‘கெலிங்’ என்றச் சொல்லுக்கு உரிமை கொண்டாட வேண்டாம்

இராகவன் கருப்பையா – ‘கெலிங்’ என்பது இந்நாட்டில் இந்திய சமூகத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஒரு இழிச் சொல் என்பது ஏதோ உண்மைதான்.

எனினும் இன்னும் எவ்வளவு நாள்களுக்கு அச்சொல்லுக்கு நாம் அடிமையாகி, ‘நம்மைத்தான் அது குறிக்கிறது’ என்று உரிமைக் கொண்டாடி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கப்  போகிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

கடந்த வாரம், சிலாங்கூர், செப்பாங் அருகில் சாலையோரம் சோளம் விற்பனை செய்த அங்காடிக் கடையொன்றில் வைக்கப்பட்டிருந்த, ‘கெலிங்கிற்கு இது விற்கப்படாது,’ எனும் வாசகத்தைக் கொண்ட ஒரு பலகை நாடலாவிய நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது எல்லாருக்கும் தெரியும்.

அந்தக் காணொளியை இந்தியப் பெண்மணி ஒருவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததைத் தொடர்ந்து நம் சமூகம் வெகுண்டு எழுந்ததால் நிலைமை பூதாகரமாகியதும் அனைவரும் அறிந்ததே.

இந்நாட்டில் ‘கெலிங்’ என்று நாம் தூற்றப்படுவது இது முதல் முறையில்லை. பல்வேறுத் தருணங்களில் வெவ்வேறு இடங்களில் நம்மில் ஆயிரக் கணக்கானோர் இந்த இழிச் சொல்லுக்கு காலங்காலமாக இலக்காகிக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதை யாராவது மறுக்க முடியுமா?

செப்பாங்ஙில் நிகழ்ந்த சம்பவம் வெறும் ‘பனிப்பாறையின் முனை’தான் என்றால் அது மிகையில்லை. அங்கு சோளம் விற்பனை செய்த வர்த்தகருக்கு அன்றைய தினம் கெட்ட நேரம், எக்குத்தப்பாக மாட்டிக் கொண்டார், அவ்வளவுதான்.

விவகாரம் பெரிதாகி சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, சில அரசியல்வாதிகள் உள்ளே நுழைந்து ‘டிராமா’ போட்டது எதற்கென்று நமக்கும் தெரியாமல் இல்லை.

கடந்த காலங்களில் இது போன்ற விவகாரங்களில் பாராமுகமாக இருந்த காவல் துறையினரும் இம்முறை வேறு வழியின்றி அந்த வர்த்தகரைக் கைது செய்து விசாரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஒவ்வொரு முறையும் எங்காவது சில மதிகெட்ட ஜென்மங்கள் நம்மை ‘கெலிங்’ என்று சொல்லிவிட்டால் காவல்துறையினர் விரைந்தோடிச் சென்று அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவார்கள் என்று எதிர்பார்ப்பதெல்லாம் வெறும் ‘கானல் நீர்’தான்.

அண்மைய ஆண்டுகளில் பிரதமர் அன்வாரும் முன்னாள் பிரதமர் மகாதீரும் கூட நம் சமூகத்தின் உணர்வுகளை துளியளவும் மதிக்கால் ‘கெலிங்’ என்று நம்மை குறிப்பிட்டதை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.

அப்போதெல்லாம் அவர்களுக்கு எதிராக போர்க் கொடித் தூக்கவோ காவல் துறையில் புகார் செய்யவோ யாருக்கும் திராணி இல்லை. அப்படியே செய்திருந்தாலும் காவல் துறையினர் என்ன செய்திருப்பார்கள் என்று நமக்கும் தெரியும்.

பள்ளிகளில் கூட இந்த இழிச் சொல்லுக்கு நம் பிள்ளைகள் பரவலாக ஆளாகியிருப்பது வியக்கத்தக்க ஒன்றல்ல. அவ்வளவு பேர்களையும் பிடித்து சிறையில் அடைக்க முடியுமா என்ன?

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் கண்ணீரை மட்டுமே துணைக்கழைத்து மவுனமாகவே சோகத்தைச் சுமந்து காலத்தைக் கடத்துகின்றனர்.

அவர்களுடைய பெற்றோர்கள் பல்வேறு காரணங்களினால் பள்ளிக்கெதிராகவோ ஆசிரியர்களுக்கு எதிராகவோ சக மாணவர்களுக்கு எதிராகவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் பரிதவிக்கின்றனர்.

இப்பிரச்சனைக்குத் தீர்வுகாண வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ள பள்ளி நிர்வாகமும் அரசியல்வாதிகளும் பெரும்பாலான வேளைகளில் ஏனோதானோ எனும் போக்கைத்தான் கொண்டுள்ளனர்.

எனவே ‘கெலிங்’ எனும் சொல்லுக்கு உரிமைக் கொண்டாடுவதை விடுத்து, ‘சோ வாட்'(அதற்கென்ன இப்போ) எனும் மனப்பான்மையைக் கொண்டு, இவற்றையெல்லாம் கடந்துச் செல்ல நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

நமது நிலையை மற்றவர்களுக்கு நிகராகவோ அல்லது அதற்கும் மேலாகவோ நாம் உயர்த்திக் கொண்டால் நம்மை இகழ்ந்து பேசுவதற்கு யாருக்குத் துணிச்சல் வரும்?

‘தரங்கெட்ட ஜந்துகள் ஏதோ பேதலிக்கின்றன,’ எனும் போக்கில் அந்த இழிச் சொல்லை உதாசினப்படுத்தி, சுய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் முழு கவனத்தையும் நாம் செலுத்துவோமேயானால் காலப் போக்கில் அந்தச் சொல் மறைந்தும் மறந்தும் போய்விடும் என்பது உறுதி.

https://www.bernama.com/en/general/news.php?id=2256822  – இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அன்வாரும் கிளிங் என்றச் சொல்லைப் பயன்படுதியதைப் பற்றி வருத்தம் தெரிவித்தார்.