இராகவன் கருப்பையா – சர்ச்சைக்குரிய அந்நிய மதபோதகரான ஸாக்கிர் நாய்க் தொடர்பாக உள்துறையமைச்சர் சைஃபுடின் செய்த ஒரு அறிவிப்பு நமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கிளந்தான், கோத்த பாருவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்தியர்களையும் சீனர்களையும் தரம் தாழ்த்திப் பேசிய ஸாக்கிருக்கு எதிராக காவல் துறை வாய்ப்பூட்டு போட்டது யாவரும் அறிந்ததே. நாட்டில் இனி எங்கும் அவர் உரை நிகழ்த்தக் கூடாது என கடுமையான உத்தரவு பிரபிக்கப்பட்டது.
இந்திய அரசாங்கத்தின் பல்வேறு நீதிமன்றக் குற்றச்சாட்டுக்களில் இருந்து நழுவி மலேசியாவிற்குள் நுழைந்துள்ள அவருக்கு சகல மரியாதைகளோடு நிரந்தரக் குடியிருப்புத் தகுதியையும் நமது அரசாங்கம் வழங்கியுள்ளது எல்லாருக்கும் தெரியும்.
நமது நினைவுக்கு எட்டிய வரையில், வாய்ப்பூட்டுப் போட்ட பிறகு, கடந்த 5 ஆண்டுகளாக எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் அவர் சமய உரை நிகழ்த்தியதாகத் தெரியவில்லை.
எனினும் சில வாரங்களுக்கு முன் அவர் மீண்டும் உரை நிகழ்த்தத் தொடங்கியதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேத்தாஜி ராயரும் கணபதிராவும் மக்களவையில் கடந்த வாரம் கேள்வி எழுப்பினார்கள்.
நேற்று அதற்கு பதிலுரைத்த சைஃபுடின், 2019ஆம் ஆண்டுக்கு மட்டுமே அந்த வாய்ப்பூட்டு என்று குறிப்பிட்டது நமக்கு பெரும் வியப்பாக உள்ளது மட்டுமின்றி மேலும் பல கேள்விகளுக்கும் வித்திட்டுள்ளது.
ஏனெனில் அந்த வாய்ப்பூட்டு, ஆகஸ்ட் மாதத்திலிருந்து 4 மாதங்களுக்கு மட்டும்தான் அமுலில் இருக்கும் என அரசாங்கம் அப்போது அறிவித்ததா எனும் கேள்வி இப்போது எழுவதில் வியப்பில்லை. சைஃபுடின் இதற்கு விளக்கமளிக்கவும் இல்லை.
இவ்விவகாரத்தில் தொடர்புடைய மற்றத் தரப்பினரும் ஒன்றும் அறியாததைப் போல் மவுனமாகத்தான் இருக்கிறார்கள்.
எது எப்படியோ, கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள நிலையில், ஸாக்கிர் இனி நிறைய சமய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நாட்டிலுள்ள முஸ்லிம் அல்லாதாருக்கு ஒரு விதமான அச்சம் கலந்த சஞ்சல உணர்வு ஏற்பட்டுள்ளது என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
ஏனென்றால் பெர்லிஸ் மாநிலத்தில் அண்மையில் சமய உரை நிகழ்த்தியபோது கூட மதமாற்றம் பற்றிதான் அவர் வலியுறுத்திப் பேசியதாகக் கூறப்படுகிறது.
“இதர சமயத்தவரிடம் இஸ்லாம் மதத்தைப் பரப்புவதற்கான நடவடிக்கைகளை நீங்கள் தீவிரப்படுத்த வேண்டும். இந்நாட்டில் அதற்கான சட்டவிதிகள் இருக்கிற போதிலும் அவற்றை நீங்கள் முழுமையாக பயன்படுத்தாமல் இருக்கிறீகள்,” என்று அவர் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.
அது மட்டுமின்றி, “போதுமான அளவு மத மாற்றங்களை இப்போது நீங்கள் செய்யவில்லையென்றால் மறுபிறவியில் அதற்கான பலனை நீங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும்,” என்று அவர் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில் நம் சமூகத்தைச் சார்ந்த இளையோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியக் கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளதை நாம் உணர வேண்டும்.
பல மாதங்களுக்கு முன் பிரதமர் அன்வார் கூட இந்திய இளைஞர் ஒருவரை மத மாற்றம் செய்தக் காட்சிகள் வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியதை நாம் இன்னும் மறக்கவில்லை.
எனவே ஸாக்கிரின் சொற்பொழிவுகளுக்கு ஏற்ப, மத மாற்று நடவடிக்கைகள் நாடலாவிய நிலையில் தீவிரப்படுத்தப்படுமேயானால் நமது பிள்ளைகள் கூடுதல் கவனமுடன் இருப்பது அவசியமாகும்.
நிறை பேர்கள் அவருடைய உரைகளை வேதவாக்காக உள்வாங்கிக் கொண்டு அதற்கு ஏற்றவாறு செயல்படுகின்றனர். அரசாங்கத்தின் செல்லப் பிள்ளையைப் போல அவர் கருதப்படுவதால் அவருக்கு எதிராக எத்தனை புகார்கள் பதிவு செய்யப்பட்டாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
எனவே நாம்தான் இவ்விவகாரத்தில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டியுள்ளது. “கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்,” செய்வதைப் போல் இல்லாமல் வருமுன் காப்பதே சிறப்பு.