இலங்கை இனப் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணும் விடயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து பணியாற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தலைமையமைச்சர் பணிமனை வட்டாரம் தெரிவிக்கிறது.
இந்தியா சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளின்டனுக்கும் இந்திய தலைமையமைச்சர் மன்மோகன் சிங்குக்கும் இடையே நடை பெற்ற சந்திப்பின்போது இந்த முடிவு எட்டப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் இலங்கை இனப் பிரச்னை விடயத்தில் இனிவரும் காலங்களில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவதன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நீதியான தீர்வு கிடைப்பதற்கு வழி ஏற்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இனப் பிரச்னைத் தீர்வுக்கான பேச்சுகளைத் துரிதப்படுத்துவதற்கும் தமிழ் அரசியல் கட்சிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வருவது குறித்து பொது நிலைப்பாடு ஒன்றை எடுப்பதற்கும் இருநாட்டுத் தலைவர்களும் இணங்கியுள்ளனர்.
மன்மோகனுடனான சந்திப்பின்போது இலங்கை இனப்பிரச்னை விடயம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் அதிக அக்கறை காட்டியதாகவும் அந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.