அல்லாதாரில் ஒரு சாராரும் குறைபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இப்படி ஏமாற்றத்தோடு இருப்பவர்கள் அடுத்த பொதுத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதுதான் தற்போதைய ‘மில்லியன் டோலர்’ கேள்வி.

ஏனெனில் நம் நாட்டில் ஆட்சியமைக்கும் வலிமையுடன் தற்போது இருப்பதோ 2 கூட்டணிகள்தான். அதாவது தேசிய முன்னணியுடனான பக்காத்தான் ஹராப்பானும் பெரிக்காத்தான் நேஷனலும் மட்டுமே.

“இனிமேலும் பக்காத்தானுக்கு வாக்களிக்கக் கூடாது,” என்று முடிவெடுப்பவர்கள், குறிப்பாக மலாய்க்காரர் அல்லாதார், பெரிக்காத்தானுக்கு ஆதரவளிக்க வாய்ப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் பாஸ் கட்சியை முதுகெலும்பாகக் கொண்ட அக்கூட்டணி, ஆட்சியைக் கைப்பற்றினால் சமயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் நிலை தற்போது இருப்பதைவிட மேலும் மோசமாகும் என்பதில் சந்தேகமே இல்லை.

அந்தக் கூட்டணியில் எம்.ஐ.பி.பி. எனும் புத்தம் புதிய இந்தியக் கட்சியும் பல்லினக் கட்சியான கெராக்கானும் அங்கம் வகிக்கிர போதிலும் அவை இரண்டுமே ‘இருந்தும் இல்லாததைப் போல்தான்,’ என்பது எல்லாத் தரப்பினருக்கும் நன்றாகவேத் தெரியும்.

நாட்டிலுள்ள 2 முன்னணிக் கூட்டணிகளுமே மலாய்க்கரர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதில்தான் குறியாக இருக்கின்றன.

அதற்காக மதத்தையும் இனத்தையும் எவ்வாறெல்லாம் அவை பயன்படுத்துகின்றன என்பதும் அனைவரும் அறிந்த உண்மைதான்.

இத்தகைய சூழலில் மேற்குறிப்பிட்ட ‘சைலண்ட் மெஜோரிட்டி’யினர் தங்களுக்கு ஏற்றக் கூட்டணி இல்லாத பட்சத்தில் தேர்தலை புறக்கணிக்கக் கூடும்.

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயகக் கடப்பாட்டை நிறைவேற்றத் தவறும் ஒரு செயல்தான் எனும் போதிலும் அதற்கான சாத்தியம் அதிகமாகவே உள்ளது.

இதற்கிடையே அடுத்த 36 மாதங்களில் மூன்றாவது அணியொன்று உருவாகுமேயானால் இந்த ‘சைலண்ட் மெஜோரிட்டி’யினரின் கவனத்தை அது ஈர்க்கக் கூடும் என்று நம்பலாம்.