மதம் கைவிடும், இறைவன் கைவிட மாட்டான் -கி. சீலதாஸ்

மதம் உன்னைக் கைவிடும், இறைவன் கைவிட மாட்டான். ஒரு மதத்தை விட்டு வேறொரு மதத்திற்கு மாறினால், நீ புகுந்த வீட்டில் வரவேற்கப்படுவாய், போற்றப்படுவாய். ஆனால், எந்த மதத்திலிருந்து வெளியேறினாயோ அது உன்னை வெறுக்கும். உன்னைக் கைவிடும்.

ஆனால், மதங்களுக்கு இறைவன் தேவைப்படுகிறான்; இறைவனுக்கு மதம் தேவையற்றது. அதனால்தான் சொல்லுகிறேன் மனிதனான உன்னை இறைவன் கைவிட மாட்டான்.

பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்து கொண்டிருக்கும் மதப் பிரச்சினைகள் மனித குலத்தின் தீரா பகைமைக்கும், சரிவுக்கும், அழிவுக்கும் காரணியாக இருந்தது.

இன்று கூட அந்த நிலை நீடிக்கிறது என்று சொன்னால் வியப்பாக இல்லையா? மனிதர்களிடையே வெறுப்புக்கும் பகைமைக்கும் காரணமாக இருந்தது மதம். அது மாறவில்லை. அது அர்த்தமற்ற அழிவுக்கும், உயிரிழப்பிற்கும் காரணமாக இருந்தது என்பதை மறுக்க முடியுமா? முடியாது!

ஏனெனில், நிறைவேற்றப்பட்ட அட்டூழியங்களை  வரலாறு நினைவுப்படுத்துகின்றன. ஒரு சிலர் இதை மறைக்க முயலுவதும் நமக்குத் தெரியாதது அல்ல. ஒரு காலத்தில் அதாவது உலக கணினிகளுக்குடனான தொடர்பு (internet) விஞ்ஞானத்தின் அளப்பரிய முன்னேற்றம் கண்டிராத போது உண்மைகள் மறைக்கப்பட்டன. பொய்மைக்கு மகுடம் சூட்டப்பட்டது.

காலம் மாறிவிட்டது, உண்மைகள் வெளிவருகின்றன. பொய் பிரச்சாரத்தால் மக்களை ஏமாற்றிப் பிழைத்த காலத்தின் முடிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது எனவும் சொல்லலாம்.

மனிதனால் உருவாக்கப்பட்ட மதங்கள் மனிதனின் நலனில் கரிசனம் கொண்டு அவர்களின் வாழ்க்கை செழுமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொடிருந்தனவா என்ற கேள்வியை எழுப்பினால் நமக்குக் கிடைப்பது வேதனையான பதில்தான்.

தன்னை ஏற்றுக்கொள்வோரை மட்டும் பாதுகாக்கவும் அவர்களின் நல்வாழ்வில் மிகுந்த கவனம் காட்டப்பட்டதைக் காண்கிறோம்.

ஒரு மதம் ஆரம்பிக்கப்பட்டு அதன் செல்வாக்கு பரவத் தொடங்கியதும் மற்ற மதங்களை எதிர்ப்பது, பழிப்பது, குறை கூறுவது, அதை அழிக்க முற்படுவது சர்வசாதாரண நிகழ்வாகப் பரவியதைக் காண்கிறோம். இன்று கூட அந்த நிலை நீடிக்கிறது.

மதம் அறிவு வளர்ச்சிக்கும், மனிதர்களை மனிதர்களாக நடத்தும் மனப்பக்குவத்தைக் கொண்டிருக்க வேண்டும். இன்று பிற மதங்களைக் கேலி செய்வோரும், தூற்றுவோரும், குற்றப்படுத்துவோரும் ஓர் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்.

மனிதனின் வாழ்வுக்கு மிகவும் முக்கியமான தரம் பொறுமை. இந்தப் பொறுமையானது எங்கிருந்தாவது அறிவு வரும் என்பதை எதிர்பார்க்கிறது. இந்த எதிர்பார்ப்பே பொறுமை. இந்தப் பொறுமையே அறிவு – மனிதனின் அறிவு வளர்ச்சிக்கும், பிற மனித சமுதாயங்களை, அவர்களின் வாழ்க்கை முறை, மதம், கலாச்சாரம் போன்றவற்றைப் புரிந்து கொள்ள உதவுவது அறிவுடைய பொறுமை.

