இராகவன் இருப்பையா – இந்நாட்டில் கல்வி கற்ற சமுதாயமாக இருந்தால் மட்டுமே நாம் தலைநிமிர முடியும், மதிக்கப்படுவோம் என்பது அசைக்க முடியாத உண்மை.
எனினும் ஆண்டு தோறும் உயர்கல்வி நிலையங்களில் இடம் கிடைக்காமல் அவதியுறும் நம் சமூகத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களின் கண்ணீர் கதைகள் நம்மை சோகத்தில் ஆழ்த்திக் கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் 50 புதிய மருத்துவர்களை உருவாக்க, மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவான ‘மித்ரா’ மேற்கொண்டுள்ள முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது.
‘மெட்ரிக்குலேஷன்’ அல்லது எஸ்.டி.பி.எம். தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற 50 மாணவர்கள் பெர்டானா பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வியை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை ‘மித்ரா’ மேற்கொண்டுள்ளது.
அவர்களில் 10 பேருக்கு தலா 350 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள முழு உபகாரச் சம்பளமும் மேலும் 10 பேருக்கு பாதி உபகாரச் சம்பளமும் பாதி பி.டி.பி.டி.என். கடனுதவித் திட்டத்தையும் ‘மித்ரா’ ஏற்பாடு செய்கிறது என அதன் பணிக்குழுத் தலைவர் பிரபாகரன் குறிப்பிட்டார்.
அனைத்து உபகாரச் சம்பளத்தையும் பெர்டானா பல்கலைக்கழகமே வழங்குவதால் இத்திட்டத்தில் மித்ராவுக்கு செலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மீதமுள்ள 30 மாணவர்களுக்கு பி.டி.பி.டி.என். முழு கடனுதவி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என பிரபாகரன் கூறினார்.
பெர்டானா பல்கலைக்கழகம் மருத்துவக் கல்விக்கு மட்டுமே இந்த உபகாரச் சம்பள ஏற்பாட்டிற்கு இணங்கியுள்ளதால் சட்டம், கணக்கியல் மற்றும் பொறியியல் போன்ற இதரத் துறைகளில் இத்தகைய வசதிகளைப் பெறுவதற்கு எதிர்காலத்தில் மற்ற உயர்க்கல்வி நிலையங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ‘மலேசியா இன்று’விடம் அவர் விளக்கமளித்தார்.
‘மித்ரா’விற்கு அரசாங்கம் வழங்கும் 100 மில்லியன் ரிங்கிட் மிகவும் குறைவுதான் எனும் போதிலும் அதில் பெரும்பகுதியை நம் சமூகத்தின் கல்வி மேம்பாட்டிற்கு ஒதுக்குவது குறித்து அந்த பணிக்குழு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.
சமூக நல இலாக்கா செய்ய வேண்டிய வேலைகளை ‘மித்ரா’ மேற்கொண்டு வருகிறது எனும் குறைபாடு நம் சமூகத்தினரிடையே பரவலாக நிலவுகிறது.
அப்படிப்பட்ட உணர்வு முற்றிலும் தவறு என்று நாம் புறம் தள்ளிவிட முடியாது. ஏனெனில் சில தேவையில்லாத வேலைகளை ‘மித்ரா’ செய்து வருகிறது என்பதும் உண்மைதான்.
கல்வியமைச்சுக்கு வரவு செலவுத்திட்டத்தில் மிகப்பெரியத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது நாம் எல்லாரும் அறிந்த ஒன்றுதான். எனவே நம் பள்ளிகளை அந்த அமைச்சுதான் கவனிக்க வேண்டும்.
அதே போல தொழில்முனைவோர்களின் நலன்களை கவனிப்பதற்கும் வேறொரு அமைச்சு இருக்கிறது. அதன் துணையமைச்சர் ரமணன் செய்ய வேண்டிய வேலைகளை ‘மித்ரா’ செய்ய வேண்டிய அவசியமில்லை.
எனவே இப்படிப்பட்ட செலவுகளை குறைத்துக் கொண்டு B40 தரப்பைச் சேர்ந்த நம் பிள்ளைகளின் கல்வித் தேவைகள் மீது ‘மித்ரா’ மேலும் அதிகமான கவனத்தை செலுத்துமேயானால் அடுத்த 10 ஆண்டுகளில் ஆயிரக் கணக்கான புதிய பட்டதாரிகளை நாம் உருவாக்க முடியும் என்பதில் கடுகளவும் ஐயமில்லை.