‘நானும் முக்கியமானவன்தான்’ எனும் கலாச்சாரம் வேண்டாம்

இராகவன் கருப்பையா –  பொது நிகழ்ச்சிகளில் பிரமுகர்கள் உரையாற்றும் போது அவர்களுக்கு முன்னாள் இருந்து கொண்டு உரை மீது கவனம் செலுத்துவதே நாகரீகமான செயலாகும்.

அதனை விடுத்து, அவர்களுக்குப் பின்னாலும் அருகிலும் நின்று கொண்டு, “நானும் முக்கியமானவன்தான்,” என்பதை உணர்த்துவதைப் போல புகைப்படக் கருவிகளுக்கு ‘போஸ்’ கொடுக்கக் கூடாது.

பெரும்பாலான வேளைகளில் தமிழ் நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில்தான் இதுபோன்றக் காட்சிகளை நாம் காண முடியும். பிரமுகர் பேசிக்கொண்டிருக்கும் போது பின்னால் நின்று கொண்டு ‘கேமரா’வை எட்டி எட்டி பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று பிரதமர் அன்வார் பத்துமலைத் திருத்தளத்திற்கு வருகையளித்த போது இதுதான் நடந்தது.

பத்துமலை வளாகத்தில் அன்வார் எங்குமே அமர்ந்ததாகத் தெரியவில்லை. நின்று கொண்டேதான் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார், கோயில் தலைவர் நடராஜாவின் விளக்கங்களையும் கேட்டுக் கொண்டிருந்தர்.

அத்தருணத்தில் ம.இ.கா. தலைவர் விக்னேஸ்வரன், துணைத் தலைவர் சரவணன், அமைச்சர் கோபிந் சிங், சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின், ஆகியோரோடு அன்வாரின் மெய்க்காப்பாளர்களும் அருகில் இருந்தது நியாயம்தான்.

ஆனால் மற்றவர்களும் அவர் அருகேக் குழுமிக்கொண்டு முண்டியடித்தது அன்வாருக்கு நிச்சயம் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கும்.

அடிக்கடி அன்வாருக்கு வழிவிடச் சொல்லிக் கொண்டிருந்த அவருடைய மெய்க்காப்பாளர்களுக்கும் அன்றைய தினம் வேலை சற்று அதிகமாக இருந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பெருமளவில் பகிரப்பட்டன.

ஏதோ காணாததைக் கண்ட மாதிரி அன்வாரை சூழ்ந்துக் கொண்டு தேவையில்லாத நெரிசலை அவர்கள் ஏற்படுத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை.

‘நானும் முக்கியமானவன்தான்,’ என்று காட்டிக் கொள்ள ஆசைப்பட்ட கோயில் உறுப்பினர்கள் சிலரின் அதிகப்பிரசங்கித்தனத்தால் 42 ஆண்டுகளுக்கு முன் அங்கு நிகழ்ந்த விபத்தை நிறைய பேர்கள் இன்னும் மறந்திருக்கமாட்டார்கள்.

கடந்த 1983ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதியன்று பத்துமலையில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவின் போது பிரமுகர் மேடையில் அளவுக்கு அதிகமானோர் ஏறி நின்றதால் அம்மேடை ‘படார்’ என உடைத்துக் கொண்டு சரிந்து விழுந்ததை நாம் நினைவுக் கூறத்தான் வேண்டும்.

நடராஜா தேவஸ்தானத்தின் செயலாளராக இருந்த அச்சமயத்தில், தலைவர் கோடிவேல், முன்னாள் அமைச்சர் சாமிவேலு, துணையமைச்சர்கள் சுப்ரமணியம், பத்மநாபன், அவர்களுடைய துணைவியர், சிலாங்கர் மந்திரி பெசார் அஹ்மட் ரஸாலி மற்றும் சபாநாயகர் சைடின் தம்பி உள்பட மேலும் பலரும் வெவ்வேறு பக்கமாக மல்லாக்க விழுந்தனர்.

மரத்தூண்களுக்கடியில் சிக்கிக் கொண்டும் ஆணிகளால் கீறப்பட்டும் காயமடைந்த அவர்களில் பலர் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது வரலாறு.

கோயில் நிர்வாகஸ்தர்களில் ஏராளமானோர் மேடையில் ஏறி பிரமுகர்களின் அருகில் நின்று கொண்டு கேமராக்களுக்கு ‘போஸ்’ கொடுக்க எத்தனித்த போதுதான் எடை தாங்காமல் அது உடைந்தது என பிறகு கூறப்பட்டது.

ஆக, கோயில் நிர்வாகஸ்தர்களோ, வேறு யாராக இருந்தாலோ, வெறும் பந்தாவுக்காக, ‘நானும் முக்கியமானவன்தான்,’ எனும் கலாச்சாரத்தை விட்டொழித்து நாகரீகத்தைக் கடைபிடிப்பது அவசியமாகும்.