சமய விவகாரங்களுக்கு சோதனை மிகுந்த வாரம்

இராகவன் கருப்பையா- இன்னும் சில தினங்களில் நாடலாவிய நிலையில் மலேசிய இந்துக்கள் தைபூசத் திருநாளை மிகவும் விமர்சையாகக் கொண்டாடவிருக்கும் இத்தருணத்தில், சமய விவகாரம் சம்பந்தப்பட்ட இரு விஷயங்கள் நமது மனங்களில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி கூடவே கலக்கத்தையும் ஏற்படுத்தின.

முதலாவது, மற்ற சமயத்தவரின் நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் பங்கேற்பது சம்பந்தப்பட்ட வழிகாட்டிகள் தொடர்பானது.

இரண்டாவது, சர்ச்சைக்குரிய மத போதகர் ஸாக்கிர் நாய்க் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் சமய உரை ஆற்றத் தொடங்கியுள்ளது.

முஸ்லிம் அல்லாதாரின் சமய விழாக்களிலோ இதர நிகழ்ச்சிகளிலோ பங்கேற்கச் செல்லும் இஸ்லாமியர்கள் கடைபிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டிகள் தற்போது பரிசீலனையில் உள்ளன என்று சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறையமைச்சர் நயிம் மொத்தார் சில தினங்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அதே போல முஸ்லிம் அல்லாதார் தங்களுடைய நிகழ்ச்சிகளுக்கு இஸ்லாமியர்களை அழைப்பதாக இருந்தால் முதலில் சம்பந்தப்பட்ட இஸ்லாமிய இலாகாக்களிடம் இருந்து ஆலோசனை பெறவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இனங்களுக்கிடையே சமூக, கலாச்சார ஒற்றுமையை வளர்ப்பதுதான் இதன் நோக்கம் என அவர் சமாதானம் கூற முற்பட்ட போதிலும், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவருடைய பரிந்துரைக்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்தது.

ம.இ.கா. துணைத் தலைவர் சரவணன் இதற்கு உக்கிரமாக எதிர்ப்புத் தெரிவித்து ஆக்கரமான வகையில் தனது கருத்தை முன் வைத்தது வரவேற்கத்தக்க ஒன்று.

ஒரு முஸ்லிம் அல்லாதாரின் இறப்புக்கோ அவர் வீட்டுத் திருமண வைபவத்திற்கோ இஸ்லாமிய நண்பர்களை அழைக்க வேண்டுமென்றால் ‘ஜாக்கிமிடம்’ முதலில் அனுமதி பெற வேண்டுமா என அவர் ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பினார்.

பிரதமர் அன்வார் இவ்விவகாரத்தில் தலையிட்டு அப்படி ஒரு அனுமதி தேவையில்லை என்று அறிவித்துள்ளது, அவரின் சரிந்து வரும் செல்வாக்கை மிதமாக்கும்.

அதோடு இன்று சிலாங்கூர் மாநில சுல்தான் ஷரிபுடின் ஷா- அவர்களும் அப்படி ஒரு அனுமதி தேவயில்லை என்று அறிவிதிருப்பது, நமது ஆட்சியாளர்களின் ஆழமான ஆக்ககரமான சிந்தனையை வெளிப்படுத்துகிறது.

முஸ்லிம் நண்பர்களை எங்கள் விழாக்களுக்கு நாங்கள் அழைக்கிறோம் என்றால் எங்களோடு சேர்ந்து அவ்விழாவை கொண்டாடுவதற்குத்தானே ஒழிய சாமி கும்பிடுவதற்கு அல்ல என ம.சீ.ச.தலைவர் வீ.கா.சியோங் சாடினர்.

வழக்கம் போல சில இளம் மலாய் அரசியல்வாதிகள், “எங்களுடைய இஸ்லாமிய விவகாரத்தில் தலையிடாதீர்கள்,” “தீயோடு விளையாடாதீர்கள்,” போன்ற எச்சரிக்கைளை விடுத்து அரசியல் ஆதாயம் தேட முற்பட்டனர்.

இஸ்லாமிய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடையத் தொகுதிகளில் உள்ள முஸ்லிம் அல்லாதாரின் நிகழ்ச்சிகளில பங்கேற்பதற்கு இந்த வழிமுறைகள் தடங்களை ஏற்படுத்தும் என சிலாங்கர், பாங்ஙி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரெட்ஸான் கூறினார்.

நாடாளுமன்றத்திற்கு வெளியே எண்ணற்ற மலாய்க்காரர்கள் மத்தியிலும் கூட இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் யாரும் சர்ச்சைகளைக் கிளப்ப வேண்டாம் என்கிறார் அன்வார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் உணர்ச்சி மிக்க சமய விவகாரங்கள் எதுவாக இருந்தாலும், பிரதமர் மனது வைத்தால் அது பூதாகரமாக வெடிப்பதைத் தடுத்துவிடலாம்.

கடந்த சில மாதங்களாகவே சமயம் தொடர்பான பல சர்ச்சைகளை இளம் அரசியல்வாதிகள் ஊதி பெரிதாக்கி குளிர்காய்ந்ததை நாம் பார்த்தோம். இதனால் தேவையில்லாத மனக்கசப்பும் உணர்ச்சிக் கொந்தளிப்பும்தான் ஏற்பட்டது.

இனங்களுக்கிடையே ஒற்றுமையை வளர்த்து சுபிட்சமான வகையில் நாடு முன்னோக்கி பயணிக்க வேண்டுமென்றால் இது போன்ற விவகாரங்களில் பிரதமர் தலையிட்டு, முளையிலேயே கிள்ளியெறிவது அவசியமாகும்.