மத போதகர் ஸாக்கிர் நாய்கிற்கு மீண்டும் கதவுகள் திறந்தனவா?

இராகவன் கருப்பையா – மலேசிய இந்துக்களின் ஆகப் பெரிய சமய விழாவான தைப்பூசம் மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டு நிறைவடைந்துள்ள இவ்வேளையில் சமயம் தொடர்பான விஷயங்களில் நமது விழிப்புணர்வை மேலும் அதிகரிக்க வேண்டியத் தேவை இப்போது நமக்கு ஏற்பட்டுள்ளது.

அண்மைய காலமாக நம் நாட்டில் பல்லின சமயங்கள் சம்பந்தப்பட்ட விவரங்கள், என்றும் இல்லாத அளவுக்கு நமக்கு புதிய சவால்களைக் கொண்டு வந்துள்ளதை நாம் உணர வேண்டும்.

அந்த வரிசையில், இந்தியாவின் பல்வேறு நீதிமன்றக் குற்றச்சாட்டுகளில் இருந்து நழுவி கடந்த 2017ஆம் ஆண்டில் மலேசியாவிற்குள் நுழைந்துள்ள இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாய்க் விவகாரமும் ஒன்று என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

சர்ச்சைக்குரிய இந்த இஸ்லாமிய மத போதகர், நம் நாட்டின் பல இடங்களில் ஆற்றிய உரைகளில் மற்ற சமயங்களைத் தரம் தாழ்த்தி பேசுகிறார் என காவல் துறையில் எண்ணற்ற புகார்கள் செய்யப்பட்ட போதிலும் வியக்கத்தக்க வகையில் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனினும் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கிளந்தான் மாநிலத்தில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சியொன்றில், இந்தியர்களையும் சீனர்களையும் தாக்கிப் பேசியதைத் தொடர்ந்து காவல்துறை அவருக்கு வாய்ப்பூட்டு போட்டது. நாட்டில் இனி எங்குமே அவர் உரை நிகழ்த்தக் கூடாது என உத்தரவு பிரபிக்கப்பட்டது எல்லாருக்கும் தெரியும்.

தேசிய பாதுகாப்பு மற்றும் இனங்களுக்கிடையிலான ஐக்கியம், ஆகிய அம்சங்களை முன்னிறுத்தி அவருக்கெதிரான அந்த தடை உத்தரவு அப்போது போடப்பட்டது.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன், பெர்லிஸின் கங்ஙார் நகரில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் அவர் உரை நிகழ்த்தியுள்ளது நமக்கெல்லாம் ஆச்சரியமாக உள்ளது.

“மற்ற சமயத்தினரை மத மாற்றம் செய்வதில் நீங்கள் ஆக்ககரமாக செயல்பட வேண்டும்,” என அவ்வேளையில் முஸ்லிம்களை அவர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதன் தொடர்பாக பினேங், ஜெலுத்தோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நேத்தாஜி ராயரும் சிலாங்கர், கிளேங் தொகுதி உறுப்பினர் கணபதிராவும் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் கேள்வி எழுப்பினார்கள். தேசிய காவல்துறை தலைவர் இதற்கு விளக்கமளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தது நாம் அறிந்ததே.

“ஸாக்கிர் நாய்க் மீது போடப்பட்ட வாய்ப்பூட்டு இன்னும் நடப்பில் உள்ளதா,” என அவர்கள் கேள்வி எழுப்பியது கூட, எங்கும் எதிலும் அரசியலை நுழைத்து குளிர்காயும் சில இளம் அரசியல்வாதிகளுக்குத் தவறாகப்பட்டுள்ளது.

“இஸ்லாத்திற்கு எதிராக ராயர் கேள்வி எழுப்பிவிட்டார். அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையேல் காவல் துறையில் புகார் செய்வோம்,” என இதிலும் அவர்கள் அரசியலைத் திணித்து மலிவு விளம்பரம் தேடுவதாகத் தெரிகிறது.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் விஷயங்களுக்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாது எனும் விவரம் கூட இந்த சில்லறை அரசியல்வாதிகளுக்குத் தெரியாமல் போய்விட்டது.

இதில், தமக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், அதிகாரத்தில் இருப்பவர்கள் எல்லாருமே தொடர்ந்து மவுனம் சாதிப்பதுதான்.

இந்த விஷயம் இனங்களுக்கிடையிலான ஐக்கியம் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரம் எனும் போதிலும், காவல்துறைத் தலைவரோ, உள்துறையமைச்சரோ, ஒற்றுமைத் துறையமைச்சரோ, பிரதமர் அன்வாரோ, யாருமே வாய்த் திறக்காமல் இருக்கின்றனர்.

இது போன்ற உணர்ச்சி மிக்க விவகாரங்களை முளையிலேயே கிள்ளியெறிந்தால்தான் சுபிச்சம் நிலவும் என்று அவர்களுக்கும் தெரியும். இல்லையேல் அரசியல் ஆதாயம் தேடத்துடிக்கும் ஒரு சிலர் இதனை ஊதி பெரிதாக்கிவிடுவார்கள் என அவர்களுக்குத் தெரியாதா என்ன?

இருந்த போதிலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் இதனைக் கண்டுகொள்ளவே இல்லை என்பது வருத்தமான விஷயம்.

பொது நிகழ்ச்சிகளில் உரையாற்ற மீண்டும் வாய்ப்புக் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, “எனக்கு யாருமே வாய்ப்பூட்டு போடவில்லை,” என ஸாக்கிர் சற்று இறுமாப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதுதான் உண்மையென்றால் அவருக்கான நிகழ்ச்சிகள் மீண்டும் ‘மடைதிறந்த வெள்ளமாக’க் கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

எனவே நிலைமை பூதாகரமாகி, ‘நனைந்து சுமக்காமல்’ இருப்பதற்கு, குறைந்த பட்சம் காவல்துறை தலைவராவது நமது மக்கள் பிரதிநிதிகள் எழுப்பிய ஐயங்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். இது அரசாங்கத்தின் கடப்பாடாகும்.