மேடை பேச்சாளர்களும் நேரக் கட்டுப்பாடுகளும்

இராகவன் கருப்பையா – சில மேடைப் பேச்சாளர்கள், குறிப்பாக புத்தக வெளியீடுகள், கருத்தரங்குகள், இலக்கிய, சமய மற்றும் சமூக நிகழ்சிகளில் உரையாற்றுபவர்கள் நேரக் கட்டுப்பாடுகளை அனுசரித்து, அதற்கு ஏற்றவாறு தங்களுடைய உரைகளை நிறைவு செய்யத் தவறிவிடுகின்றனர்.

இத்தகைய போக்கு இக்கட்டான ஒரு சூழலை ஏற்படுத்துவதால் அவர்களுடைய உரை எவ்வளவுதான் முக்கியமான ஒன்றாக இருந்தாலும் கடைசியில் அதற்கு மவுசு இல்லாமல் போய்விடுகிறது.

உரை நிகழ்த்துவதில் அவர்கள் அதீத ஆற்றலுடைய சொல்வேந்தர்களாக இருந்தாலும் கூட, கால அவகாசத்தோடு தங்களுடைய கடமையை அவர்கள் நிறைவு செய்யாவிட்டால் சுய மரியாதையையும் அவர்கள் இழந்துவிடுகின்றனர்.

ஒலிவாங்கியை கையில் பிடித்தவுன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை மறந்துவிடும் அவர்களை நிறுத்த இயலாமல் சிரமப்படும் ஏற்பாட்டுக் குழுவினர் படும் அவஸ்தை பல வேளைகளில் பார்ப்பதற்கு பரிதாபமாக இருக்கும்.

ஆர்வக் கோளாரில் நேரத்தைக் கடந்து தொடர்வண்டியைப் போல அவர்கள் பேசிக் கொண்டிருப்பது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு எம்மாதிரியான அசெளகரியத்தை ஏற்படுத்துகிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை.

“இவரை பேச அழைத்ததே தவறாகப் போய்விட்டது,” என  ஒருசில வேளைகளில் ஏற்பாட்டாளர்கள் வருந்தும் அளவுக்கு சில பேச்சாளர்கள் சங்கடமான சூழலை உருவாக்கி விடுகின்றனர்.

பார்வையாளர்கள் கொட்டாவியிட்டாலோ, மேடையில் கவனம் செலுத்தாமல் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசிக்கொண்டிருந்தாலோ, அடிக்கடி மண்டபத்தை விட்டு வெளியேறிச் சென்றாலோ, உரையை முடிந்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை சம்பந்தப்பட்ட பேச்சாளர்கள் உணர வேண்டும்.

சில சமயங்களில் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த ஒருவர் பார்வையாளர்களுக்குத் தெரியாத வகையில் மண்டபத்திற்குள் பின்னால் சென்று, “ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது,” என்பதை குறிக்கும் வகையில் அங்கிருந்து பேச்சாளருக்கு சைகை காட்டுவார்.

மற்ற பல வேளைகளில், பேச்சை நிறைவு செய்ய இன்னும் எத்தனை நிமிடங்கள் உள்ளன என்பதைக் குறிக்கும் ஒரு சிறிய பதாகையை அந்த உறுப்பினர் அங்கிருந்து உயர்த்திக் காட்டுவார்.

ஒரு சில சமயங்களில் பேச்சாளருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுப்பதைப் போல மேடையேறி கூடவே ஒரு சிட்டையையும் கொடுத்து விட்டு வருவார்கள். அந்தச் சிட்டையில், “தங்களுக்கான நேரம் முடிந்து விட்டது,” அல்லது “நேரம் முடியப்போகிறது,” என்று எழுதப்பட்டிருக்கும்.

நிகழ்ச்சி நெறியாளர் மேடையை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து செல்வதும் ஒருவிதமான சைகைதான் என்பது பேச்சாளர்களுக்கும் தெரியும். ஆனாலும் அதனையும் கூட அவர்கள் உதாசினப்படுத்துவார்கள்.

சில வேளைகளில், ஒலியமைப்பை கையாளுபவர் 2 அல்லது 3 வினாடிகளுக்கு இசையொன்ற திடீரென ஒலியேற்றுவார். இத்தகைய சைகைகளையெல்லாம் சம்பந்தப்பட்ட பேச்சாளர்கள் உதாசினப்படுத்துவது ஒரு புறமிருக்க, அவற்றை சுட்டிக்காட்டி ஏற்பாட்டாளர்களை நையாண்டி செய்வதும் உண்டு.

இப்படியாக ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்தவர்கள் பேச்சாளர்களின் உரையை நிறுத்துவதற்கு பல்வேறு யுக்திகளை மிகவும் நாசுக்காக மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

இதில், ‘முதலுக்கே மோசம்’ என்னவென்றால், தங்களுக்கான நேரம் முடிந்தவுடன், “நான் மேலும் தொடரட்டுமா,” என பார்வையாளர்களிடம் கேட்பார்கள். நேரத்தோடு உரை நிறுத்தப்படவில்லயென்றால் ‘தலைவலி’ ஏற்பாட்டாளர்களுக்குத்தானே ஒழிய பார்வையாளர்களுக்கு இல்லை என்பதை அவர்கள் உணர்வதில்லை.

எந்தப் பார்வையாளரும், “இதோடு நிறுத்து,” என்று கூறியதாக சரித்திரமில்லை. ஒரு மரியாதைத்தாக, “தொடருங்கள்,” என்று தான் பதிலுரைப்பார்கள்.

அடுத்தப் பேச்சாளருக்கு வழிவிட வேண்டும் அல்லது மண்டபத்தை உரிய நேரத்தில் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் போன்ற கடப்பாடுகள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்குத்தான் உள்ளது எனும் உண்மை தெரிந்தும் கூட, இதுபோன்ற ‘டிராமா’க்களை இந்த ‘மேதாவி’ பேச்சாளர்கள் அரங்கேற்றுவார்கள்.

ஆக, ஒரு பேச்சாளர், அவர் சார்ந்தத் துறையில் எவ்வளவுதான் பாண்டியத்துவம் பெற்றிருந்தாலும், இது போன்ற அடிப்படை மேடை மரியாதையின்றி செயல்படுவாரேயானால் அவருடைய பேச்சுக்கு நாளடைவில் மதிப்பும் மரியாதையும் இல்லாமல் போய்விடும் என்பது உறுதி.

தங்களுக்கு உறுதி செய்யப்பட்ட கால அவகாசம் தவிர்க்க முடியாதக் காரணத்தினால் கடைசி நேரத்தில் சுருக்கப்பட்டாலும், அதற்கு ஏற்றவாறு உரையையும் சுருக்கிக் கொள்வதே ஆற்றல் மிக்க பேச்சாளர்களுக்கு சிறந்த அடையாளம்.