இந்த உண்மையை உணர்ந்த மதம் எது? பிற மதங்களை மதித்து அவை வழங்கும் செய்தி என்ன என்பதை அறிந்து கொள்ள முற்பட்டது யார்? எந்த மதம்? எல்லா மதங்களிலும் நல்ல செய்தி இருக்கும் என நம்பியது யார்? இவ்வாறு நினைத்து வாழ்ந்தவர்கள் உலக மக்களையே தங்களின் உறவினர்களாகக் கொண்டிருந்தனர் என்றால் அது மிகைப்படுத்தும் கருத்தா?

இன்று பிற மதங்களை, குறிப்பாக, பண்டைய மதங்களைக் குறை கூற முற்படுவோர் ஓர் உண்மையை உணர வேண்டும்.

மனித சமுதாயம் பலவிதமான வேறுபாடுகளைக் கொண்டிருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். வேறுபாடுகளைப் புரிந்து கொண்டு வாழ்க்கைப் படகைச் செலுத்த வேண்டும். பிரச்சினைகளைப் பெரிதுப்படுத்தாமல் பரஸ்பர நம்பிக்கையை வளர்ப்பதில்தான் நாட்டம் இருக்க வேண்டுமே அன்றி புது பிரச்சினைகளைக் கிளப்புவதில் அல்ல.

அதிகார வெறி பிடித்து அலையும் அரசியல்வாதிகளுக்குத்தான் பிரச்சினைகளைக் கிளப்புவது ஒரு தவிர்க்க முடியாத அரசியல் பழக்கம். சாதாரண மனிதர்கள் அவர்கள் விரிக்கும் வலையில் விழாமல் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

மக்கள் நிம்மதியாக, சுபிட்சமாக வாழ ஒரே பாதைதான் உண்டு. அது இருக்கும் வேறுபாடுகளுக்கு இடமளித்து எல்லோரையும் அவர்களின் வாழ்வு முறைக்கு இடமளிப்பதே.

அவர்களின் நியாயமான உரிமைகளுக்கு யாதொரு தீங்கும் ஏற்படக் கூடாது, ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இது யார் பொறுப்பு? அரசிடம் தான் இந்தப் பொறுப்பு குடி கொண்டிருக்கிறது. மத வேறுபாடுகள் இருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ளும் போது நாம் சிந்திக்கும் ஆற்றல் கொண்ட மனிதர்கள் என்பதை மறக்கக்கூடாது.

யாருடைய பொறுப்பு? என்ற கேள்வி எழும்போது நம் தலைவர்களின் பேச்சு, நடவடிக்கை, அவர்கள் தரும் உறுதிமொழிகள் நம் சிந்தையைக் கிளருகின்றன.

பெரும்பான்மையான தலைவர்கள் அடிக்கடி சொல்வது என்ன? “நாங்கள் மக்களின் நண்பர்கள்!” அவர்களுடைய பிரதான நோக்கமே மக்களின் நலனைப் பாதுகாப்பது என்பார்கள். அந்தப் பொறுப்பில் இருந்து ஒரு போதும் வழுவாது நடந்து கொள்வதாக உறுதியளிப்பார்கள்.

நலனைப் பாதுகாப்போம் என்று சொல்லுகின்ற தலைவர்கள், உண்மையிலேயே யாருடைய நலனில் அவர்களின் கவனம் பதிந்து இருக்கும்? இதுவும் ஒரு பெரிய கேள்வியே.

அதிகாரத்தைக் கைப்பற்றியத் தலைவன் தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார் என்று நம்புவது மக்களின் சூது வாது அற்ற நிலையை உணர்த்தலாம். பிரபல பிரெஞ்சு இலக்கியப் படைப்பாளர் விக்டர் ஹூகோ, இவர்களை “சொற்கள்” பொய்யர்கள்’ என்றார்.

அதிகாரத்தில் இருக்கும் நண்பர், இழக்கப்பட்ட நண்பர் என்றார் அமெரிக்க அதிபர் அதாம் ஜோன்ஸின் கொள்ளுப் பேரன்ன் ஹென்ரி அதாமஸ் (1838-1918). இன்றைய அரசியல் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்தால் மேலே குறிப்பிடப்பெற்ற விவேகமான அறிவுரைகளை மதிப்பளிக்காமல் வாழ்கிறோம் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?