இராகவன் கருப்பையா – சுமார் 16 ஆண்டுகளுக்கு முன் தன் கண் முன்னாலேயே கடத்திச் செல்லப்பட்ட தனது அன்பு மகள் பிரசன்னாவை மீட்டுக் கொடுக்குமாறு பாசப் போராட்டம் நடத்தி வரும் முன்னாள் ஆசிரியை இந்திரா காந்தியின் வாழ்வில் வசந்தம் வீசும் நாள் வெகு தூரமில்லை.
இந்திராவின் முன்னாள் கணவரான அந்த கடத்தல்காரரை கண்டுபிடிக்க முடியவில்லை என ஆண்டுக் கணக்கில் வெறுமனே சாக்குக்போக்குக் கூறி வரும் காவல்துறைக்கு சவால்விடும் வகையில் தனியார் துப்பறிவாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது இனிப்பான செய்தியாக உள்ளது.
இந்தியாவின் அனைத்துலக செய்தி நிறுவனமான ‘வியோன்'(WION) கூட இவ்விவகாரம் குறித்த விரிவான செய்தி ஒன்றை சில தினங்களுக்கு முன் வெளியிட்டு, உலகக் கண்களுக்கு இதனைக் கொண்டுச் சென்றது.
நம் சமூகத்தைச் சார்ந்த மக்கள் பிரதிநிதிகளே இவ்விவகாரத்தைக் கண்டும் காணாமல் இருக்கும் சூழலில், பேராக் மாநில கெராக்கான் கட்சியின் துணைத் தலைவரான பிரபல வழக்கறிஞர் கரன் சிங் தமது சொந்த செலவில் மேற்கொண்டுள்ள இந்த முன்னெடுப்பு வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
தாயும் சேயும் ஒன்று சேர முடியாத அளவுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சமய ஆதிக்கத்திற்கு அடிபணிந்துதான் காவல்துறையினர் மெத்தனமாக இருக்கின்றனர் என்று பேசப்படுகிறது.
இந்நிலையில் தனியார் துப்பறிவாளரின் நியமனம் இவ்விவகாரத்தில் மிகவும் முக்கியமானதொரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது என்பதில் ஐயமில்லை.
கடத்தப்படும் போது கைக்குழந்தையாக இருந்த பிரசன்னாவுக்கு தற்பொழுது 17 வயதாகிறது. அவரைக் காண்பதற்கு இந்திரா தினமும் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்.
அவர் எங்கு கடத்தி வைக்கப்பட்டுள்ளார் என தனியார் துப்பறிவாளர் கண்டுபிடித்துவிட்டால், நமது காவல்துறையின் கையாலாகாத்தனத்தை அப்பட்டமாக அது பிரதிபலித்துவிடும்.
எனவே காவல்துறையினர் இனிமேலும் காரணங்களைக் காட்டி நழுவ முடியாத அளவுக்கு இவ்விவகாரம் ஒரு நெருக்கடியான நிலையை எட்டியுள்ளதாகத் தெரிகிறது.
இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறுத் தடயங்களையும் ஆதாரங்களையும் முன் வைத்த போதிலும் காவல்துறையினர் கொஞ்சமும் அவற்றை பொருட்படுத்தவில்லை என்பது எல்லாருக்கும் தெரியும்.
ஆகக் கடைசியாக, மடானி அரசாங்கத்தின் 100 ரிங்கிட் உதவித் திட்டத்தையும் பெட்ரோல் விலை கழிவு உதவித் திட்டத்தையும் அந்நபர் பயன்படுத்தியுள்ளதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இருந்த போதிலும் அந்நபரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிடும் முன்னரே சாக்குப் போக்குக் கூற முற்பட்ட காவல்துறை தலைவரின் போக்கை வழக்கறிஞர்கள் கடுமையாகச் சாடினார்கள்.
தேடப்படும் நபரின் அடையாள அட்டையை வேறொருவர் பயன்படுத்தி அந்த அனுகூலங்களைப் பெற்றிருக்கக் கூடும் என்று கூறிய அவர் மீது பொது மக்களும் கூட சினம் கொண்டுள்ளனர்.
பிரசன்னா இருக்கும் இடத்தை தனியார் துப்பறிவாளர் கண்டுபிடித்துவிட்டால் நமது காவல்துறைக்கு அதைவிட பெருத்த அவமானம் வேறொன்றும் இருக்க வாய்ப்பில்லை.
எனவே இனிமேலும் அவர்கள் கேலிக் கூத்துக்கு இடமளிக்காமல், உண்மையாகவே களமிறங்கி இவ்விவகாரத்திற்கு ஒரு நிரந்தரத் தீர்வு பிறக்க வகை செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

























