பன்றிப் பண்ணைகளைப் புக்கிட் தாகருக்கு மாற்றுவது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உள்ளூர் ஹுலு சிலாங்கூர் தலைவர் ஒருவர், தொகுதி அதன் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்துச் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்.
பக்காத்தான் ஹராப்பான் ஹுலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் கூறுகையில், சிலாங்கூர் மாநிலத்தின் பன்றி வளர்ப்புத் தொழிலை மையப்படுத்துவதற்கான மாநில அரசின் முயற்சியைத் தாம் மதிக்கிறார் என்றாலும், அந்தப் பகுதியில் ஒரு மருத்துவமனையை நிறுவுவது மிகவும் முக்கியமானது என்றார்.
“புக்கிட் தாகர் தொடர்பாக மாநில அரசின் முடிவை நான் மதிக்கிறேன். இருப்பினும், ஹுலு சிலாங்கூரில் மிக முக்கியமான பிரச்சினை ஒரு மருத்துவமனையைக் கட்டுவதுதான்”.
“சுகாதார சேவையை நெருக்கமாகவும் திறமையாகவும் அணுகுவதற்காகத் தொகுதி மக்கள் நீண்ட காலமாக ஏங்கி வருகின்றனர். அதுதான் இங்கு மிகவும் அவசரமான தேவை,” என்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
ஹுலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் குவாலா லங்காட்டின் தஞ்சோங் செபாட்டிலிருந்து சுமார் 130 கிமீ தொலைவில் உள்ள புக்கிட் தாகருக்கு பன்றிப் பண்ணைகளை இடமாற்றம் செய்யச் சிலாங்கூர் மாநில அரசாங்கம் முடிவு செய்ததை அடுத்து சத்தியாவின் கருத்து வந்தது.
சிலாங்கூர் மாநில நிர்வாகக் கவுன்சிலர் இஷாம் ஹாஷிம் விளக்கியது, புக்கிட் தாகர் அதன் தொலைதூர இடம், குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெகுதொலைவில் இருப்பது மற்றும் ஒரு குப்பைக் கிடங்கிற்கு அருகாமையில் இருப்பதால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கோலா லங்காட்டில் வசிப்பவர்களை நீண்ட காலமாகப் பாதித்து வந்த துர்நாற்றம், ஈத்தொல்லை மற்றும் நதி மாசுபாடு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஜனவரி 10 ஆம் தேதி, சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா, மோசமான பண்ணை நிர்வாகத்தால் பாதிக்கப்பட்டுள்ள கோலா லங்காட் குடியிருப்பாளர்களின் நல்வாழ்வு குறித்து தனது கவலைகளை வெளிப்படுத்தி, இடமாற்றத் திட்டத்திற்கு தனது ஒப்புதலை வழங்கினார்.
தஞ்சோங் செபாட்டில் செயல்பாடுகள் படிப்படியாக நிறுத்தப்பட்டு, பொது நிதியைப் பயன்படுத்தாமல் புக்கிட் தாகரில் உள்ள ஒரு நவீன, உயர் தொழில்நுட்ப விவசாய மையத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்று சுல்தான் ஆணையிட்டார்.
புதிய இடத்தில் விவசாயம் செய்வது சிலாங்கூரில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களின் நுகர்வுக்காக மட்டுமே இருக்க வேண்டும், ஏற்றுமதி நோக்கங்களுக்காக அல்ல என்றும் சுல்தான் ஷராபுதீன் வலியுறுத்தினார்.
‘ஒரே ஒரு மருத்துவமனை கூட இல்லை’
ஹுலு சிலாங்கூர் பிகேஆர் பிரிவுத் தலைவரான சத்தியா மேலும் கூறுகையில், 300,000 க்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்டிருந்தாலும், ஹுலு சிலாங்கூர் உள்ளூர்வாசிகள் மருத்துவ சிகிச்சை பெற மாவட்ட எல்லைகளைத் தாண்டிப் பயணிக்க வேண்டியுள்ளது.
இந்தப் பகுதியில் பொது மருத்துவமனை இல்லாததால், அவசரநிலை ஏற்பட்டால், குடியிருப்பாளர்கள் சுங்கை பூலோ மருத்துவமனை, செலாயாங் மருத்துவமனை அல்லது பேராக்கில் உள்ள ஸ்லிம் ரிவர் மருத்துவமனைக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
“உலு சிலாங்கூர் தொகுதி மிகப்பெரியது. உண்மையில், இது முழு மலாக்காவையும் விடப் பெரியது.”
“ஒப்பிடுகையில், மலாக்காவில் மூன்று அரசு மருத்துவமனைகள் உள்ளன, ஆனால் ஹுலு சிலாங்கூர், அதன் அளவு இருந்தபோதிலும், இன்னும் ஒரு சொந்த மருத்துவமனை கூட இல்லை”.
“தற்போது அவசர சிகிச்சை பெற தேவையான தூரம் உண்மையில் மிக அதிகம்,” என்று அவர் கூறினார், இந்த இடங்கள் சுமார் 45 நிமிட பயண நேரத்தை உள்ளடக்கியது என்று குறிப்பிட்டார்.
ஹுலு சிலாங்கூர் குடியிருப்பாளர்கள், தொகுதியின் அளவைக் கருத்தில் கொண்டு, தொழில்துறை தேவைகளையும், சுகாதார வசதிகளை அணுகுவதற்கான மக்களின் உரிமையையும் சமநிலைப்படுத்தும் ஒரு நியாயமான முடிவை மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் எடுக்கும் என்று நம்புவதாக அவர் மேலும் கூறினார்.

























