மறைக்கப்பட்ட வாகனப் பதிவு எண்ணுடன் RON95 ரக பெட்ரோல் நிரப்பிய சிங்கப்பூர் நிரந்தரவாசிக்கு ரிம 9,000 அபராதம்.

தனது காரில் மானிய விலையில் RON95 பெட்ரோல் நிரப்பி, வாகன எண் தகட்டை மறைத்த சிங்கப்பூர் நிரந்தர குடியிருப்பாளருக்கு கூலாய் குற்றவியல் நீதிமன்றம் 9,000 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.

நீதிபதி ஆர் சாலினி முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பிறகு, தனது காருக்குச் சொந்தமில்லாத வாகனப் பதிவுத் தகட்டைக் காட்டியதற்காக 64 வயதான லாங் சா கோவ் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்தது.

அபராதத்தை செலுத்தத் தவறினால் அவர் ஒன்பது மாத சிறைத்தண்டனை பெறுவார்.

ஜனவரி 2 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் கூலாயில் உள்ள ஜாலான் ஜொகூர் பாரு-அயர் ஹிட்டாம், பத்து 21 1/4 இல் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் இந்தக் குற்றத்தைச் செய்ததாக லாங் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 108(3)(e) இன் கீழ் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 20,000 ரிங்கிட் அபராதம், ஐந்து ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

தேசிய சட்ட உதவி அறக்கட்டளையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷர்மைன் பைரூஸ் சுல்கிப்லி, குற்றவாளிக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரினார், அவர் தனது குடும்பத்தின் வருமானம் ஈட்டுபவர் ஆனால் அவருக்கு நிலையான வருமானம் இல்லை என்று கூறினார்.

தனது கட்சிக்காரருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர், அவர்களில் இருவர் இன்னும் பள்ளியில் படித்து வருகின்றனர், மேலும் இது அவரது முதல் குற்றம்.

துணை அரசு வழக்கறிஞர் எஸ். திவியா, மற்றவர்கள் இந்தக் குற்றத்தைச் செய்வதற்கு எதிராக எச்சரிக்கும் ஒரு பொருத்தமான தண்டனையை விதிக்குமாறு நீதிமன்றத்தைக் கோரினார்.

-fmt