இராகவன் கருப்பையா- நம் நாட்டின் தேவைகளை முதலில் பூர்த்தி செய்துவிட்டு பாலஸ்தீனுக்கு உதவி செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ரபிடா அஸிஸ் வலியுறுத்தியுள்ளது நியாயமான ஒன்றுதான்.
பாலஸ்தீனின் காஸாக்கரையில் தற்போது போர் நிறுத்தம் அமுலில் இருப்பதைத் தொடர்ந்து அங்கு பள்ளிவாசல்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகளை மறுநிர்மாணம் செய்வதற்கு மலேசியா உதவும் என பிரதமர் அன்வார் அண்மையில் செய்த அறிவிப்பு பொது மக்களிடையே பல தரப்பட்டக் கருத்துக்களை கிளறிவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்திய ரஃபிடா, உள்நாட்டிலேயே நகர்புறங்களுக்கு வேளியே எண்ணற்ற மருத்துவமனைகளும் பள்ளிக்கூடங்களும் மோசமான நிலையில் உள்ளதை சுட்டிக்காட்டினார்.
அவருடைய ஆதங்கத்தில் நியாயம் இருக்கவேச் செய்கிறது. ஏனெனில் இத்தகைய குறைபாடுகள் நீண்ட நாள்களாகவே கவனிக்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன.
கிராமப் புறங்களில் உள்ள பல பள்ளிக்கூடங்கள் பலகையினால் கட்டப்பட்ட பழையக் கட்டிடங்களாகும். அவற்றில் பல, நீண்ட நாள்களாக பழுதுபார்க்ப்படாமல் ஓட்டையும் ஒடிசலுமாகக் கிடக்கின்றன.
பஹாங், குவாந்தான் நகருக்கு வெளியே ஜெராம் எனும் இடத்தில் ஏறத்தாழ 28 ஆண்டுகளாக ஒரு தமிழ்ப்பள்ளி ‘கொண்டெய்னர்’ எனும் கொள்கலனில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
எத்தனையோ அரசாங்கங்கள் மாறியும் அப்பள்ளிக்கு இன்னமும் விமோசனம் பிறக்காமல் இருப்பது வேதனைக்குரிய விஷயம்.

சபா மாநிலத்தின் நபாவான் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளிக்குச் செல்ல ஆபத்தான வகையில் மாணவர்கள் அற்றைக் கடக்க வேண்டியுள்ளது. முறையான பாலமொன்று இல்லாத பட்சத்தில் சிறு மரங்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ள ‘ராஃப்ட்’ எனப்படும் ஒரு தெப்பத்தின் மீது ஏறி நின்று அந்த ஆற்றை அவர்கள் கடக்கின்றனர்.
ஒரு சில மாணவர்கள் ஆற்றின் இரு மருங்கிலும் கட்டப்பட்டுள்ள கயிற்றில் தொங்கியவாறு, ஆங்கிலத் திரைப்படத்தில் உள்ளதைப் போல் அங்குமிங்கும் பயணிக்கின்றனர்.
நகர்புறங்களுக்கு அப்பால் உள்ள எண்ணற்ற அரசாங்கக் கிளினிக்குகள் கூட மோசமான நிலையில்தான் உள்ளன என்பது வெள்ளிடை மலை.
முதியோர்களும் பேறுகுறைந்தோரும் கூட மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டிய அவல நிலை உள்ளது. அவர்கள் முறையாக அமர்ந்திருப்பதற்கான வசதிகள் கூட இல்லை என்பது வேதனையான விஷயம்.
கிராமப்புறங்கள் மட்டுமின்றி கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை மற்றும் புத்ராஜெயா மருத்துவமனையிலும் நிவர்த்தி செய்யப்படாத பல குளறுபடிகள் உள்ளன.
கவனிக்கப்படாமல் கிடப்பில் உள்ள இத்தகைய அவலங்களை எல்லாம் மனத்தில் வைத்துதான் அன்வார் முதலில் உள்நாட்டுத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டுமென ரஃபிடா அறிவுறுத்தியுள்ளார் என்று தெரிகிறது.