மலாய் மொழியில் தமிழ் வானொலி!

இராகவன் கருப்பையா –கடந்த 1980களின் தொடக்கத்தில் ‘ரங்காயான் மேரா'(Rangkaian Merah) என்று அழைப்பட்ட தற்போதைய ‘மின்னல் எஃப் எம்’ வானொலி ஏறத்தாழ ஒரு ஆண்டு காலத்திற்கு மலாய் மொழியில் இயக்கப்பட்டது எனும் விவரம் தற்போதைய இளைய தலைமுறையினரில் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தமிழ் பிரிவு மட்டுமின்றி ஆங்கிலம் மற்றும் சீன வானொலிகளுக்கும் இதே நிலைதான். எல்லா அறிவிப்புகளையும் மலாய் மொழியில்தான் செய்ய வேண்டும் எனும் விதிமுறை அப்போது இருந்தது.

அந்த சமயத்தில் தகவல்துறை துணையமைச்சராக இருந்த ஷாரிஃப் அஹ்மட்தான் வலுக்கட்டாயமாக இதனை அமுல்படுத்தினர் என்று கூறப்படுகிறது.

வானொலியில் அச்சமயத்தில் பணியாற்றியவர்களில் பெரும்பாலோர் ஆங்கிலப் பள்ளியில் பயின்றவர்களாதலால் மலாய் மொழியில் சரளமாக அறிவிப்புகளை செய்வது அவர்களுக்கு பெரும் சவாலாகத்தான் இருந்துள்ளது.

‘பெரித்த ஆக்கான் டி சம்பாய்கான் ஓலே பைரோஜி நாராயணன,'(செய்திகளை வாசிப்பது பைரோஜி நாராயணன்), ‘லகு பெரிக்குட் ஆக்கான் டி பாவாக்கான் ஓலே டி.எம்.சவுந்தர்ராஜன் டான் பி.சுசிலா,'(அடுத்த பாடலை டி.எம்.சவுந்தர்ராஜனும் பி.சுசிலாவும் வழங்குவார்கள்).

‘லகு இனி டி பெத்திக் டாரி ஃபிலிம் மவுன ராகங்கள்,'(இந்த பாடல் மவுன ராகங்கள் திரையில் இடம் பெற்றது).’மியூஸிக் டி சுசுன் ஓலே விஸ்வநாதன் ராமமூர்த்தி,'(இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி).

இது போன்ற அறிவிப்புகளைத்தான் வானொலி நேயர்கள் அக்காலக் கட்டத்தில் ‘ரங்காயான் மேரா’வில் தொடர்ச்சியாக செவிமெடுத்துக் கொண்டிருந்தனர்.

அதுமட்டுமின்றி, இடையிடையே ஒரு மலாய் பாடலை ஒலிபரப்ப வேண்டும் எனும் விதிமுறையும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போதெல்லாம் இரவு நேர ஒலிபரப்புக் கிடையாது. ஒலிபரப்புக்கான கால அவகாசம் கூட நாளொன்றுக்கு சுமார் 12 மணி நேரம் மட்டும்தான். அதனையும் கூட தமிழ் வானொலியும் சீனப் பிரிவும் மாறி மாறி பகிர்ந்து கொள்ள வேண்டும் எனும் குழல் இருந்தது.

இந்தக் காலக்கட்டத்தில்  ‘ரங்காயான் மேரா’வுக்கான நேயர்களின் எண்ணிக்கை சன்னம் சன்னமாகக் குறையத் தொடங்கி, நிறைய பேர் சிங்கப்பூர் வானொலியை செவிமெடுக்கத் தொடங்கியதாக நம்பப்படுகிறது.

முன்னாள் பிரதமர் மகாதீர் கடந்த 1981ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் முதல் முறையாக நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்ற சில நாள்களில் அவருடைய காரில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது அவருடைய காரோட்டி எதேச்சையாக சீன வானொலிப் பிரிவுக்கான விசையைத் தட்டியுள்ளார்.

உடனே அவசர அவசரமாக அதனை மாற்ற அந்த காரோட்டி முற்பட்ட போது, மகாதீர் அவரை தடுத்து நிறுத்தி சிறிது நேரம் அவ்வானொலி ஒலிபரப்பை செவிமெடுத்துள்ளார்.

பிற மொழி வானொலி நிலையங்களில் மலாய் மொழியில் அறிவிப்புகள் செய்யப்படுவது அநேகமாக அப்போதுதான் மகாதீருக்குத் தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒரு அம்னோ கூட்டத்திற்கு, சீன வானொலியில் பதிவு செய்யப்பட்ட நாடா ஒன்றை எடுத்து வந்து ஒலியேற்றிக் காட்டினார் மகாதீர்.

“உங்களுக்கெல்லாம் இது புரிகிறதா,” என அம்மோ உறுப்பினர்களிடம் அவர் கேள்வி எழுப்பிய போது, அங்கிருந்த பலர் திருதிருவென விழித்தனர். ஏனெனில் என்ன பேசப்படுகிறது என்று தெளிவாக புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மலாய் மொழி உச்சரிப்பு மிகவும் மோசமாக இருந்திருக்கிறது.

“மலாய் மொழி எப்படி அவஸ்தைப்படுகிறது பாருங்கள். இது நமக்குத் தேவைதானா,” என சஞ்சலப்பட்டு, அவரவர் மொழிகளிலேயே வானொலி அறிவிப்புகளை செய்யட்டும் என அத்தருணத்திலேயே மகாதீர் உத்தரவு பிறப்பித்தார்.

அந்த மாற்றத்தை மகாதீர் அப்போது செய்யாதிருந்தால் தற்போதைய ‘மின்னல் எஃப் எம்’ எம்மாதிரியான பரிணாமத்தைப் பெற்றிருக்கும் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.